5-ஸ்டார் ரேட்டிங் கொடுக்க மறுத்துட்டாங்க! மேட்-இன்-இந்தியா சுஸுகி காருக்கு ஜப்பானில் கிடைத்த கௌரவம்!
மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவனத்தில் இருந்து கடந்த 2023ஆம் ஆண்டின் துவக்கத்தில் அறிமுகம் செய்யப்பட்ட கார், ஃபிரான்க்ஸ் (Fronx) ஆகும். இந்தியாவில் கடந்த சில வருடங்களாகவே மக்கள் அதிகம் பேரால் வாங்கப்பட்டுவரும் மாருதி சுஸுகி பலேனோ (Baleno) காரின் அடிப்படையில் உருவாக்கப்பட்டதாக ஃபிரான்க்ஸ் விளங்குகிறது. இதனாலேயே, பலேனோவிற்கு இணையாக இல்லையென்றாலும், ஃபிரான்க்ஸ் கார்களை கணிசமான எண்ணிக்கையிலான மக்கள் வாங்குகின்றனர். 2023 ஜனவரியில் ஆட்டோ எக்ஸ்போ (Auto Expo) கண்காட்சியில் அறிமுகம் செய்யப்பட்ட ஃபிரான்க்ஸ் காரின் டெலிவிரிகள் அதன்பின் 2024 ஏப்ரலில் இருந்து துவங்கப்பட்டன.
இந்தியாவை தொடர்ந்து, ஜப்பான் நாட்டிற்கும் ஃபிரான்க்ஸ் கார் கொண்டு செல்லப்பட்டது. ஜப்பானில் பிரபலமாக இருக்கும் சுஸுகி கார்கள் இந்தியாவிற்கு கொண்டுவரப்பட்ட காலம்போய், தற்போது இந்தியாவில் வரவேற்பை பெறும் கார்கள் ஜப்பான் நாட்டில் அறிமுகம் செய்யப்படுகின்றன. தாயாக நாடான ஜப்பானில் அறிமுகம் செய்யும் அளவிற்கு ஃபிரான்க்ஸ் மீது சுஸுகி நிறுவனம் அதிக நம்பிக்கை வைத்துள்ளது.

இந்த நிலையில், சுஸுகியின் அந்த நம்பிக்கையை எல்லாம் நிவர்த்தி செய்யும் வகையில், ஜப்பானில் மேற்கொள்ளப்பட்ட கிராஷ் டெஸ்ட்டில் (Crash Test) சிறந்த மதிப்பெண்களை அங்கு விற்பனையில் உள்ள சுஸுகி ஃபிரான்க்ஸ் பெற்றுள்ளது. ஜப்பானில் விற்பனையில் உள்ள ஃபிரான்க்ஸ் கார் என கூறப்பட்டாலும், அவை இந்தியாவில் இருந்துதான் கொண்டு செல்லப்படுகின்றன.
அதாவது, இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் மேட்-இன்-இந்தியா ஃபிரான்க்ஸ் கார்கள் தான் ஜப்பானில் விற்பனை செய்யப்படுகின்றன. ஆதலால், தற்போது வெளியாகியுள்ள ஜப்பான் என்சிஏபி (NCAP) கிராஷ் டெஸ்ட் முடிவுகளை ஜப்பானின் சுஸுகியை காட்டிலும் இந்தியாவின் மாருதி சுஸுகி தான் பெரிதும் கவனத்தில் எடுத்துக் கொள்ளும். ஜப்பான் என்சிஏபி கிராஷ் டெஸ்ட்டில் ஃபிரான்க்ஸ் காருக்கு 5க்கு 4 நட்சத்திர மதிப்பீடு வழங்கப்பட்டுள்ளது.

