ஆரம்ப விலை ரூ. 8.99லட்சம் மட்டுமேவா! விலை சொல்றதுக்கு முன்னாடியே புக்கிங்கை குவித்த காருக்கு இவ்ளோ கம்மிவிலையா
கியா (Kia) நிறுவனம் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சிரோஸ் (Syros) கார் மாடலை அதிகாரப்பூர்வமாக இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. இதன் விலைகளை அறிவித்தே அதிகாரப்பூர்வ அறிமுகப்படுத்தலை நிறுவனம் நிகழ்த்தி இருக்கின்றது. பிரீமியம் லுக் கொண்ட இந்த காருக்கு நிறுவனம் ரூ. 8.99 லட்சம் என்கிற குறைவான விலையே நிர்ணயம் செய்திருக்கின்றது. இது ஆரம்ப விலை மட்டுமே ஆகும். அதேபோல், இது எக்ஸ்-ஷோரூம் விலை ஆகும். இந்த காரின் பிரீமியம் தோற்றத்திற்கு அதன் டால் பாய் ஸ்டைலும், அலங்கரிப்பு செய்திருக்கும் விதமே காரணமாக அமைந்திருக்கின்றது.
அதேவேளையில், இந்த கார் மாடலை தன்னுடைய புகழ்பெற்ற இவி9 மற்றும் கார்னிவல் ஆகிய கார் மாடல்களைத் தழுவியே கியா நிறுவனம் வடிவமைத்திருக்கின்றது. இது ஓர் மிட் மற்றும் காம்பேக்ட் எஸ்யூவி ரக கார் மாடல் ஆகும். சொகுசு கார்களில் வழங்கப்பட கூடிய அம்சங்கள் பலவற்றை இந்த காரில் மிக தாராள மனதுடன் கியா வழங்கி இருக்கின்றது.

இதேபோல், ஸ்மார்ட் இணைப்பு வசதியையும் இந்த காரில் அவர்கள் வழங்கி இருக்கின்றனர். ஓடிஏ சாஃப்ட்வேர் அப்டேட் சிஸ்டம்-கூட இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றது. இதன் வாயிலாக டீலர்களிடம் செல்லாமலேயே 16 விதமான கன்ட்ரோல்களை அப்டேட் செய்துக் கொள்ள முடியும். இதுமட்டுமில்லைங்க, பிரீமியம் அம்சங்களையும் மிக மிக தாராளமாக இந்த காரில் கியா வழங்கி இருக்கின்றது.
அந்தவகையில், 30 அங்குல நீள பனோரமிக் திரை ஒன்று இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கும். இந்த திரையே க்ளைமேட் கன்ட்ரோல், இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் டிரைவருக்கான திரை ஆகியவையாக செயல்படும். வயர்லெஸ் ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ ஆகிய இணைப்பு வசதிகளைத் தாங்கிய திரையே இதுவாகும்.
இத்துடன், சவுண்டு சிஸ்டத்தைக் கன்ட்ரோல் செய்வதற்கான வசதிகளும் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது. 8 ஸ்பீக்கர்களுடன் கூடிய ஹர்மேன் கர்டோன் பிரீமியம் சவுண்டு சிஸ்டமே இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றது. தொடர்ந்து, சாய்த்தல், நகர்த்தல் மற்றும் 60:40 அளவில் மடித்துக் கொள்ளும் வசதிக் கொண்ட பின் பக்க இருக்கை, டூயல் பேன் பனோரமிக் சன்ரூஃப் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.
இத்துடன், லெவல் 2 வகை அட்வான்ஸ்டு டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) அம்சமும் கியா சிரோஸ் காரில் வழங்கப்பட்டு உள்ளது. இதன் வாயிலாக 16க்கும் மேற்பட்ட தன்னாட்சி அம்சங்களைப் பெற்றுக் கொள்ள முடியும். ஸ்டாப் மற்றும் கோ வசதியுடன் கூடிய ஸ்மார்ட் க்ரூஸ் கன்ட்ரோல், முன் பக்க மோதலை தவிர்க்கும் வசதி உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கின்றன.
