லம்போர்கினி கம்பெனிக்கே நம்ம ஆளுங்க கத்து தருவாங்க! கஷ்டப்பட்டு உருவாக்கி, இதை மறந்துட்டீங்களேப்பா!!
லம்போர்கினி (Lamborghini) நிறுவனம் உருவாக்கும் பிரபலமான கார்களுள் ஹூராகென் (Huracan) ஒன்றாகும். ஆனால், அதிகப்படியான விலையினால் ஹூராகென் காரை பெரும் பணக்காரர்களால் மட்டுமே வாங்க முடிகிறது. இதனாலேயே நம்மில் பெரும்பாலானோருக்கு ஹூராகென் காரை வாங்குவது என்பது கனவாகவே இருக்கிறது. இந்த நிலையில் இங்கு சிலர் தங்களது ஹூராகென் கார் கனவை வேறு விதமாக நிஜமாக்கி உள்ளனர். கேரளாவை சேர்ந்த இந்த நபர்கள் செய்துள்ள காரியத்தை பற்றி தான் இனி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்க போகிறோம். வாருங்கள் செய்திக்குள் போகலாம்.
வெவ்வேறான கார்களில் இருந்து பாகங்களை எடுத்து தனது விருப்பத்திற்கேற்ப புதியதாக ஒரு காரை உருவாக்குவதை நம் இந்தியாவில் அடிக்கடி பார்க்க முடிகிறது. இவ்வாறு உருவாக்கப்படும் கார்கள் சட்டத்திற்கு புறம்பானவை என்றாலும், இவ்வாறு சொந்த முயற்சியில் கார்களை உருவாக்குபவர்கள் அவ்வப்போது ஆங்காங்கே புதியதாக முளைத்துக் கொண்டுத்தான் இருக்கின்றனர்.

அந்த வகையில் தற்போது கேரளாவில் சிலர் லம்போர்கினி ஹூராகென் கார் போன்று அச்சு அசலாக ஒரு காரை ஆரம்பத்தில் இருந்து முழுமையாக உருவாக்கி உள்ளனர். இந்த ஐடியா முதலில் பிபின் (Bibin) என்பவருக்கு தோன்றியுள்ளது. இந்த பிபின் என்பவர் கேரளாவில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருபவர் ஆவார்.
பிபினுக்கு சிறு வயதில் இருந்தே கார்கள் என்றாலே தனி ஆர்வம் ஆகும். இதனால், பிபினுக்கு ஒரு கட்டத்திற்கு மேல் சொந்தமாக கார் ஒன்றை உருவாக்க வேண்டும் என ஆசை வந்துள்ளது. இதனையடுத்து கடந்த 3 வருடங்களுக்கு முன்பே கார் ஒன்றை உருவாக்கும் பணியில் இறங்கிய பிபின் தற்போதுவரையில் 70%-இல் இருந்து 80% வரையிலான காரை தனது நண்பர்களுடன் இணைந்து உருவாக்கி உள்ளார்.

3 வருடங்களுக்கு வேலை இழுத்ததற்கு காரணம், பிபினுக்கு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி ஆகும். அதுமட்டுமின்றி, அலுவலகத்திற்கும் சென்று கொண்டு விடுமுறை நாட்களில் மட்டுமே காரை உருவாக்கும் பணியில் பிபின் ஈடுப்பட்டு வருகிறார். இது எல்லாவற்றையும் விட முக்கியமாக, இத்தனை வருட தாமதத்திற்கு காரணம், பிபின் மற்றும் அவரது குழுவினர் உருவாக்கி உள்ள காரில் ஹூராகென் கார் போன்று மிகவும் நுணுக்கமாக வேலைப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு இருப்பதை காண முடிகிறது.
ஏற்கனவே கூறியதுபோல், இந்த போலி லம்போர்கினி ஹூராகென் காரை பிபின் முழுவதுமாக அடிப்படை ஆரம்பத்தில் இருந்து உருவாக்கி உள்ளார். அதாவது, மற்றொரு காரை ஹூராகென் கார் போன்று மாற்றவில்லை. அடிப்படை சேசிஸ் (Chassis) மற்றும் ஃப்ரேம் (Frame) உள்ளிட்டவை அனைத்தையும் பிபின் வீட்டிலேயே உருவாக்கி அவற்றை ஒன்றாக இணைத்து முழு காராக மாற்றியுள்ளார்.

இதற்காக, குழாய்களையும், மற்ற பொருட்களையும் ஹார்ட்வேர் கடைகளில் இருந்து பிபின் பெற்றுள்ளார். காருக்கான ஃப்ரேமை உருவாக்க உலோகத்திலான குழாய்களை பயன்படுத்தி உள்ள இவர், அவற்றின் மீது கார்ட்போர்டு (Cardboard) தகடுகளை பொருத்தி காரின் உருவத்திற்கு கொண்டு வந்துள்ளார். கார்ட்போர்டு மீது ஃபைபர்கிளாஸை பொருத்தி கண்ணாடிகளை உருவாக்கி உள்ளனர்.
இது போலியான காராக இருப்பினும், நீளம், உயரம், அகலம் உள்ளிட்ட அளவுகளில் கிட்டத்தட்ட ஹூராகென் காரை ஒத்து காணப்படுகிறது. இருப்பினும், இது ஹூராகென் கார் இல்லை என்பதை நம்மால் பார்த்தாலே தெரிந்துவிட முடிகிறது. குறிப்பாக, மாருதி சுஸுகி ஆல்டோ காரில் பொருத்தப்படும் அளவில் சிறியதான சக்கரங்கள் இந்த காரில் பொருத்தப்பட்டு இருப்பதும் இது லம்போர்கினி கார் கிடையாது என்பதை பார்க்கும் எவரொருவருக்கும் சட்டெரென காண்பித்து விடுகிறது. என்ஜின் மாருதி 800 காருடையது ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: லம்போர்கினி கார் கனவை இப்படித்தான் நினைவாக்க வேண்டியுள்ளது. இவர்களும் கூட முழுவதுமாக காரை உருவாக்கி முடிக்கவில்லை. இன்னும் 20%- 30% வேலைகள் மிச்சம் உள்ளன. என்ன தான் கஷ்டப்பட்டு உருவாக்கி இருந்தாலும் இதனை சாலையில் ஓட்ட முடியாது என்பதுதான் உண்மை. ஏனெனில், இந்த காரை ஆர்டிஓ (RTO)-இல் பதிவு செய்ய மாட்டார்கள். பதிவு செய்ய பல்வேறு சோதனை சான்றிதழ்களை கேட்பார்கள்.
Source: Cartog (https://www.cartoq.com/)
Translated and published for our readers in Tamil.


Click it and Unblock the Notifications