கிராஷ் டெஸ்ட்டின் மொத்த மதிப்பெண்களான 193.8க்கு ஜப்பானில் விற்பனையில் இருக்கும் சுஸுகி ஃபிரான்க்ஸ் கார் 163.75 மதிப்பெண்களை பெற்றுள்ளது. மோதலின் வீரியத்தை எந்த அளவிற்கு கார் தடுக்கிறது என்பதை கண்டறியும் முயற்சியாக நடத்தப்பட்ட சோதனைகளின் முடிவில் 85.8 மதிப்பெண்களுக்கு 79.42 மதிப்பெண்களையும், மோதலை தவிர்ப்பதற்காக கார் என்னென்ன செய்கிறது என்பதை அறியும் சோதனைகளின் முடிவில் 100க்கு 76.33 மதிப்பெண்களையும் ஃபிரான்க்ஸ் பெற்றுள்ளது.
விபத்தின்போது, சாலையில் செல்லும் பாதசாரிகளின் கால்களுக்கு நல்ல பாதுகாப்பை வழங்குவதில் முழு மதிப்பெண்களை பெற்றுள்ள ஃபிரான்க்ஸ், டிரைவருக்கு பக்கவாட்டில் ஏற்படும் மோதல்களின் போதும் டிரைவருக்கு வழங்கும் பாதுகாப்பிலும் நல்ல மதிப்பெண்களை பெற்றுள்ளது. சாலையில் பாதை மாறுவதை தடுக்கக்கூடிய வகையில் இந்த காரில் உள்ள கருவிக்கும் அதிக மதிப்பெண்களை ஜப்பானிய என்சிஏபி வழங்கி உள்ளது.
கார் மோதலுக்கு உள்ளாக போவதை அறிந்து தானாக செயல்படும் பிரேக் சிஸ்டம் மற்றும் முன்பக்க மோதலின்போது டிரைவருக்கான பாதுகாப்பும் ஃபிரான்க்ஸில் சிறந்த நிலையில் உள்ளதாக தெரிவித்துள்ளனர். ஆனால், முன்பக்க மோதலின்போது பின் இருக்கை பயணிகளுக்கு கிடைக்கக்கூடிய பாதுகாப்பு மற்றும் பாதசாரிகளின் தலைக்கு வழங்கக்கூடிய பாதுகாப்பில் மிகவும் சுமாராக செயல்பட்டதற்காக ஒட்டுமொத்தத்தில் காருக்கு முழு 5-ஸ்டாருக்கு பதிலாக 4-ஸ்டார் கொடுக்கப்பட்டுள்ளது.
பயணிகள் சீட் பெல்ட் (Seat Belt) அணியாததை எச்சரிக்கும் தொழிற்நுட்பமும், காரின் பின்பக்கத்தில் மோதல் ஏற்பட்டால் பயணிகளின் கழுத்து பகுதிக்கு வழங்கும் பாதுகாப்பும் ஜப்பானிய ஃபிரான்க்ஸ் காரில் ஓரளவுக்கு பரவாயில்லை என்றுதான் சொல்ல வேண்டும். அதேபோல், டிரைவர் தவறுதலாக வேறு பெடலை அழுத்துவதற்கு எந்த அளவிற்கு வாய்ப்பு உள்ளது? ஹெட்லைட்களின் அதிகப்பட்ச ஒளி எவ்வளவு? என்பன போன்ற சோதனைகளிலும் ஓரளவிற்கு அதிக மதிப்பெண்களையே சுஸுகி ஃபிரான்க்ஸ் பெற்றுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் உருவாக்கப்பட்டாலும், ஜப்பானில் விற்பனையில் இருக்கும் ஃபிரான்க்ஸ் காருக்கும், இந்தியாவில் விற்பனையில் இருக்கும் ஃபிரான்க்ஸ் காருக்கும் பாதுகாப்பு அம்சங்கள் உள்பட சில வித்தியாசங்கள் உள்ளன. அதேபோல், இந்தியாவின் பாரத் என்சிஏபி கிராஷ் டெஸ்ட்டில் மேற்கொள்ளப்படும் சோதனைகளும் சற்று வேறுப்பட்டவை ஆகும். ஆதலால், இந்தியாவில் ஃபிரான்க்ஸ் கார் மோதல் சோதனைக்கு உட்படுத்தப்பட்டால், இது அளவிலான மதிப்பெண்களை பெறுமா என்பது சந்தேகமே.


Click it and Unblock the Notifications








