மேட்-இன்-இந்தியா டிராக்டர்கள் தான் எல்லா நாடுகளிலும்! ஆஸ்திரேலியாவில் ஜொலிக்கும் மஹிந்திரா!
உலகின் மிகப்பெரிய டிராக்டர் (Tractor) உற்பத்தியாளரான மஹிந்திரா & மஹிந்திரா (Mahindra & Mahindra) தங்களின் நவீன ஓஜா (OJA) டிராக்டர்களை ஆஸ்திரேலியா (Australia) நாட்டில் அறிமுகம் செய்யவுள்ளது. இதற்கு முன்னதாக, ஆஸ்திரேலியா நாட்டிற்கான மஹிந்திரா ஓஜா டிராக்டர்கள் அந்த நாட்டில் வெளியீடு செய்யப்பட்டு உள்ளன. அதாவது, விலையை தவிர்த்து ஓஜா டிராக்டர்களை பற்றிய அனைத்து விபரங்களும் வெளியீடு செய்யப்பட்டு உள்ளன.
மஹிந்திரா நிறுவனம் ஆஸ்திரேலியாவில் கால் பதித்து 20 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு இந்த புதிய வெளியீடு நடந்துள்ளது. ஆஸ்திரேலிய விவசாயிகளின் தேவைகளை கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்ட சப்-காம்பெக்ட் (Sub-Compact) மற்றும் காம்பெக்ட் பிரிவில், ஓஜா 1100 மற்றும் 2100 சீரிஸில் இருந்து மூன்று புதிய டிராக்டர்களை மஹிந்திரா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

இதில் ஓஜா 1123 எச்எஸ்டி (HST), ஓஜா 1126 எச்எஸ்டி மற்றும் சக்திவாய்ந்த ஓஜா 2126 எச்எஸ்டி ஆகிய டிராக்டர்கள் அடங்குகின்றன. ஆஸ்திரேலியாவின் கடினமான சூழ்நிலைகளை தாங்கும் வகையில், இந்த ஓஜா டிராக்டர்கள் வலிமையான கட்டமைப்புடன் வடிவமைக்கப்பட்டுள்ளன. நீண்ட ஆயுள், நம்பகத்தன்மை மற்றும் ஓட்டுநரின் சௌகரியம் ஆகியவற்றை முதன்மைப்படுத்தி இந்த டிராக்டர்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
ஓஜா சீரிஸ் டிராக்டர்கள், மேம்பட்ட அதிநவீன தொழிற்நுட்பங்களுடன் 'எர்கோனாமிக் பிளாட்ஃபாரம்' (Ergonomic Platform)-இல் உருவாக்கப்பட்டு உள்ளன. பட்டன் மூலம் இயங்கும் பிடிஓ (PTO) மற்றும் அதிக சுமை தூக்கும் திறன் கொண்ட லோடர் (Loader) போன்ற புதிய அம்சங்கள் இவற்றில் இடம்பெற்று உள்ளன.
டிஜிட்டல் டிரைவர் டிஸ்பிளே, நவீன ஹைட்ராலிக்ஸ், பவர் ஸ்டீயரிங் மற்றும் விருப்பமான கேபின் வசதிகள் ஆகியவை ஓட்டுநர்களுக்கு இணையற்ற சௌகரியத்தையும் கட்டுப்பாட்டையும் வழங்குகின்றன. பகல் மற்றும் இரவு நேரங்களில் தெளிவான பார்வைக்காக புரொஜெக்டர் ஸ்டைல் ஹெட்லைட்கள் இந்த மஹிந்திரா ஓஜா டிராக்டர்களில் பொருத்தப்பட்டுள்ளன.
மடிக்கக்கூடிய கைத்தாங்கிகள் கொண்ட எம்-கம்ஃபோர்ட் சீட் மற்றும் டிரைவர் எளிதில் பயன்படுத்தக்கூடிய வண்ணக் குறியீட்டு உடன் கண்ட்ரோல்களும் உள்ளன. இது நவீன விவசாயத்திற்கு ஓஜா டிராக்டர்களை ஒரு சிறந்த துணையாக மாற்றுகிறது. "ஓஜாஸ்" (Ojas) என்ற சமஸ்கிருதச் சொல்லில் இருந்து பெறப்பட்ட "ஓஜா" என்பது மஹிந்திராவின் இலகுரக டிராக்டர்கள் உருவாக்க பயன்படும் பிளாட்ஃபாரத்தை குறிக்கிறது.

மஹிந்திராவின் ஆராய்ச்சி & கண்டுப்பிடிப்பு மையமான மஹிந்திரா ரிசர்ச் வாலி (Research Valley) மற்றும் ஜப்பானின் மிட்சுபிஷி மஹிந்திரா வேளாண் மெஷினரி (Mitsubishi Mahindra Agricultural Machinery) ஆகிய நிறுவனங்களின் கூட்டு முயற்சியால் ஆஸ்திரேலியா நாட்டிற்கான புதிய ஓஜா டிராக்டர்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
தென்னிந்தியாவில், தெலுங்கானாவில் உள்ள மஹிந்திராவின் அதிநவீன தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் ஓஜா சீரிஸ் டிராக்டர்கள், அமெரிக்கா, கனடா, தாய்லாந்து மற்றும் இந்தியா போன்ற சந்தைகளிலும் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. அதற்கு முன்னதாக ஆஸ்திரேலியாவில் இவை விற்பனைக்கு வர உள்ளன.
மஹிந்திரா ஆஸ்திரேலியா நிறுவனம் ஓஜா டிராக்டர்களுக்கு ஒரு விரிவான உத்தரவாதத் திட்டத்தை வழங்குகிறது. இதில், 3 ஆண்டுகளுக்கு பம்பர்-டு-பம்பர் கவரேஜ் மற்றும் பவர்ட்ரெய்னுக்கு கூடுதலாக 3 ஆண்டுகள் உத்தரவாதம் அறிவிக்கப்பட்டு உள்ளது. மஹிந்திராவின் சர்வீஸ் நெட்வொர்க்கின் ஆதரவுடன், இந்த உத்தரவாதம் டிராக்டர் உரிமையாளர்களுக்கு முழுமையான மன அமைதியை வழங்கக்கூடியதாக அமைந்துள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: டிராக்டர்களை வடிவமைப்பதில் மஹிந்திரா மிகவும் அனுபவம் வாய்ந்த நிறுவனமாக விளங்குகிறது. இதனாலேயே இந்தியாவை தாண்டி ஆஸ்திரேலியா போன்ற வெளிநாடுகளிலும் மஹிந்திராவால் கோலோச்ச முடிகிறது. இதனை தக்க வைத்துக் கொள்ளும் முயற்சியாக புதியதாக உருவாக்கப்பட்டுள்ள ஓஜா டிராக்டர்கள் விவசாய துறையிலும், ஓட்டுநர் அனுபவத்திலும் புதிய பாய்ச்சலாக இருக்கும் என எதிர்பார்க்கிறோம்.


Click it and Unblock the Notifications








