கோடிக்கணக்கில் ஒருபக்கம் செலவு பண்ணிட்டு இருக்காங்க! சில இலட்சங்களில் பென்ஸ் காரை வரவழைத்த மஹிந்திரா கார் ஓனர்
மஹிந்திரா பொலிரோ (Mahindra Bolero), இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்படும் கார்களுள் ஒன்று. சொல்லப்போனால், சில வருடங்களுக்கு முன்பு வரையில் மஹிந்திரா நிறுவனம் ஒவ்வொரு மாதமும் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யும் நம்பர் ஒன் காராக பொலிரோ விளங்கியது. இப்போது வேறு சில மாடர்ன் மஹிந்திரா காரக்ள் அந்த நம்பர் ஒன் இடத்தை பிடித்துவிட்டன. இருப்பினும், மஹிந்திரா பொலிரோ கார்களின் விற்பனை குறைந்துவிட்டது என சொல்ல முடியாது. எப்போதும்போல், குறிப்பிட்ட எண்ணிக்கையிலான கஸ்டமர்கள் தொடர்ந்து வாங்கிக் கொண்டுதான் இருக்கின்றனர்.
ஏனெனில் பலரும் விரும்பக்கூடிய பெட்டகம் வடிவிலான தோற்றத்தில் பொலிரோ உருவாக்கப்படுகிறது. இருப்பினும், பொலிரோ காரை தனது விருப்பத்திற்கு ஏற்ப மாற்றிக்கொள்ள விரும்பும் கஸ்டமர்களும் இருக்கத்தான் செய்கின்றனர். அத்தகைய கஸ்டமர்கள் ஒருவர் தனது மஹிந்திரா பொலிரோ காரை விலையுயர்ந்த மெர்சிடிஸ்-பென்ஸ் ஜி-கிளாஸ் (Mercedes-Benz G-Class) கார் போன்று மாற்றிக் கொண்டுள்ளார்.

மஹிந்திரா பொலிரோ காரின் அடையாளமே அதன் பெட்டகம் வடிவிலான தோற்றம் ஆகும். இதன் மூலம் பொலிரோ காரினுள் அதிக இடவசதி கிடைக்கும் என்கிற காரணத்தினாலேயே பலரும் இந்த காரை போட்டிக் போட்டு வாங்கி வருகின்றனர். மெர்சிடிஸ்-பென்ஸ் ஜி-கிளாஸ் காரும் பெட்டகம் வடிவத்தை கொண்டதே ஆகும். ஆனால், ஜி-கிளாஸுக்கும், பொலிரோவுக்கும் ஏணி வைத்தால் கூட எட்டாது.
ஏனெனில், பொலிரோ போன்ற பெட்டகம் வடிவிலான கார்களுக்கு எல்லாம் முன்னுதாரணமாக இருப்பது, மெர்சிடிஸ்-பென்ஸ் ஜி-கிளாஸ் ஆகும். விலையை பொறுத்தவரையில், மலைக்கும் மடுவுக்கும் இடையேயான வித்தியாசம் போன்று, மிகவும் அதிக விலையில் ஜி-கிளாஸ் விற்பனை செய்யப்படுகிறது. மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனம் விற்பனை செய்யக்கூடிய விலையுயர்ந்த கார்களுள் ஒன்று, ஜி-கிளாஸ் ஆகும்.
அதுவே, மஹிந்திரா பொலிரோ ஆனது ஏறக்குறைய ரூ.10 லட்சத்தில் விலையை கொண்டதாக உள்ளது. இதனாலேயே இங்கு ஒரு பொலிரோ கார் ஓனர் தனது காரை ஜி-கிளாஸ் போன்று மாற்றிக் கொண்டுள்ளார். இதுதொடர்பாக இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவில், பொலிரோ காரில் இந்த மாற்றங்கள் யாவும் எவ்வாறு மேற்கொள்ளப்பட்டன என்பது விரிவாக விளக்கி கூறப்பட்டுள்ளது.
மேற்கொள்ளப்பட்டுள்ள மாடிஃபிகேஷன்களின்படி பார்க்கும்போது, இந்த பொலிரோ காரின் முன்பகுதி ஜி-கிளாஸ் வாகனத்தை போன்று உள்ளது. ஜி-கிளாஸில் இருப்பதை போன்று முன்பக்க கிரில் மற்றும் அதன் நடுவே மெர்சிடிஸ் நிறுவனத்தின் 3-ஸ்டார் லோகோ உள்ளிட்டவை இந்த பொலிரோவில் வழங்கப்பட்டுள்ளன. முன்பக்க பம்பர் கூட அப்படியே ஜி-கிளாஸ் வாகனத்தை போன்றுதான் உள்ளது. வட்ட வடிவிலன எல்இடி ஹெட்லைட்கள் உடன் எல்இடி டி.ஆர்.எல்-கள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. டர்ன் இண்டிகேட்டர்கள் பொனெட்டின் மீது பொருத்தப்பட்டுள்ளன.
முன்பக்கத்தை போலவே, இந்த பொலிரோ காரின் பக்கவாட்டு பகுதியும் ஜி-கிளாஸ் வாகனத்தை பெரிதும் ஒத்துக் காணப்படுகிறது. இரண்டுமே பெட்டகம் வடிவிலான கார் என்பதால், இதனை இவர்களால் செய்ய முடிந்துள்ளது. சக்கரங்களுக்கான வீல் ஆர்ச்சுக்கள் ஜி-கிளாஸில் இருப்பதை போல் நன்கு பெரியதாக வழங்கப்பட்டுள்ளன. ஜி-கிளாஸில் சக்கரங்கள் பிதுங்கி வெளியே வருவதை போல் வழங்கப்படுகின்றன. அதற்கேற்ப வீல் ஆர்ச்சுக்களில் கிளாடிங்ஸ் பெரியதாக்கப்பட்டு உள்ளன.
இதற்கு ஏற்றவாறு படிக்கட்டும் அகலமாக்கப்பட்டு உள்ளதால், இந்த பொலிரோ கார் பார்ப்பதற்கே மிகவும் ரக்டு தோற்றத்தில் காட்சியளிக்கிறது. வெளிப்பக்கத்தை போலவே, இந்த பொலிரோ காரின் உட்புறமும் முழுவதுமாக கருப்பு நிறத்தில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. இந்த பொலிரோ காருக்கு உள்ளே கண்ட்ரோல் பொத்தான்கள் உடன் ஸ்டேரிங் சக்கரம், டர்பைன் வடிவ ஏசி வெண்ட்ஸ், டிரைவருக்கான தகவல்களை வழங்க & பொழுதுப்போக்கிற்கு பெரிய டிஸ்பிளே உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மஹிந்திரா பொலிரோ காரை இவ்வாறு மெர்சிடிஸ்-பென்ஸ் ஜி-கிளாஸ் கார் போன்று மாற்றுவது நல்ல யோசனை ஆகும். ஏனெனில், இரண்டும் தோற்றத்தில் கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருப்பதால், காரின் உடலில் கை வைக்க வேண்டியது இல்லை. இதனால், சில இலட்ச ரூபாய்களில் இந்த மஹிந்திரா பொலிரோ காரை இவ்வாறு மாற்றி உள்ளனர்.


Click it and Unblock the Notifications








