இந்த ரேட்ல எலெக்ட்ரிக் காரை களமிறக்க போறாங்களா... எழுதி வெச்சுக்கோங்க... டாடாவுக்கு ஆப்பு வைக்க போகுது...
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள கார்களில் ஒன்று கியா சைரோஸ் (Kia Syros). இந்த கார் வரும் பிப்ரவரி 1ம் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. இதற்கு இன்னும் ஒரு சில நாட்களே உள்ள நிலையில், கியா சைரோஸ் காரின் உற்பத்தி பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. அத்துடன் நாடு முழுவதும் உள்ள கியா நிறுவன டீலர்ஷிப்களுக்கு, சைரோஸ் கார்களை அனுப்பி வைக்கும் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த காரின் ஆரம்ப விலை அனேகமாக 9-10 லட்ச ரூபாய் என்ற அளவில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலை 15-16 லட்ச ரூபாய் என்ற அளவில் நிர்ணயம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இவை எதிர்பார்க்கப்படும் எக்ஸ்-ஷோரூம் விலை ஆகும். விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் நாளில்தான், கியா சைரோஸ் காரின் அதிகாரப்பூர்வமான விலை எவ்வளவு? என்பது தெரிய வரும்.

வரும் பிப்ரவரி 1ம் தேதி கியா சைரோஸ் காரின் ஐசி இன்ஜின் வெர்ஷன் மட்டுமே விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுகிறது. ஆனால் கூடிய விரைவில் கியா சைரோஸ் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அனேகமாக வரும் அடுத்த ஆண்டு (2026) தொடக்கத்திலேயே கியா சைரோஸ் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷன் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. கியா சைரோஸ் எலெக்ட்ரிக் காரை பற்றிய போதுமான தகவல்கள் எதுவும் தற்போதைக்கு வெளியாகிவில்லை. இருப்பினும் K1 பிளாட்பார்ம் அடிப்படையில் இந்த எலெக்ட்ரிக் கார் உருவாக்கப்படவுள்ளது.

லெவல் 2 அடாஸ், 360 டிகிரி கேமரா, பனரோமிக் சன்ரூஃப் என ஏகப்பட்ட வசதிகளை கியா சைரோஸ் காரில் நாம் எதிர்பார்க்கலாம். கியா சைரோஸ் இவி எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப விலை அனேகமாக 15 லட்ச ரூபாய் என்ற அளவிலும், டாப் வேரியண்ட்டின் விலை 20 லட்ச ரூபாய் என்ற அளவிலும் நிர்ணயம் செய்யப்படலாம்.
இந்திய சந்தையில் டாடா நெக்ஸான் இவி (Tata Nexon EV) போன்ற எலெக்ட்ரிக் கார்களுடன், கியா சைரோஸ் இவி எலெக்ட்ரிக் கார் போட்டியிடும். சரியான விலை நிர்ணயம் செய்யப்பட்டால், கியா சைரோஸ் இவி எலெக்ட்ரிக் கார் இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறுவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கவே செய்கின்றன.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் ஐசி இன்ஜின் கார்களின் எலெக்ட்ரிக் வெர்ஷன்களை விற்பனைக்கு அறிமுகம் செய்யும் 'டிரெண்ட்' புதிதல்ல. இது ஏற்கனவே இருக்கும் ஒரு வழக்கம்தான். அப்படி விற்பனைக்கு வந்த டாடா நெக்ஸான் இவி போன்ற எலெக்ட்ரிக் கார்கள் விற்பனையில் சாதனைகளை படைத்துள்ளன.
கியா நிறுவனமும் இதே பாணியை கையில் எடுத்துள்ளது. சைரோஸ் இவி மட்டுமல்லாது, ஏற்கனவே விற்பனையில் உள்ள கியா கேரன்ஸ் (Kia Carens) ஐசி இன்ஜின் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனும் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகி வருகின்றன.


Click it and Unblock the Notifications








