ஜனவரியில் ஒருத்தரும் வாங்காத எலக்ட்ரிக் காரில் இப்படியொரு பிரச்சனையா? ஷோரூமில் கொண்டுபோய் விட வேண்டியதுதான்
கியா (Kia) நிறுவனத்தில் இருந்து இந்தியாவில் விற்பனை செய்யப்படும் விலை குறைவான எலக்ட்ரிக் கார், இவி6 (EV6) ஆகும். ஆனால் அதற்காக இவி6 எலக்ட்ரிக் காரின் விலையை ரூ.10 லட்சம் என்கிற அளவில் எதிர்பார்க்க வேண்டாம். ஏனெனில், இதன் எக்ஸ்-ஷோரூம் விலை சுமார் ரூ.60.97 லட்சத்தில் இருந்து ரூ.65.97 லட்சம் வரையில் தற்சமயம் உள்ளது. இந்த அளவிற்கு விலைமிக்க காரில் புதியதாக ஒரு அப்டேட்டை வழங்குவதற்காக, இந்தியாவில் இவி6 எலக்ட்ரிக் காரை வாங்கியவர்களை மீண்டும் காரை ஷோரூமுக்கு கொண்டுவர கியா அறிவுறுத்தி உள்ளது.
தென்கொரியாவை சேர்ந்த கியா நிறுவனம் கடந்த 2025 ஜனவரி மாதத்தில் மொத்தம் 19 ஆயிரத்து 479 கார்களை இந்தியாவில் விற்பனை செய்துள்ளது. ஆனால், இதில் ஒரு இவி6 எலக்ட்ரிக் கார் கூட இல்லை. ஏனெனில், கடந்த மாதத்தில் ஒரு இவி6 காரை கூட எந்தவொரு கஸ்டமரும் வாங்கவில்லை.

கடந்த ஆண்டு தீபாவளி சமயத்தில், ஒரே மாதத்தில் 68 இவி6 எலக்ட்ரிக் கார்கள் விற்பனை செய்யப்பட்டதுதான் அதிகப்பட்சமாக உள்ளது. இந்த அளவிற்கு இந்தியாவில் மிகவும் குறைவான எண்ணிக்கையிலான கஸ்டமர்களால் மட்டுமே வாங்கப்படும் இந்த எலக்ட்ரிக் காரில் புதியதாக ஒரு மென்பொருள் அப்டேட் (Software Update)-ஐ வழங்க கியா தயாராகி வருகிறது.
இதற்காக குறிப்பிட்ட எண்ணிக்கையிலான இவி6 எலக்ட்ரிக் கார்கள் திரும்ப அழைக்கப்படுகின்றன. அதாவது, இதுவரையில் உற்பத்தி செய்யப்பட்ட அனைத்து இவி6 எலக்ட்ரிக் கார்களும் அழைக்கப்படவில்லை. 2022 மார்ச் 3 முதல் 2023 ஏப்ரல் 14 வரையில் உற்பத்தி செய்யப்பட்ட 1380 இவி6 எலக்ட்ரிக் கார்கள் அப்டேட்டை பெறுவதற்காக திரும்ப அழைக்கப்படுகின்றன.

கியா இவி6 எலக்ட்ரிக் காரில் மென்பொருள் அப்டேட் ஆனது காருடன் சார்ஜிங் கண்ட்ரோல் யூனிட் (Charging Control Unit)-ஐ ஒருங்கிணைக்கும் விதமாக வழங்கப்பட உள்ளது. இதன் மூலமாக, இந்த காரில் 12 வோல்ட் திறனில் வழங்கப்படும் துணை பேட்டரியின் திறன் மேம்படும் என கியா தெரிவிக்கிறது.
2022 மார்ச் 3 - 2023 ஏப்ரல் 14 காலக்கட்டத்தில் உற்பத்தி செய்யப்பட்ட இவி6 எலக்ட்ரிக் கார்களில் 12 வோல்ட் துணை பேட்டரியின் செயல்பாடு திருப்திக்கரமானதாக இல்லை என்பது தெரியவந்ததை அடுத்து இவ்வாறான சாஃப்ட்வேர் அப்டேட்டை வழங்கும் முடிவில் கியா இறங்கியுள்ளது. இதனால், மேற்கூறப்பட்ட காலக்கட்டத்தில் உருவாக்கப்பட்ட இவி6 எலக்ட்ரிக் கார்களை வாங்கிய கஸ்டமர்களை தொடர்பு கொண்டு காரை கொண்டுவர அழைக்கும் பணியில் கியா டீலர்ஷிப் ஷோரூம் அதிகாரிகள் ஈடுப்பட துவங்கியுள்ளனர்.

இந்த காலக்கட்டத்தில் உருவாக்கப்பட்ட இவி6 எலக்ட்ரிக் கார்களில் 12 வோல்ட் துணை பேட்டரியை சார்ஜ் செய்வதில் பிரச்சனை உள்ளதாக கடந்த 2024 ஜூலை மாதத்தில் கூட சுமார் 1,138 இவி6 கார்களை கியா திரும்ப அழைத்திருந்தது. அந்த சமயத்தில் இந்தியாவில் மட்டுமின்றி உலகளவில் பல நாடுகளில் விற்பனை செய்யப்பட்ட ஆயிரக்கணக்கிலான கியா இவி6 எலக்ட்ரிக் கார்கள் திரும்ப அழைக்கப்பட்டன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இவி6 எலக்ட்ரிக் காரில் இந்த சார்ஜ் பிரச்சனை ஆனது கிட்டத்தட்ட கடந்த 2 வருடங்களாகவே கியா நிறுவனத்துக்கு உலகளவில் பெரும் தலைவலியாக இருந்து வருகிறது. இந்த பிரச்சனைக்கு சாஃப்ட்வேர் அப்டேட் தான் ஒரே வழி என்பதை உணர்ந்து தற்போது அத்தகைய அப்டேட்டை வழங்க கியா நிறுவனம் தயாராகி உள்ளது.


Click it and Unblock the Notifications