மேலும், லேன் கீப் அசிஸ்ட் மற்றும் பாதையைக் கடைபிடிக்கும் அம்சம், பிளைன்டு வியூ மானிட்டருடன் கூடிய 360 டிகிரி பார்வை திறன் கொண்ட கேமிரா, எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் மற்றும் ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் கன்ட்ரோல் போன்ற அம்சங்களையும் இந்த காரில் வழங்கி இருக்கின்றனர். இதுதவிர ஆறு ஏர் பேக்குகள் மற்றும் ஏபிஎஸ்-ம் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன.
எஞ்சினைப் பொருத்த வரை இந்த காரில் பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டு ஆப்ஷன்களும் வழங்கப்படுகின்றன. 120 பிஎஸ் மற்றும் 172 என்எம் டார்க் ஆற்றலை உருவாக்கும் திறன் கொண்ட ஸ்மார்ட் ஸ்ட்ரீம் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சினும், 116 பிஎஸ் மற்றும் 250 என்எம் டார்க் ஆற்றலை உருவாக்கும் திறன் கொண்ட 1.5 லிட்டர் சிஆர்டிஐ டீசல் எஞ்சினுமே இந்த காரில் ஆப்ஷனாகக் கிடைக்கின்றது.
கியா சிரோஸ் எஸ்யூவி காரை இந்தியாவில் நான்கு விதமான வேரியண்டுகளில் வாங்கிக் கொள்ள முடியும். எச்டிகே (HTK), எச்டிகே பிளஸ் (HTK+), எச்டிஎக்ஸ் (HTX) மற்றும் எச்டிஎக்ஸ் பிளஸ் (HTX+) ஆகியவையே அவை ஆகும். நிற தேர்வை பொருத்த வரை எட்டு விதமான ஆப்ஷன்கள் இந்த காரில் கிடைக்கும்.
கிளாசியர் ஒயிட் பேர்ல், ஸ்பார்க்ளிங் சில்வர், பியூடர் ஓலிவ், இன்டென்ஸ் ரெட், ஃப்ரோஸ்ட் ரெட், ஃப்ரோஸ்ட் ப்ளூ, அரோரா பிளாக் பேர்ல், இம்பீரியல் ப்ளூ மற்றும் கிராவிட்டி கிரே ஆகியவையே அந்த நிற தேர்வுகள் ஆகும். அனைத்து பிரீமியம் லுக்கை வழங்கக் கூடிய நிற தேர்வுகள் ஆகும்.
இந்த கார் மாடலின் ஆரம்ப விலையே ரூ. 8.99 லட்சம் ஆகும். அதிகபட்ச விலை ரூ. 17.80 லட்சம். இந்தியாவில் இந்த காருக்கு இப்போது நல்ல வரவேற்புக் கிடைக்கத் தொடங்கி இருக்கின்றது. இதை உறுதிப்படுத்தும் விதமாக விலைகள் அறிவிக்கும் முன்னரே இந்த காருக்கு 10 ஆயிரத்திற்கும் அதிகமான புக்கிங்குகள் கிடைத்திருக்கின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்திய எஸ்யூவி கார் பிரியர்களை வளைத்துப் போடும் நோக்கிலேயே இந்த காரை கியா நிறுவனம் நாட்டில் விற்பனைக்குக் களமிறக்கி இருக்கின்றது. இதில் இட வசதிக்கு சற்றும் குறைச்சல் இருக்காது என்பது கவனிக்கத்தகுந்தது. குறிப்பாக, உயரமானவர்களுக்கும் ஏற்ற காராக இது இருக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது. அதாவது, மாருதி வேகன்ஆர் காரை போல இது அதிக இட வசதியை உயரமானவர்களுக்கும் வழங்கும்.


Click it and Unblock the Notifications








