இன்டிகோ பார்த்த வேலையால் எங்கே இந்த கார் விற்பனைக்கே வராம போயிருமோ நினைச்சோம்.. டெலிவரியையே தொடங்கிட்டாங்க!
மஹிந்திரா (Mahindra) நிறுவனத்தின் சமீபத்திய அறிமுகங்களில் ஒன்றாக பிஇ 6 (BE 6) கார் மாடல் உள்ளது. இது ஓர் எஸ்யூவி ரக எலெக்ட்ரிக் கார் மாடல் ஆகும். இது ஓர் எலெக்ட்ரிக் எஸ்யூவி ரக கார் (Electric SUV Car) என்பதைக் காட்டிலும் இன்னும் பல சிறப்புகளை இந்த கார் மாடல் தன்னுள் தாங்கி இருக்கின்றது. குறிப்பாக, அதன் கட்டுமஸ்தான தோற்றம் இதுவரை எந்தவொரு இந்திய நிறுவனமும் தயாரித்திராத ஒன்றாக உள்ளது.
சொல்லப்போனால், உற்பத்தி நிலைக்கு வந்த பின்னரும் அது கான்செப்ட் மாடலை போலவே காட்சியளிக்கின்றது. இத்தகைய காரையே விற்பனைக்கு வரவிடாமல் தடுக்கின்ற வேலைகளை பார்த்தது விமான போக்குவரத்து நிறுவனங்களில் ஒன்றான இன்டிகோ. இதன் இந்த வேலைக்கு முன்னதாக மஹிந்திரா நிறுவனம் இக்காருக்கு சூட்டிய பெயரே காரணம்.

இந்த எலெக்ட்ரிக் எஸ்யூவி காரை பிஇ 6இ எனும் பெயரிலேயே மஹிந்திரா நிறுவனம் அறிமுகப்படுத்தியது. இந்த பெயர் தங்களுடைய வழித் தடம் ஒன்றை பிரதிபலிக்கும் வகையில் இருப்பதாகக் கூறி இன்டிகோ நிறுவனம் நீதிமன்றத்தை நாடியது. இது மஹிந்திரா நிறுவனத்திற்கு மிகப் பெரிய சிக்கலை ஏற்படுத்தும் வகையில் அமைந்தது.
குறிப்பாக, இந்த மின்சார கார் விற்பனைக்கு வருமா என்கிற சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்தது. ஆனால், மஹிந்திராவோ தன்னுடைய புதுமுக மின்சாரக் காரை காப்பாற்றும் விதமாக அதிரடியாக பெயரை மாற்றியது. பிஇ 6இ என்று இருந்த பெயரை பிஇ 6 என மாற்றியது.
இப்போது அந்த காரை தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்யவே தொடங்கிவிட்டது. மஹிந்திரா நிறுவனத்தின் இந்த தயாரிப்பிற்கு இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைக்கத் தொடங்கி இருக்கின்றது. இதை உறுதிப்படுத்தும் விதமாக இதை புக் செய்த வாடிக்கையாளர்கள் கூட்டம் கூட்டமாக வந்து அக்காரை டெலிவரி பெற்றுக் கொண்டிருக்கின்றனர்.
இதுகுறித்த படங்களே தற்போது இணையத்தில் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. சமீபத்திலேயே மஹிந்திரா நிறுவனம் எக்ஸ்இவி 9இ எலெக்ட்ரிக் கார் மாடலின் டெலிவரி பணிகளைத் தொடங்கி இருந்தது. அதனுடன் சேர்த்து பிஇ 6 கார் மாடலின் டெலிவரியையும் அது தொடங்கி இருக்கின்றது என்பது தற்போது தெரிய வந்துள்ளது.

இந்தியாவில் பிஇ 6 ரூ. 18.9 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். 59 kWh மற்றும் 79 kWh ஆகிய இரண்டு விதமான பேட்டரி பேக் தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது.
நிற தேர்வைப் பொருத்த வரை எட்டு விதமான ஆப்ஷன்கள் இந்த காரில் வழங்கப்படுகின்றது. இதேபோல், ஐந்து விதமான வேரியண்டுகளில் இந்த கார் மாடல் நாட்டில் விற்பனைக்குக் கிடைக்கும். 59 kWh திறன் பேட்டரி பேக்கைக் கொண்டிருக்கும் பிஇ 6இ ஓர் முழு சார்ஜில் 557 கிமீ ரேஞ்சை வழங்கும்.

இதேபோல், இந்த 231 பிஎஸ் மற்றும் 380 என்எம் டார்க் ஆற்றலை உருவாக்கும் எலெக்ட்ரிக் மோட்டாரே இதில் இடம் பெற்றிருக்கும். ஆனால், 79 kWh திறன் பேட்டரி பேக்கைக் கொண்டிருக்கும் பிஇ 6-இல் 286 பிஎஸ் மற்றும் 380 என்எம் டார்க் ஆற்றலை உருவாக்கும் இ-மோட்டாரே வழங்கப்பட்டு இருக்கின்றது. இதேபோல், ரேஞ்சையும் இது சற்று அதிகமாகவே வழங்கும். ஓர் முழு சார்ஜில் 683 கிமீ ரேஞ்சையே அது தரும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இத்தகைய அதிக ரேஞ்ச் மற்றும் ஆற்றலை உருவாக்கும் திறன் கொண்ட பிஇ 6 எலெக்ட்ரிக் காரின் டெலிவரி பணிகளையே மஹிந்திரா நிறுவனம் தற்போது நாட்டில் தொடங்கி இருக்கின்றது. இந்த மின்சார கார் மாடலுக்கு மஹிந்திரா நிறுவனத்தின் மற்ற வாகனங்களுக்கு கிடைத்துக் கொண்டிருப்பதைப் போலவே நல்ல வரவேற்புக் கிடைக்கும் என நாங்கள் நம்புகின்றோம்.


Click it and Unblock the Notifications









