தகர டப்பானு நினைச்சுட்டீங்களா! குழந்தைங்க, பெரியவங்க யாரா இருந்தாலும் போர் வீரனை போல நின்னு பாதுகாக்கும்..
இந்தியர்களின் பிரியமான கார் பிராண்டாக மாறியிருக்கும் கியா (Kia)-வின் சமீபத்திய வெளியீடாக சைரோஸ் (Syros) கார் மாடல் உள்ளது. இது ஓர் உயரமான உருவ அமைப்பைக் கொண்ட எஸ்யூவி (SUV) ரக கார் மாடல் ஆகும். அதாவது, மாருதி சுஸுகி வேகன்ஆர் கார் மாடலை போல டால்பாய் காராக இதனை கியா நிறுவனம் தயார் செய்திருக்கின்றது. இந்த காரே பாதுகாப்பான பயணங்களுக்கு உகந்த வாகனம் என்பது தற்போது தெரிய வந்திருக்கின்றது. இந்த தகவலை பாரத் என்சிஏபி (Bharat NCAP)-யும் உறுதிப்படுத்தி இருக்கின்றது.
சமீபத்தில், பாரத் என்சிஏபி இந்த கார் மாடலை மோதல் ஆய்விற்கு உட்படுத்தியிருக்கின்றது. பாதுகாப்பு திறனை ஆராயும் விதமாக மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில் மிக சிறப்பாக சைரோஸ் செயல்பட்டு இருக்கின்றது. இதன் அடிப்படையிலேயே அந்த காருக்கு ஐந்துக்கு ஐந்து ஸ்டார்களை பெருமிதத்துடன் வாரி வழங்கி இருக்கின்றது, கியா நிறுவனம்.

இதன் வாயிலாக இந்தியாவில் தற்போது விற்பனைக்குக் கிடைக்கும் 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங் கார் மாடல்களில் சைரோஸ்-ம் இணைந்து இருக்கின்றது. பெரியவர்களுக்கு மட்டுமல்ல சிறியவர்களுக்கும் இது அதிக பாதுகாப்பை வழங்கும் என்றே பாரத் என்சிஏபி வெளியிட்டு இருக்கும் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டும் என்றால் பெரியவர்களுக்கான பாதுகாப்பு விஷயத்தில் 32 புள்ளிகளுக்கு 30.21 புள்ளிகளையும், சிறுவர்களுக்கான பாதுகாப்பு விஷயத்தில் 49 புள்ளிகளுக்கு 44.42 புள்ளிகளையும் அது பெற்றிருக்கின்றது. இதன் வாயிலாக பெரியவர்கள், சிறியவர்கள் என அனைவருக்குமான காராக சிரோஸ் உருவாகி இருப்பது தெரிய வந்திருக்கின்றது.

சிரோஸ் கார் மாடலில் பயணிகளுக்கு அதீத பாதுகாப்பை வழங்க வேண்டும் என்பதற்காக ஏகப்பட்ட பாதுகாப்பு அம்சங்களை கியா நிறுவனம் வாரி வழங்கி இருக்கின்றது. 16 தன்னாட்சி வசதிக் கொண்ட பாதுகாப்பு அம்சங்களை, லெவல் 2 அடாஸ் அம்சத்துடன் இதில் வழங்கி இருக்கின்றனர்.
இந்த மாதிரியான அம்சங்களே சிரோஸ் கார் மாடலை அதிக மதிப்பெண்களை பாதுகாப்பு விஷயத்தில் பெற செய்திருக்கின்றது. முன்பக்க மோதலை தவிர்க்கும் வார்னிங், லேனில் இருந்து தடம் மாறுவது குறித்த எச்சரிக்கையை வழங்கும் வசதி, க்ரூஸ் கன்ட்ரோலுடன் கூடிய பிரேக்கிங் மற்றும் புறப்படும் வசதிகளையே தன்னாட்சி தொழில்நுட்பத்தின் வாயிலாக இந்த காரில் வழங்கி இருக்கின்றனர்.
இதுமட்டுமல்ல பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதமாக ஆறு ஏர் பேக்குகள், பின் மற்றும் பக்கவாட்டு பகுதிகளில் பார்க்கிங் சென்சார்கள், இபிடி உடன் கூடிய ஏபிஎஸ், டிராக்சன் கன்ட்ரோல், 360 டிகிரி பார்வை திறன் கொண்ட கேமிரா போன்ற அம்சங்களையும் இந்த காரில் கியா வழங்கி இருக்கின்றது.
இத்துடன், கூடுதலாக நான்கு வீல்களிலும் டிஸ்க் பிரேக்குகள், சிறுவர்களுக்கான ஐசோஃபிக்ஸ் இருக்கை ஆங்கர் பாயிண்டுகள், க்ரூஸ் கன்ட்ரோல், ஆட்டோ ஹோல்ட் வசதியுடன் கூடிய எலெக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் போன்றவற்றையும் சிரோஸ் காரில் வழங்கி இருக்கின்றனர். இந்த அம்சங்களினாலேயே பாதுகாப்பு விஷயத்தில் அது நம்ப முடியாத தர புள்ளிகளைப் பெற்றிருக்கின்றது.

