காரின் விலையை தெரிஞ்சுக்குறதுக்குள்ள ஆர்வம் தாங்கல!! ஆந்திராவில் கியா உருவாக்கும் புதிய கார் இதுதான்!
2026 கியா செல்டோஸ் (Kia Seltos) எஸ்யூவி காரின் உலகளாவிய அறிமுக நிகழ்வு இந்தியாவில் இன்று (டிசம்பர் 10) பிற்பகல் 12:30 மணிக்கு மேல் தொடங்கியது. காருக்கான முன்பதிவுகள் இன்று நள்ளிரவு முதல் துவங்கப்பட உள்ளதாகவும், முன்தொகையாக ரூ.25,000 செலுத்தி காரை முன்பதிவு செய்துக் கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில், புதிய செல்டோஸின் விலை, தொழில்நுட்ப விவரக்குறிப்புகள், மேம்படுத்தப்பட்ட வடிவமைப்பு, இரட்டைத் திரை அமைப்பு கொண்ட நவீன உட்புறம் மற்றும் என்ஜின் ஆப்ஷன்கள் குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
கியா இந்தியா நிறுவனம், புதிய தலைமுறை செல்டோஸ் எஸ்யூவி காரின் அறிமுக விழா ஹைதராபாத்தில் நடைபெறுவதாக அறிவித்ததுடன், உலகிலேயே முதன்முறையாக இந்தியாவில் இந்த கார் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் கியா நிறுவனத்தின் திட்ட மேலாண்மைத் தலைவர் சாய்கிரண் குப்பிலி, புதிய கியா செல்டோஸ் கார் குறித்த சிறப்பம்சங்களை எடுத்துரைத்தார்.

மேம்படுத்தப்பட்ட புதிய 2026 கியா செல்டோஸ் பல்வேறு மேம்பட்ட அம்சங்களுடனும், புத்துணர்ச்சியூட்டும் புதிய வடிவமைப்பிலும் வருகிறது. குறிப்பாக, காரின் முன்பகுதியில் க்ரில்லின் டிசைன், பம்பர் உள்ளிட்டவை எல்லாம் மாற்றப்பட்டு முன்பை விட முரட்டுத்தனமான தோற்றத்தில் புதிய செல்டோஸ் காட்சியளிக்கிறது. அலாய் சக்கரங்கள் 18 இன்ச்சிலும், கதவு கைப்பிடிகள் பறித்து இழுக்கக்கூடியவை ஆகவும் உள்ளன.
அதேபோல், புதிய தலைமுறை கியா செல்டோஸ் முழுமையாக மறுசீரமைக்கப்பட்ட உட்புற அமைப்பைக் கொண்டுள்ளது. இதில் புத்தம் புதிய ஸ்டீயரிங் சக்கர வடிவமைப்பு, இன்ஃபோடெயின்மென்ட் மற்றும் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டருக்கான காற்றில் மிதக்கும் எஃபெக்ட் உடன் இரட்டை-பேனல் தொடுதிரை அமைப்பு உள்ளது. கேபினுக்குள் சுற்றிலும் விளக்குகள் (ambient lighting) முக்கிய மாற்றங்களாக அமைந்துள்ளன.

இது பயணிகளுக்கு ஒரு நவீன மற்றும் ஆடம்பரமான உணர்வை வழங்குகிறது. பின்புறத்தில், 2026 செல்டோஸ் ஒரு புதிய வடிவமைப்புடன் வருகிறது. புதிதாக வடிவமைக்கப்பட்ட LED டெயில் விளக்குகள் வாகனத்திற்கு கூடுதல் கவர்ச்சியைக் கொடுக்கின்றன. மேலும், சக்கர வடிவமைப்புகளும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் செல்டோஸ் காருக்கு மேலும் உறுதியான மற்றும் நவீன தோற்றத்தை அளிக்கின்றன.
2026 கியா செல்டோஸ் பனி, சகதி மற்றும் மணல் என மூன்று டிராக்ஷன் மோட்களைக் கொண்டுள்ளது. இந்த மோட்கள், காரை ஓட்டும் சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு டிராக்ஷன் கண்ட்ரோல் (Traction Control) அமைப்புகளை மாற்றியமைக்கின்றன. இது மாறுபட்ட சாலை நிலைகளிலும் சிறந்த டிரைவிங் அனுபவத்தை உறுதி செய்கிறது. புதிய மார்னிங் ஹஸ் (Morning Haze) மற்றும் மக்மா சிவப்பு (Magma Red) என்கிற இரு புதிய கலர் ஆப்ஷன்கள் உள்பட மொத்தம் 10 சிங்கிள்-டோன் கலர் ஆப்ஷன்களில் 2026 செல்டோஸ் வழங்கப்படும் என்று கியா அறிவித்துள்ளது.
இது கருப்பு மேற்கூரை உடன் சாலைகளில் தனித்து நிற்கும். புதிய கியா செல்டோஸ் 447 லிட்டர் வரை பூட் ஸ்பேஸ் (Boot Space) கொள்ளளவை பின்பக்கத்தில் கொண்டுள்ளது. பின் இருக்கைகளை மடிப்பதன் மூலம், மேலும் அதிக பொருட்களை வைப்பதற்கு கூடுதல் இடவசதியைப் பெற முடியும். இது நீண்ட தூர பயணங்களின் போது அதிக பொருட்களை எடுத்துச் செல்ல வழிவகுக்கும்.
புதிய செல்டோஸ் பல தொழிற்நுட்ப அம்சங்களுடன் வருகிறது. வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ & ஆப்பிள் கார்ப்ளே (Android Auto & Apple CarPlay), 360-டிகிரி கேமரா, வயர்லெஸ் சார்ஜிங், ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே, ஹைவே டிரைவிங் அசிஸ்ட் ஆகியவை இதில் அடங்கும். மேலும், ஏற்கனவே கூறியதுபோல் தட்டையாக மடிக்கக்கூடிய 2வது வரிசை இருக்கைகள், மூன்று டிராக்ஷன் மோட்கள் மற்றும் கேபின் வண்ண விளக்குகள் ஆகியவையும் உள்ளன.

