காரா? இல்ல சவப்பெட்டியா? இதுல போனா கடவுளே நெனச்சாலும் காப்பாத்த முடியாது! அந்த நிறுவன தயாரிப்பா இது! ஷாக்!
#SaferCarsForAfrica திட்டத்தின் ஒரு பகுதியாக, தென் ஆப்ரிக்க சந்தைக்கான ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 (Hyundai Grand i10) காரை, குளோபல் என்சிஏபி (Global NCAP) அமைப்பு சமீபத்தில் மோதல் சோதனைக்கு (Crash Test) உட்படுத்தியது. இதன் முடிவுகள் தற்போது வெளியாகி, அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன.
குளோபல் என்சிஏபி அமைப்பு நடத்திய மோதல் சோதனையில், பெரியவர்களுக்கான பாதுகாப்பில் ஹூண்டாய் க்ராண்ட் ஐ10, 34க்கு 3.83 புள்ளிகளை மட்டுமே ஸ்கோர் செய்துள்ளது. இதன் காரணமாக பெரியவர்களுக்கான பாதுகாப்பில் ஜீரோ ஸ்டார் ரேட்டிங்கை வாங்கி, ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஆனால் இதை ஒப்பிடும்போது, குழந்தைகளுக்கான பாதுகாப்பு சோதனையில் இந்த கார் ஓரளவிற்கு சிறப்பாக செயல்பட்டுள்ளது. அதாவது குழந்தைகளுக்கான பாதுகாப்பில் ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 காரானது, 49க்கு 28.28 புள்ளிகளை ஸ்கோர் செய்துள்ளது. இதன் மூலம் இந்த கார், குழந்தைகளுக்கான பாதுகாப்பில் 3 ஸ்டார் ரேட்டிங்கை பெற்றுள்ளது.
குளோபல் என்சிஏபி அமைப்பால் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 கார், இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டது ஆகும். ஆனால் இந்தியாவில் தற்போது விற்பனையில் உள்ள மாடலுக்கு இந்த பாதுகாப்பு ரேட்டிங் பொருந்துமா? என்பது சந்தேகம்தான் என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

ஏனெனில் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் மாடலில், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல், அனைத்து பயணிகளுக்கும் 3 பாயிண்ட் சீட்பெல்ட்கள், சீட்பெல்ட் ரிமைண்டர்கள், ரியர் பார்க்கிங் சென்சார்கள் மற்றும் அனைத்து வேரியண்ட்களிலும் ஸ்டாண்டர்டாக 6 ஏர்பேக்குகள் போன்ற பாதுகாப்பு வசதிகள் (Safety Features) எல்லாம் உள்ளன. இந்த பாதுகாப்பு வசதிகள் அனைத்தும் முடிவுகளை வேறு விதமாக மாற்றலாம்.
ஏனெனில் குளோபல் என்சிஏபி அமைப்பு மோதல் சோதனைக்கு உட்படுத்திய மாடலில், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல் போன்ற வசதிகள் எல்லாம் இல்லை.எனவேதான் தென் ஆப்ரிக்க சந்தைக்கான ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 காரின் மோதல் சோதனை முடிவுகள் இந்திய சந்தையில் விற்பனையில் உள்ள மாடலுக்கு பொருந்துமா? என்பது சந்தேகம்தான் என நாங்கள் கூறினோம்.
இருப்பினும் இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட ஹூண்டாய் கார் ஒன்று, குளோபல் என்சிஏபி அமைப்பின் மோதல் சோதனையில், பெரியவர்களுக்கான பாதுகாப்பில் ஜீரோ ஸ்டார் ரேட்டிங்கை வாங்கியிருப்பது அதிர்ச்சிகரமான ஒரு விஷயம்தான். இது ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விஷயம் என குளோபல் என்சிஏபி அமைப்பின் தலைமை செயல் அதிகாரி (CEO - Chief Executive Officer) ரிச்சர்ட் வுட்ஸ் (Richard Woods) கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், ''குறைவான மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளுக்கான கார்களின் பாதுகாப்பில் சமரசம் செய்வது என்பது ஏற்று கொள்ள முடியாத ஒரு விஷயம். வாடிக்கையாளர்கள் உலகில் எங்கு வசித்தாலும், அவர்கள் பாதுகாப்பான வாகனங்களை பெற முழுமையான தகுதி உடையவர்கள்'' என்றார்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: கார் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கான பாதுகாப்பை மேம்படுத்துவதில் அதிக கவனம் செலுத்த வேண்டிய நேரம் இது. தற்போது பாதுகாப்பு ரேட்டிங் குறித்த விழிப்புணர்வு வாடிக்கையாளர்கள் மத்தியில் வெகுவாக அதிகரித்துள்ளது. ஒரு காரின் விற்பனையில் தாக்கத்தை ஏற்படுத்த கூடிய அளவிற்கு பாதுகாப்பு ரேட்டிங் மிகவும் முக்கியமான ஒரு காரணியாக மாறியுள்ளதால், கார் நிறுவனங்கள் பாதுகாப்பை அதிகரிப்பதில் கவனம் செலுத்த வேண்டும்.


Click it and Unblock the Notifications








