டாடா நிறுவனத்துக்கு என்ன தான் ஆச்சு... ரத்தன் டாடா மறைவுக்கு பின் கதையே மாறுது - ஓங்கும் மஹிந்திராவின் கை!
மாருதி சுஸுகி (Maruti Suzuki), இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் கார்களை விற்பனை செய்யும் பிரம்மாண்டமான நிறுவனம். இந்திய ஜப்பானிய கூட்டு நிறுவனமான இது, ஒவ்வொரு மாதமும் இலட்சக்கணக்கிலான கார்களை இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது. கார்கள் விற்பனையில் முதலிடத்தில் மற்ற நிறுவனங்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கும் மாருதி சுஸுகிக்கு அடுத்து 2வது இடத்தை பிடிப்பது யார் என்பதில் பலத்த போட்டி நடந்து வருகிறது. கடந்த சில மாதங்களாக பல திருப்பங்களை கொண்டுள்ள இந்த போட்டியை பற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்க உள்ளோம்.
கடந்த பல வருடங்களாகவே மாருதி சுஸுகிக்கு அடுத்து 2வது இடத்தை தென்கொரிய கார் நிறுவனமான ஹூண்டாய் (Hyundai) பிடிப்பது வழக்கம். ஆனால் சமீப காலமாக ஹூண்டாய் நிறுவனத்திற்கு போட்டியாக டாடா மோட்டார்ஸ் (Tata Motors) அதிக கார்களை விற்பனை செய்து சில மாதங்களில் 2வது இடத்தை தனதாக்கி இருந்தது.

கடந்த 2024ஆம் ஆண்டின் கடைசி டிசம்பர் மாதத்தில் கூட ஹூண்டாயை முந்தி 2வது இடத்தை டாடா மோட்டார்ஸ் பிடித்தது. ஆனால், புதிய 2025ஆம் ஆண்டின் முதல் மாதத்திலேயே டாடா நிறுவனம் கார்கள் விற்பனையில் சிறிய சரிவை சந்தித்துள்ளது. சரிவு என்று கூட சொல்ல முடியாது. டாடாவில் இருந்து எப்போதும்போல் கடந்த ஜனவரியிலும் கணிசமான எண்ணிக்கையில் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
ஆனால், மஹிந்திரா (Mahindra) நிறுவனம் அனைவரையும் ஆச்சிரியப்படுத்தும் விதமாக இமாலய கார்கள் விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்துள்ளது. கடந்த ஜனவரியில் மொத்தம் 50 ஆயிரத்து 659 கார்களை மஹிந்திரா விற்பனை செய்துள்ளது. இதற்கு முன்னர் ஒரே மாதத்தில் 50 ஆயிரம் கார்களை மஹிந்திரா விற்பனை செய்ததே கிடையாது.

45 ஆயிரம் மஹிந்திரா கார்கள் கூட ஒரு மாதத்தில் விற்பனை செய்யப்பட்டதாக கேள்விப்பட்டது இல்லை. கடந்த 2024ஆம் ஆண்டு கடைசி டிசம்பர் மாதத்தில் 41 ஆயிரத்து 424 கார்களையும், 2024 ஜனவரியில் 43 ஆயிரத்து 68 கார்களையும் மட்டுமே மஹிந்திரா விற்பனை செய்திருந்தது. ஆதலால், மஹிந்திராவுக்கு இது பிரம்மாண்டமான முன்னேற்றம் என்றுதான் சொல்ல வேண்டும்.
சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட மஹிந்திரா பிஇ 6 மற்றும் எக்ஸ்.இ.வி 9இ எலக்ட்ரிக் கார்கள் (BE 6 & XEV 9e Electric Cars)-இன் டெலிவிரிகள் துவங்கிய பின் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்பது உறுதி. 2024 டிசம்பரில் 2வது இடத்தில் இருந்த டாடா மோட்டார்ஸ் 4வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. டாடாவில் இருந்து கடந்த மாதத்தில் 48 ஆயிரத்து 316 கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

2024 டிசம்பரில் இதனை காட்டிலும் குறைவாக 44 ஆயிரத்து 221 கார்களை விற்பனை செய்து இந்த லிஸ்ட்டில் 2வது இடத்தை டாடா பிடித்தது. ஹூண்டாய் நிறுவனத்திலும் கார்கள் விற்பனை அதிகரித்துள்ளது. வழக்கத்தை காட்டிலும் 1,000- 2,000 கார்கள் அதிகமாக 54 ஆயிரத்து 3 கார்களை ஹூண்டாய் விற்பனை செய்துள்ளது. 2024 டிசம்பரில் 42 ஆயிரத்து 208 கார்களை மட்டுமே ஹூண்டாய் நிறுவனத்தால் விற்பனை செய்ய முடிந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: நடந்து முடிந்த 2025 ஜனவரி மாதத்தில் மேற்கூறப்பட்ட 4 கார் நிறுவனங்களின் விற்பனைகள் அனைத்தும் சிறப்பாகவே இருந்துள்ளன. மஹிந்திராவின் வளர்ச்சி கொஞ்சம் அதிகமாக உள்ளது. மஹிந்திராவை போன்று ஹூண்டாய் நிறுவனமும் அதன் கிரெட்டா எலக்ட்ரிக் (Creta Electric) காரை சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. டாடா மோட்டார்ஸில் இருந்து வருகிற ஏப்ரல் மாதத்திற்குள் ஹெரியர்.இவி (Harrier.ev) எலக்ட்ரிக் கார் அறிமுகம் செய்யப்பட உள்ளது.


Click it and Unblock the Notifications