இதுமட்டுமின்றி, இரட்டை பனோரமிக் சன்ரூஃப், டூயல்-ஸோன் க்ளைமேட் கண்ட்ரோல், ஆறு ஏர்பேக்குகள் மற்றும் டிரைவரால் பார்க்க முடியாத பகுதிகளை கண்காணிக்கும் வசதி (Blind spot monitor) போன்ற அம்சங்களும் 2026 செல்டோஸில் இடம்பெற்றுள்ளன. இந்த அம்சங்கள் ஓட்டுநருக்கும் பயணிகளுக்கும் அதிக வசதியையும் பாதுகாப்பையும் வழங்குகின்றன.
இவற்றுடன் 2026 செல்டோஸ், லெவல்-2 ADAS (Advanced Driver Assistance Systems) அம்சங்களுடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல், லேன் கீப் அசிஸ்ட், முன்பக்க மோதல்களை தவிர்ப்பதற்கான உதவி (collision avoidance assist), பிளைண்ட் ஸ்பாட் கண்ட்ரோல், ஹை பீம் அசிஸ்ட் மற்றும் சாலை மீதான டிரைவரின் கவனத்தை கண்காணிக்கும் வசதி போன்ற பாதுகாப்பு அம்சங்கள் அடங்கும்.
2026 செல்டோஸ் மூன்று என்ஜின் ஆப்ஷன்களுடன் விற்பனை செய்யப்பட உள்ளது. 1.5 லிட்டர் நேச்சுரலி ஆஸ்பிரேட்டட் பெட்ரோல், 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் ஒரு டர்போ டீசல் என்ஜின் ஆகியவை இதில் அடங்கும். எதிர்காலத்தில் ஒரு ஹைப்ரிட் பவர்டிரெய்ன் மற்றும் முழு எலெக்ட்ரிக் பவர்டிரெய்ன் கூட அறிமுகப்படுத்தப்படலாம்.

1.5 லிட்டர் நேச்சுரலி ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜின் 115 பிஎச்பி பவரையும், 144 என்.எம் டார்க் திறனையும் உற்பத்தி செய்கிறது. இது 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது சிவிடி (CVT) ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உடன் வழங்கப்படும். இதே என்ஜின் ஹூண்டாய் க்ரெட்டாவிலும் பயன்படுத்தப்படுகிறது.
1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் 158 பிஎச்பி அதிகபட்ச சக்தியையும், 253 என்.எம் டார்க் திறனையும் வழங்குகிறது. இது 6-ஸ்பீடு ஐஎம்டி அல்லது 7-ஸ்பீடு டூயல் கிளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உடன் வழங்கப்படும். மேம்படுத்தப்பட்ட செல்டோஸிலும் இந்த என்ஜின் ஆப்ஷன் நீடிக்கும்.
1.5 லிட்டர் டீசல் என்ஜின் 115 பிஎச்பி மற்றும் 250 என்எம் டார்க் திறனை உருவாக்கும். இது 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உடன் வழங்கப்படும். அதிக மைலேஜ் எதிர்பார்ப்பவர்களுக்கு இந்த டீசல் என்ஜின் பொருத்தமானதாக இருக்கும். கியா, 2025ஆம் ஆண்டு முதலீட்டாளர்கள் தினத்தில், 1.5 லிட்டர் நேச்சுரலி ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜின் எதிர்காலத்தில் ஹைப்ரிட் வெர்சனிலும் செல்டோஸில் வழங்கப்பட உள்ளதாக உறுதிப்படுத்தியது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் காம்பாக்ட் எஸ்யூவி கார்கள் பிரிவில் ஏற்கனவே பெரும் வெற்றியைப் பெற்ற செல்டோஸ், இந்த மேம்படுத்தலின் மூலம் தனது சந்தை ஆதிக்கத்தை மேலும் வலுப்படுத்த இலக்கு கொண்டுள்ளது. செல்டோஸ் எஸ்யூவி கார் வெவ்வேறு உலகளாவிய சந்தைகளுக்காக மூன்று இடங்களில் தயாரிக்கப்படுவதாக கியா உறுதிப்படுத்தியுள்ளது.
இந்தியாவிற்கான எஸ்யூவி, ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள அனந்தபூர் ஆலையில் உற்பத்தி செய்யப்படுகிறது. உலகளாவிய புதிய தலைமுறை செல்டோஸின் வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டுகளில் கியாவின் இந்திய ஆராய்ச்சி & கண்டுப்பிடிப்பு மையம் முக்கிய பங்களித்துள்ளது. இதன் வெளியீட்டு நிகழ்வில் காட்டப்பட்ட விளம்பரம், புதிய செல்டோஸ் எவ்வளவு ஆக்ரோஷமாகவும், கம்பீரமாகவும் உள்ளது என்பதைக் காட்டியுள்ளது.


Click it and Unblock the Notifications









