மஹிந்திரா ஃபேக்ட்ரி ஓய்வே இல்லாம ரன் ஆகிட்டு இருக்கு... ஒரே மாதத்தில் 1 லட்சம் வாகனங்கள்!!
மஹிந்திரா & மஹிந்திரா (Mahindra & Mahindra) நிறுவனம் கடந்த செப்டம்பர் 2025 மாதத்தின் ஒட்டுமொத்த வாகன விற்பனை அறிக்கையை வெளியிட்டுள்ளது. வெளிநாட்டு ஏற்றுமதியையும் சேர்த்து, மஹிந்திரா நிறுவனம் மொத்தம் 1 லட்சத்து 298 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது கடந்த ஆண்டை விட 16% வளர்ச்சி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த 1 லட்சத்துக்கும் அதிகமான வாகனங்களில் மஹிந்திராவின் கார்கள், கமர்ஷியல் வாகனங்கள் மற்றும் டிராக்டர்கள் என அனைத்தும் அடங்குகின்றன. கார்கள் விற்பனையை மட்டும் தனியாக எடுத்து பார்த்தால், மஹிந்திரா 56,233 கார்களை விற்று 10% வளர்ச்சி கண்டுள்ளது. ஏற்றுமதியையும் கணக்கில் சேர்த்தால், இந்த எண்ணிக்கை 58,714 ஆக உயர்கிறது.

மஹிந்திராவின் வணிக (Commercial) வாகன விற்பனையைப் பொறுத்தவரை, உள்நாட்டு சந்தையில் 26,728 வாகனங்கள் விற்கப்பட்டு, 18% வளர்ச்சி பதிவு செய்யப்பட்டுள்ளது. செப்டம்பர் மாதத்தில் மஹிந்திரா எஸ்யூவி காரின் விற்பனை சற்று குறைவாக இருந்ததற்கான காரணம், மாதத்தின் கடைசி 10 நாட்களில் டிரெய்லர் வாகனங்களின் பற்றாக்குறை என மஹிந்திரா நிறுவனம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
இதுகுறித்து மஹிந்திரா நிறுவனத்தின் ஆட்டோமோட்டிவ் பிரிவின் தலைமை நிர்வாக அதிகாரி நளினிகாந்த் கொல்லகுண்டா பேசுகையில், "செப்டம்பர் மாதத்தில் நாங்கள் 56,233 எஸ்யூவி கார்களை விற்று 10% வளர்ச்சி கண்டுள்ளோம். ஒட்டுமொத்தமாக 1,00,298 வாகனங்களை விற்று, கடந்த ஆண்டின் இதே செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் 16% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளோம்.

ஜிஎஸ்டி சீர்திருத்தங்களும், கடந்த சில வாரங்களாக நிலவி வந்த தேவை அதிகரிப்பும் இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணங்கள்" என தெரிவித்தார். மேலும் பேசிய அவர், "ஜிஎஸ்டி 2.0 (GST 2.0) மற்றும் அதற்கு முந்தைய வாரங்களில் நிலவிய ஒத்திவைக்கப்பட்ட தேவை காரணமாக, நவராத்திரியின் (Navratri) முதல் ஒன்பது நாட்களில் டீலர்கள் மூலம் வாகனங்கள் விற்பனையில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளோம்" என்றும் கூறியுள்ளார்.
கடந்த ஆண்டு நவராத்திரியின் முதல் ஒன்பது நாட்களுடன் ஒப்பிடுகையில், எஸ்யூவி கார்கள் விற்பனையில் 60%க்கும் மேலான வளர்ச்சியையும், வணிக வாகனங்கள் விற்பனையில் 70%க்கும் மேலான வளர்ச்சியையும் மஹிந்திரா பதிவு செய்துள்ளது. பண்டிகைக் கால தேவை அதிகரிப்பால், டிரெய்லர் வாகனங்களை உருவாக்குவதில் சில இடையூறுகள் ஏற்பட்டுள்ளதாகவும் மஹிந்திரா தலைமை நிர்வாக அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

இந்த இடையூறுகளுக்கு மத்தியிலும், டீலர் நெட்வொர்க்குகளுக்கு டிரெயிலர் வாகனங்களை அனுப்பி வைப்பதை அதிகரிக்க மஹிந்திரா நிறுவனம் தொடர்ந்து முயற்சி செய்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். செப்டம்பர் 22 முதல் அக்டோபர் 1 வரை நடைபெற்ற நவராத்திரி பண்டிகையின் முதல் ஒன்பது நாட்களில் எஸ்யூவி விற்பனை 60%க்கு மேல் அதிகரித்துள்ளதாக மஹிந்திரா அறிவித்துள்ளது.
மஹிந்திராவின் கமர்ஷியல் வாகனங்கள் 2 டன்களுக்கும் குறைவாக மற்றும் 2 டன்களுக்கும் அதிகமாக என இரு பிரிவுகளாக விற்பனை செய்யப்படுகின்றன. இவை இல்லாமல், 3 சக்கர வாகனங்களும் மஹிந்திராவில் இருந்து மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படுகின்றன. மஹிந்திராவில் இருந்து மொத்தம் 13 ஆயிரத்து 17 மூன்று-சக்கர வாகனங்கள் கடந்த செப்டம்பர் மாதத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மஹிந்திரா நிறுவனம் கமர்ஷியல் வாகனங்கள் மற்றும் கார்கள் விற்பனை என இரண்டிலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை கண்டுள்ளது. குறிப்பாக, கார்கள் விற்பனையில் மஹிந்திராவின் வளர்ச்சி சமீப காலத்தில் வெகுவாக அதிகரித்துள்ளது. தசரா (Dussehra), தீபாவளி (Diwali) உள்ளிட்ட பண்டிகை நாட்கள் அடுத்தடுத்து வருவதால் மஹிந்திராவின் இந்த விற்பனை வளர்ச்சி மேலும் அதிகரிக்கும் என்பது உறுதி.


Click it and Unblock the Notifications









