காரை உருவாக்க சொன்னா, மினி கப்பலை உருவாக்கி தராங்க! இதை வாங்கவும் இந்தியாவில் ஆள் இருக்கா?
லெக்சஸ் (Lexus), ஜப்பானை சேர்ந்த டொயோட்டா (Toyota) நிறுவனத்தின் கீழ் செயல்படும் மாற்றொரு கார் நிறுவனம். இதுவும் ஜப்பானை சேர்ந்த கார் நிறுவனம் தான். டொயோட்டா மிகவும் விலையுயர்ந்த சொகுசு கார்களை லெக்சஸ் பிராண்டின் கீழ் விற்பனை செய்கிறது. இந்தியாவிலும் லெக்சஸ் நிறுவனம் செயல்படுகிறது. ஆனால், விலையுயர்ந்த கார்களை மட்டும் விற்பனை செய்வதாலேயே லெக்சஸ் நிறுவனத்தை இந்தியாவில் பாமர மக்கள் பலருக்கு பெரியதாக தெரிந்திருக்கவில்லை. ஆனால், இந்தியாவில் லெக்சஸ் நிறுவனத்தின் கார்கள் விற்பனை எண்ணிக்கைகள் வேறு விதமாக காட்டுகின்றன.
இந்தியாவில் கார்கள் விற்பனையில் லெக்சஸ் நிறுவனம் 19% வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. அதாவது, கடந்த 2024ஆம் ஆண்டு ஏப்ரலில் இருந்து கடந்த 2025 மார்ச் வரையில் லெக்சஸ் நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்த கார்கள் எண்ணிக்கை ஆனது இதற்கு முந்தைய 2023-24ஆம் ஆண்டை விட 19% அதிகமாகும்.

இதில் இருந்து இந்தியாவிலும் லெக்சஸ் கார்களை வாங்குவோரின் எண்ணிக்கை மெல்ல மெல்ல அதிகரித்து வருவதை அறிய முடிகிறது. இதன் தொடர்ச்சியாக, அடுத்த 3 மாதங்களுக்கும் லெக்சஸ் கார்கள் விற்பனை ஆனது சிறப்பாக இருக்கும் என எதிர்பார்க்கிறோம். 2025ஆம் ஆண்டின் முதல் 3 மாதங்களில் லெக்சஸ் நிறுவனம் 17% வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.
அதாவது, கடந்த 2024ஆம் ஆண்டின் முதல் 3 மாதங்களில் இந்தியாவில் விற்பனை செய்த கார்களின் எண்ணிக்கையை காட்டிலும் நடப்பு 2025ஆம் ஆண்டின் முதல் 3 மாதங்களில் 17% அதிக எண்ணிக்கையிலான கார்களை விற்பனை செய்துள்ளது. இந்தியாவில் லெக்சஸ் பிராண்டில் இருந்து என்.எக்ஸ் (NX) கார்கள் அதிக எண்ணிகையில் விற்பனை செய்யப்படுகின்றன.

குறிப்பாக, இந்த 2025ஆம் ஆண்டில் இதுவரையில் லெக்சஸ் என்.எக்ஸ் கார்களுக்கு இந்திய சந்தையில் சிறப்பான வரவேற்பு கிடைத்து வருகிறது. அதேபோல், லெக்சஸ் நிறுவனத்தின் எல்.எம் (LM) கார்களுக்கும் இந்தியாவில் சிறப்பான வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்தியாவில் எந்தவொரு மாதத்திலும் இல்லாத அளவிற்கு, கடந்த மார்ச் மாதத்தில் அதிக எண்ணிக்கையிலான கார்களை லெக்சஸ் விற்பனை செய்துள்ளது.
எந்த அளவிற்கு அதிகம் என்றால், 2024 மார்ச்சை காட்டிலும் இந்த ஆண்டு மார்ச்சில் லெக்சஸ் கார்கள் விற்பனை எண்ணிக்கை சுமார் 61% அதிகரித்துள்ளது. அதாவது, டபுள் மடங்கிற்கும் மேல் லெக்சஸ் கார்கள் கடந்த மார்ச்சில் அதிகமாக விற்கப்பட்டுள்ளன. ஏற்கனவே கூறியதுபோல், இதற்கு லெக்சஸ் என்.எக்ஸ் கார்களின் பங்களிப்பு மிக முக்கியமானது ஆகும்.
அதேபோல், லெக்சஸ் ஆர்.எக்ஸ் கார்களின் விற்பனையும் சீராக இருந்து வருகிறது. லெக்சஸ் என்.எக்ஸ் மற்றும் ஆர்.எக்ஸ் கார்கள் விற்பனை ஆனது 2024 மார்ச்சை காட்டிலும் 63% அதிகரித்துள்ளது. எல்.எம் என்கிற பிரம்மாண்டமான எம்பிவி காருக்கு பணக்காரர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பு கிடைத்துவரும் நிலையில், எல்.எக்ஸ் (LX) என்கிற மற்றொரு பிரம்மாண்டமான காருக்கு இந்தியாவில் சமீபத்தில் லெக்சஸ் நிறுவனம் முன்பதிவுகளை துவங்கியுள்ளது.
இந்தியாவில் லெக்சஸ் நிறுவனம் விற்பனை செய்யும் மிகவும் விலையுயர்ந்த கார், எல்.எக்ஸ் ஆகும். இதன் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.2.83 கோடியில் இருந்து ரூ.3.12 கோடி வரையில் உள்ளன. இதற்கடுத்து எல்.எம் கார் விலைமிக்க லெக்சஸ் காராக இந்தியாவில் விற்பனை செய்யப்படுகிறது. இவை இரண்டு மட்டுமில்லாமல், ஆர்.எக்ஸ், என்.எக்ஸ் மற்றும் இ.எக்ஸ் கார்களையும் இந்தியாவில் லெக்சஸ் நிறுவனம் விற்பனை செய்கிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: லெக்சஸ் என்கிற ஒரு கார் பிராண்ட் இந்தியாவில் செயல்படுவதே பணக்காரர்களை தவிர்த்து, பெரியதாக யாருக்கும் தெரிவதில்லை. ஏனெனில், அந்த அளவிற்கு விலையுயர்ந்த கார்களை லெக்சஸ் நிறுவனம் விற்பனை செய்கிறது. இருப்பினும், இந்த நிறுவனத்தின் சொகுசு கார்கள் விற்பனை அதிகரித்து வருவதில் இருந்து, இந்தியாவில் விலையுயர்ந்த கார்களை வாங்குவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதை அறிய முடிகிறது.


Click it and Unblock the Notifications