பாதுகாப்பு விஷயத்தில் மட்டுமல்ல பிரீமியம் அம்சங்களைத் தாங்கி இருப்பதிலும் சிரோஸ் கார் மிக சிறந்த வாகனமாகக் காட்சியளிக்கின்றது. மூன்று திரைகளின் தொகுப்பைத் தாங்கிய 30 அங்குல ஒரே நீள திரை இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றது. டிரைவருக்கான திரை, இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் க்ளைமேட் கன்ட்ரோல் என அனைத்தும் இதிலேயே இடம் பெற்றிருக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது.
இதில் இடம் பெற்றிருக்கும் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் கியா-வின் கார் இணைப்பு வசதி, வயர் இணைப்பு தேவைப்படாத ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே இணைப்பு ஆகிய வசதிகளைத் தாங்கியதாக இருக்கின்றது. இதைமட்டுமல்ல 8 ஸ்பீக்கர்களைக் கொண்ட ஹர்மேன் கர்டோன் பிரீமியம் சவுண்டு சிஸ்டம், சொகுசான இருக்கைகள் உள்ளிட்டவற்றையும் கியா சிரோஸ் தன்னுள் தாங்கி இருக்கின்றது.
இதுமட்டுமின்றி பின்னிருக்கையாளர்களுக்கும் இந்த காரில் வென்டிலேஷன் வசதி வழங்கப்பட்டு இருக்கை வழங்கப்பட்டு இருக்கின்றது. இந்த கார் உயரமான உருவ அமைப்பைக் கொண்டிருப்பதால் உயரமானவர்களாலும் தாராளமாக அமர்ந்து பயணிக்க முடியும். இந்த பயணத்தை கூடுதல் பிரீமியமானதாக மாற்றும் பொருட்டு பனோரமிக் சன்ரூஃப், கோப்பை தாங்கிகள், வயர்லெஸ் செல்போன் சார்ஜர், பின்னிருக்கையாளர்களுக்கான மறைப்பான்கள், ஸ்மார்ட் ஏர் ப்யூரிஃபையர், 64 வண்ணங்கள் உள்ளடக்கிய ஆம்பியன்ட் லைட் மற்றும் யுஎஸ்பி 'சி' டைப் சார்ஜிங் போர்ட் போன்றவற்றையும் சிரோஸ் காரில் வழங்கி இருக்கின்றனர்.
இதுமாதிரியான அம்சங்களினாலேயே இந்த காருக்கு இந்தியாவில் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. விற்பனைக்கு வந்த மூன்று மாதங்களிலேயே 16 ஆயிரத்திற்கும் அதிகமான யூனிட்டுகளைக் கடந்து அது விற்பனையாகிக் கொண்டிருக்கின்றது. இந்த நிலையிலேயே இந்த கார் அதிக பாதுகாப்பான வாகனம் என்பது இப்போது தெரிய வந்திருக்கின்றது.
இந்த காரின் விற்பனையை மேலும் பூஸ்ட் செய்யும் விதமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. எஞ்சினைப் பொருத்த வரை கியா சிரோஸ் எஸ்யூவி கார் மாடலில் இரண்டு விதமான ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டர்போ டீசல் ஆகியவையே அவை ஆகும்.
இதில் டர்போ பெட்ரோல் மோட்டார் 118 பிஎச்பி மற்றும் 172 என்எம் டார்க் ஆற்றலை உருவாக்கும் திறன் கொண்டது என்பது கவனிக்கத்தகுந்தது. இந்த மோட்டாரில் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 7 ஸ்பீடு டிசிடி கியர்பாக்ஸ் ஆப்ஷனே வழங்கப்படுகின்றது. இதேபோல், டர்போ டீசல் மோட்டார் இரண்து விதமான கியர்பாக்ஸ் ஆப்ஷன் வழங்கப்படுகின்றன.
6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆகியவையே அவை ஆகும். இந்த மோட்டார் அதிகபட்சமாக 114 பிஎச்பி மற்றும் 250 என்எம் டார்க் ஆற்றலை உருவாக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது. எனவே சிரோஸ் கார் மாடலின் இரண்டு மோட்டார் ஆப்ஷன்களும் திறனை வெளிப்படுத்தும் விஷயத்தில் மிக சிறந்ததாக இருக்கும் என தெரிகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: கியா சிரோஸ் கார் மாடல் ஐந்து ஸ்டார்கள் பாதுகாப்பு ரேட்டிங்கைப் பெற்றிருப்பது கியா கார் காதலர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைந்திருக்கின்றது. குறிப்பாக, இந்த கார் ஓர் போர் வீரனைபோல நின்று பயணிகளுக்கு விபத்தின்போது பாதுகாப்பை வழங்கும் என தெரிகின்றது. ஆகையால், வரும் நாட்களில் விற்பனையில் இது இரட்டிப்பான வளர்ச்சியைக் காணும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஏற்கனவே இந்த கார் மாடலுக்கு நாட்டு மக்கள் மத்தியில் மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருப்பது குறிப்பிடத்தகுந்தது.


Click it and Unblock the Notifications









