80 வருஷமா இதுக்கு தான் மஹிந்திரா காத்துக்கிட்டு இருந்துச்சு! கைமேல் பலன் கிடைக்க ஆரம்பிச்சு இருக்கு!
மஹிந்திரா & மஹிந்திரா (Mahindra & Mahindra), இந்தியாவின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்களுள் ஒன்று. ஆரம்பத்தில் கமர்ஷியல் வாகனங்கள் விற்பனையிலும், விவசாய உபகரணங்கள் விற்பனையிலும் ஈடுப்பட்டு வந்த மஹிந்திரா நிறுவனம், அதன்பின் கார்களை உற்பத்தி செய்து விற்பனை செய்யவும் ஆரம்பித்தது. கடந்த சில வருடங்களாக, கார்கள் விற்பனையிலும் மஹிந்திராவின் ஆதிக்கம் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. குறிப்பாக, கடந்த 2024ஆம் ஆண்டு ஆனது கார்கள் பிஸ்னஸில் மஹிந்திராவுக்கு மிகவும் சிறப்பான ஆண்டாக அமைந்தது. அதன் எதிரொலியாக, கடந்த 2025 பிப்ரவரி மாத கார்கள் விற்பனையில் 2வது இடத்தை மஹிந்திரா சொந்தமாக்கியது.
பெரும்பாலும், மாருதி சுஸுகி (Maruti Suzuki), ஹூண்டாய் (Hyundai), டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனங்களுக்கு அடுத்து 4வது இடத்தை பிடிக்கக்கூடிய மஹிந்திரா கடந்த பிப்ரவரி மாத விற்பனையில் ஹூண்டாய் மற்றும் டாடா நிறுவனங்களை முந்தி 2வது இடத்தை பிடித்தது பெரிதும் ஆச்சிரியத்தை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், நடந்து முடிந்த 2025 மார்ச் மாதத்தில் மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் விற்பனை செய்த வாகனங்களின் எண்ணிக்கை குறித்த விபரங்கள் கிடைத்துள்ளன. கடந்த 2025 மார்ச் மாதத்தில் மொத்தம் 83 ஆயிரத்து 894 வாகனங்களை மஹிந்திரா & மஹிந்திரா விற்பனை செய்துள்ளது.
இதில், உள்நாட்டில் விற்பனை செய்யப்பட்ட மஹிந்திரா வாகனங்கள் மட்டுமின்றி, வெளிநாட்டில் ஏற்றுமதி செய்யப்பட்ட மஹிந்திரா வாகனங்களின் எண்ணிக்கைகளும் அடங்குகின்றன. மேலும், இந்த 83,894 என்பதில் கார்கள் மட்டுமில்லாமல், மஹிந்திரா கமர்ஷியல் வாகனங்களின் விற்பனை எண்ணிக்கைகளும் அடங்குகின்றன. கடந்த 2024ஆம் ஆண்டில் மஹிந்திரா விற்பனை செய்த வாகனங்களின் எண்ணிக்கையை காட்டிலும் இந்த 83,894 என்பது 23% அதிகமாகும்.

கடந்த மார்ச் மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட மஹிந்திரா கார்களின் எண்ணிக்கை மட்டும் 50 ஆயிரத்து 835 ஆகும். இதில் உள்நாட்டில் விற்பனை செய்யப்பட்ட மஹிந்திரா கார்களின் எண்ணிக்கை 48 ஆயிரத்து 48 ஆகும். அதுவே, 2024 மார்ச் மாதத்தில் வெறும் 40 ஆயிரத்து 631 கார்களை மட்டுமே இந்திய சந்தையில் மஹிந்திரா விற்பனை செய்திருந்தது.
இந்த வகையில் பார்க்கும்போது, மஹிந்திரா கார்களின் உள்நாட்டு விற்பனை ஆனது கடந்த ஆண்டு மார்ச் உடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு மார்ச்சில் 18% அதிகரித்துள்ளது. கமர்ஷியல் வாகனங்கள் விற்பனையை பொறுத்தவரையில், கடந்த மார்ச் மாதத்தில் மொத்தம் 23 ஆயிரத்து 951 கமர்ஷியல் வாகனங்களை உள்நாட்டில் மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் விற்பனை செய்துள்ளது.

அதுவே, கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் 20 ஆயிரத்து 930 கமர்ஷியல் வாகனங்களை மட்டுமே உள்நாட்டில் மஹிந்திரா விற்பனை செய்திருந்தது. இந்த வகையில் பார்த்தால், இந்த ஆண்டு மார்ச்சில் 3 ஆயிரத்து 21 கமர்ஷியல் வாகனங்களை மஹிந்திரா கூடுதலாக விற்பனை செய்துள்ளது.
இந்த கமர்ஷியல் வாகனங்களில், 2 டன்னிற்கும் எடை குறைவான கமர்ஷியல் வாகனங்கள், 2 டன்களில் இருந்து 3.5 டன்கள் வரையில் எடை கொண்ட கமர்ஷியல் வாகனங்கள் மற்றும் 3.5 டன்களை விட அதிக எடை கொண்ட கமர்ஷியல் வாகனங்கள் என 3 விதமான கமர்ஷியல் வாகன பிரிவுகள் உள்ளன. 3-சக்கர வாகனங்களையும் மஹிந்திரா விற்பனை செய்கிறது. அதனை பற்றி பின்னர் தனியாக பார்க்கலாம்.

