மஹிந்திரா தொடுவது எல்லாம் பொன்னாக மாறுது... டாடாவும் ஒரு சமயத்தில் இப்படி தான் இருந்துச்சு
மஹிந்திரா (Mahindra), இந்தியாவின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனங்களுள் ஒன்று என்பதை நான் கூற வேண்டியது இல்லை. குறிப்பாக, கடந்த சில மாதங்களாக மஹிந்திரா கார்களின் விற்பனை பெரிய அளவில் வளர்ச்சி கண்டு வருகிறது. எந்த அளவிற்கு என்றால், நடந்து முடிந்த 2025 ஜனவரி மாதத்தில் கார்கள் விற்பனையில் டாடா மோட்டார்ஸ் (Tata Motors)-ஐ முந்தி மஹிந்திரா 3வது இடத்தை தனதாக்கி உள்ளது. அப்படி எத்தனை கார்களை தான் கடந்த மாதத்தில் மஹிந்திரா விற்பனை செய்துள்ளது என்பதை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.
இந்தியாவில் கார்கள் விற்பனையில் எப்போதும் முதலிடத்தை மாருதி சுஸுகி (Maruti Suzuki) பிடிப்பது வழக்கம். கடந்த ஜனவரி மாதத்திலும் அதுதான் தொடர்ந்துள்ளது. ஆனால், மாருதி சுஸுகிக்கு அடுத்து 2வது இடத்தை பிடிப்பதில் ஹூண்டாய் மற்றும் டாடா மோட்டார்ஸ் நிறுவனங்களுக்கு இடையே பலத்த போட்டி நிலவி வருகிறது.

கடந்த 2024 டிசம்பர் மாதத்தில் கார்கள் விற்பனையில் 2வது இடத்தை ஹூண்டாயை முந்தி டாடா மோட்டார்ஸ் பிடித்திருந்தது. ஆனால், கடந்த 2025 ஜனவரி மாத விற்பனையில் டாடா மோட்டார்ஸ் 4வது இடத்திற்கு சரிந்துள்ளது. ஹூண்டாய்க்கும், டாடாவுக்கும் இடையில் மஹிந்திரா வந்துள்ளது. கடந்த மாதத்தில் மஹிந்திராவில் இருந்து விற்பனை செய்யப்பட்ட கார்களின் எண்ணிக்கை 50,659 ஆகும்.
அதுவே, கடந்த 2024ஆம் ஆண்டின் இதே ஜனவரி மாதத்தில் வெறும் 43,068 கார்களை மட்டுமே மஹிந்திரா விற்பனை செய்திருந்தது. அதேபோல், கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையிலும் மஹிந்திரா கார்கள் விற்பனை ஆனது பெரிய அளவில் அதிகரித்துள்ளது. இன்னும் சொல்லப்போனால், ஒரு மாதத்தில் 50 ஆயிரத்துக்கும் அதிகமான எண்ணிக்கையில் கார்களை மஹிந்திரா விற்பனை செய்வது இதுவே முதல்முறை ஆகும்.

கடந்த மாதத்தில் மஹிந்திராவில் இருந்து அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்ட கார், ஸ்கார்பியோ (Scorpio) ஆகும். ஸ்கார்பியோ-என் மற்றும் ஸ்கார்பியோ கிளாசிக் என இரு விதமான ஸ்கார்பியோ கார்கள் விற்பனை செய்யப்படும் நிலையில், இவை மொத்தமாக கடந்த ஜனவரி மாதத்தில் 15 ஆயிரத்து 442 ஸ்கார்பியோ கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
2024 ஜனவரி மாதத்தில் 14 ஆயிரத்து 293 ஸ்கார்பியோ கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இந்த வகையில் பார்த்தால், ஸ்கார்பியோ கார்கள் விற்பனை ஆனது 8% அதிகரித்துள்ளது. ஸ்கார்பியோவுக்கு அடுத்து 2வது இடத்தில் பொலேரோ (Bolero) உள்ளது. கடந்த மாதத்தில் 8,682 பொலேரோ கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால், 2024 ஜனவரியில் இதனை காட்டிலும் 13% அதிகமாக 9,964 பொலேரோ கார்களை மஹிந்திரா விற்பனை செய்திருந்தது.

எக்ஸ்யூவி 3எக்ஸ்.ஓ இந்த வரிசையில் 8,454 யூனிட்கள் விற்பனை உடன் 3வது இடத்தில் உள்ளது. 4வது மற்றும் 5வது இடங்களில் எக்ஸ்யூவி700 மற்றும் தார் வாகனங்கள் முறையே 8,399 மற்றும் 7,557 யூனிட்கள் விற்பனை உடன் உள்ளன. இவை இல்லாமல், 1,837 பிஇவி எலக்ட்ரிக் கார்களையும், 288 எக்ஸ்யூவி400 எலக்ட்ரிக் கார்களையும் கடந்த மாதத்தில் மஹிந்திரா விற்பனை செய்துள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: எக்ஸ்யூவி400 எலக்ட்ரிக் காரின் விற்பனையை தவிர்த்து மற்ற அனைத்து மஹிந்திரா கார்களின் விற்பனையும் கணிசமாக அதிகரித்து வருகிறது. பொலேரோ கார்களின் விற்பனை இன்னும் கொஞ்சம் முன்னேற்றம் கண்டால் ஹூண்டாயை முந்தி மஹிந்திரா நிறுவனம் 2வது இடத்தை பிடிக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை.


Click it and Unblock the Notifications









