எப்படி இருந்த டாடா மோட்டார்ஸ் இப்போ இப்படி ஆயிடுச்சு! மஹிந்திரா தொடுவது எல்லாம் பொன்னாக மாறுது
டாடா மோட்டார்ஸ் (Tata Motors), மஹிந்திரா (Mahindra) இரண்டுமே இந்தியாவை சேர்ந்த முன்னணி கார் உற்பத்தி நிறுவனங்கள் என்பதை நான் கூற வேண்டியது இருக்காது என நினைக்கிறேன். அந்த அளவிற்கு கார்கள் விற்பனையில் ஜொலித்துக் கொண்டிருக்கும் இந்த நிறுவனங்களுக்கு இடையே சமீப மாதங்களாக பலத்த போட்டி நிலவி வருகிறது. இந்த நிலையில், கடந்த ஜனவரி மாத விற்பனையில் டாடா மோட்டார்ஸை மட்டுமில்லாமல், ஹூண்டாயையும் முந்தி அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில் மஹிந்திரா 2வது இடத்தை பிடித்துள்ளது. கடந்த பிப்ரவரி மாத விற்பனையில் என்ன நடந்துள்ளது என்பதை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.
இந்தியாவில் கார்கள் விற்பனையில் எப்போதும் மாருதி சுஸுகி (Maruti Suzuki) தான் முதலிடத்தில் இருந்து வருகிறது. மாருதி சுஸுகியை நெருங்குவது கூட மற்ற கார் நிறுவனங்களுக்கு பெரும் சவாலாக உள்ளது. ஏனெனில் அந்த அளவிற்கு ஒரு மாதத்தில் இலட்சக்கணக்கிலான கார்களை விற்பனை செய்யக்கூடிய நிறுவனமாக மாருதி சுஸுகி விளங்குகிறது.

கடந்த பிப்ரவரி மாதத்தில் கூட சுமார் 1.60 லட்சம் கார்களை மாருதி சுஸுகி விற்பனை செய்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இதற்கடுத்து 2வது இடத்தை ஹூண்டாய் நிறுவனம் தான் பிடிப்பது வழக்கம். கடந்த வருடங்களில் ஹூண்டாயை முந்தி சில மாதங்களில் கார்கள் விற்பனையில் 2வது இடத்திற்கு கூட டாடா மோட்டார்ஸ் வந்துள்ளது.
கடந்த 2024ஆம் ஆண்டின் கடைசி டிசம்பர் மாத விற்பனையில் கூட டாடா மோட்டார்ஸ் 2வது இடத்தை தான் பிடித்திருந்தது. ஆனால், அதற்கடுத்த 2025 ஜனவரி மாத விற்பனையில் ஒரேடியாக சறுக்கி 4வது இடத்திற்கு டாடா மோட்டார்ஸ் தள்ளப்பட்டது. அதாவது, அந்த மாதத்தில் மஹிந்திராவும் டாடா மோட்டார்ஸை முந்தியது. இது இந்திய ஆட்டோமொபைல் துறையில் பெரிதும் கவனத்தை ஈர்த்த நிலையில், கடந்த பிப்ரவரி மாத சேல்ஸ் ரிப்போர்ட் தற்போது வெளிவந்துள்ளது.

ஜனவரியில் அடைந்த சறுக்கலுக்கு வட்டியும் முதலுமாக டாடா மோட்டார்ஸ் பதிலடி கொடுக்கும் என எதிர்பார்த்தால், கடந்த பிப்ரவரி மாத விற்பனையிலும் மஹிந்திராவுக்கு அடுத்துதான் டாடா உள்ளது. டாடா முந்தியது மட்டுமில்லாமல், கடந்த பிப்ரவரி மாதத்தில் எல்லாரையும் ஆச்சிரியப்படுத்தும் விதமாக ஹூண்டாயையும் முந்தி இந்தியாவில் அதிக கார்களை விற்பனை செய்த நிறுவனமாக 2வது இடத்தை மஹிந்திரா தனதாக்கி உள்ளது.
இருப்பினும், மஹிந்திராவுக்கும் மாருதி சுஸுகிக்கும் இடையே சுமார் 1 லட்சம் கார்கள் வித்தியாசம் உள்ளது என்றால், மாருதி சுஸுகி எவ்வளவு உயரத்தில் உள்ளது என்பதை அறியலாம். கடந்த பிப்ரவரி மாதத்தில் டாடா மோட்டார்ஸில் இருந்து விற்பனை செய்யப்பட்ட கார்களின் எண்ணிக்கை 46 ஆயிரத்து 435 ஆகும்.

ஆனால், கடந்த 2024ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் 51 ஆயிரத்து 267 கார்களை இந்தியாவில் டாடா மோட்டார்ஸ் விற்பனை செய்திருந்தது. அதுவே, மஹிந்திரா நிறுவனம் கடந்த பிப்ரவரி மாதத்தில் மொத்தம் 50 ஆயிரத்து 420 கார்களை விற்பனை செய்துள்ளது. இது கடந்த ஆண்டு பிப்ரவரியை காட்டிலும் 18.91% அதிகமாகும். ஏனெனில், அந்த மாதத்தில் 42 ஆயிரத்து 401 கார்களை மட்டுமே மஹிந்திரா விற்பனை செய்திருந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: தொடர்ச்சியாக கடந்த 2 மாதங்களாக மஹிந்திரா கார்களின் விற்பனை எண்ணிக்கை 50 ஆயிரத்தை கடந்துள்ளது. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அதன் எலக்ட்ரிக் கார்கள் விற்பனையில் சிறிய சறுக்கலை கடந்த 1 வருடமாகவே சந்தித்து வருகிறது. அதுவும் ஒரு காரணம் ஆகும். முக்கியமான காரணம் என்னவென்றால், டாடா மோட்டார்ஸின் இடத்தில் மக்கள் மஹிந்திராவை வைத்து பார்க்க ஆரம்பித்து இருப்பதாகும்.


Click it and Unblock the Notifications