2 டன்களை விட எடை குறைவான மஹிந்திரா கமர்ஷியல் வாகனங்கள் கடந்த மார்ச் மாதத்தில் மொத்தம் 3530 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால், 2024 மார்ச்சில் இந்த வாகனங்களை 4012 யூனிட்கள் மஹிந்திரா விற்பனை செய்திருந்தது. இதன்படி பார்த்தால், மஹிந்திராவின் 2 டன்களுக்கும் குறைவான எடை கொண்ட கமர்ஷியல் வாகனங்களின் விற்பனை ஆனது 12% குறைந்துள்ளது.
இதற்கடுத்துள்ள, 2 டன்கள்- 3.5 டன்கள் எடை கொண்ட மஹிந்திரா கமர்ஷியல் வாகனங்கள் கடந்த மார்ச் மாதத்தில் மொத்த 18 ஆயிரத்து 958 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதுவே, 2024 மார்ச் மாதத்தில் இந்த வாகனங்கள் 15 ஆயிரத்து 387 யூனிட்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இந்த வகையில், இந்த பிரிவு கமர்ஷியல் வாகனங்களின் விற்பனை ஆனது 23% அதிகரித்துள்ளது.

3.5 டன்களுக்கும் அதிகமான எடை கொண்ட கனரக கமர்ஷியல் வாகனங்களை கடந்த மாதத்தில் மொத்தம் 1463 யூனிட்கள் மஹிந்திரா விற்பனை செய்துள்ளது. அதுவே, கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இந்த கனரக வாகனங்கள் 1531 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இந்த வகையில் பார்த்தால், மஹிந்திரா கனரக வாகனங்களின் விற்பனை ஆனது 4% குறைந்துள்ளது.
மஹிந்திரா 3-சக்கர வாகனங்களின் விற்பனையை பொறுத்தவரையில், கடந்த மாதத்தில் மொத்தம் 7752 3-சக்கர வாகனங்களை மஹிந்திரா விற்பனை செய்துள்ளது. அதுவே, 2024 மார்ச்சில் வெறும் 5279 மஹிந்திரா 3-சக்கர வாகனங்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இதன்படி பார்க்கும்போது, மஹிந்திரா 3-சக்கர வாகனங்களின் விற்பனை ஆனது கடந்த ஆண்டை காட்டிலும் பாதிக்கும் மேல் அதிகரித்துள்ளது.

இந்தியாவில் உற்பத்தி செய்யும் வாகனங்களை வெளிநாடுகளுக்கும் மஹிந்திரா நிறுவனம் ஏற்றுமதி செய்கிறது என கூறினாலும், அந்த எண்ணிக்கை மிகவும் குறைவாகும். கடந்த மார்ச் மாதத்தில் மொத்தமாகவே 4 ஆயிரத்து 143 வாகனங்களை மட்டுமே இந்தியாவில் இருந்து மஹிந்திரா நிறுவனம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளது. இதுவாவது பரவாயில்லை... 2024 மார்ச்சில் வெறும் 1573 மஹிந்திரா வாகனங்கள் மட்டுமே வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு இருந்தன.
இந்த வகையில் பார்க்கும்போது, மஹிந்திராவின் வெளிநாட்டு ஏற்றுமதி ஆனது சுமார் 163% அதிகரித்துள்ளது. இந்த ஏற்றுமதி எண்ணிக்கைகளில் மஹிந்திரா கார்கள், கமர்ஷியல் வாகனங்கள் மற்றும் 3-சக்கர வாகனங்கள் என எல்லாமே அடங்குகின்றன. மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் எல்லாவற்றிலும் கொஞ்சம் கொஞ்சம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: கார்கள் விற்பனை, கமர்ஷியல் வாகனங்கள் விற்பனை என எல்லாவற்றிலும் மஹிந்திராவின் ஆதிக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்கு, மஹிந்திராவின் சமீப கால நடவடிக்கைகள் மிக முக்கிய காரணமாகும். இருப்பினும், 2 டன்களுக்கும் குறைவான எடை கொண்ட கமர்ஷியல் வாகனங்களின் விற்பனை கடந்த மாதத்தில் குறைந்திருப்பதை நிச்சயமாக மஹிந்திரா கவனத்தில் எடுத்துக் கொள்ளும். அதேபோல், கடந்த ஜனவரி, பிப்ரவரி மாதத்தை காட்டிலும் கடந்த மார்ச் மாதத்தில் கார்கள் விற்பனை சற்று குறைந்திருப்பதையும் சரிச்செய்ய முயற்சிக்கும்.


Click it and Unblock the Notifications









