மஹிந்திராவின் ரேஞ்ச் சில மாதங்களிலேயே வேற லெவலுக்கு மாறிடுச்சு!! மஹிந்திரா கார் ஓனர்கள் கெத்தா சொல்லிக்கலாம்!
மஹிந்திரா (Mahindra) நிறுவனத்தின் கார்கள் விற்பனை சமீப காலத்தில் வெகுவாக முன்னேற்றம் கண்டுள்ளது. அதிலிலும் குறிப்பாக, கடந்த ஒரு வருடத்தில் கார்கள் விற்பனையில் இமாலய உயரத்தை குறுகிய காலத்திலேயே மஹிந்திரா எட்டியுள்ளது. இதற்கு பல காரணங்கள் உள்ளன என்றாலும், அவற்றுள் முக்கியமான காரணமாக பார்க்கப்படுவது, டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனத்தில் பணியாற்றிய பிரதாப் போஸ் (Pratap Bose) மஹிந்திராவுக்கு மாறியது ஆகும். ஏனெனில், இவர் வடிவமைத்து கொடுத்த முதல் மஹிந்திரா காரான எக்ஸ்யூவி 3எக்ஸ்.ஓ (XUV 3XO) உடனடியாக மக்கள் மத்தியில் கவனத்தை பெற்றது.
அதன்பின், பிரதாப் போஸின் வடிவமைப்பில் வெளியான தார் ராக்ஸ் (Thar ROXX) வாகனத்திற்கும், பிஇ 6 (BE 6) மற்றும் எக்ஸ்இவி 9இ (XEV 9e) எலக்ட்ரிக் கார்களுக்கும் சிறப்பான வரவேற்பு கிடைத்து வருகிறது. இதன் மூலமாக, மஹிந்திரா கார்களின் ஒட்டுமொத்த விற்பனை எண்ணிக்கையும் சமீப மாதங்களில் பெரிய அளவில் முன்னேற்றத்தை கண்டுள்ளது.

இதனை வெளிக்காட்டும் வகையில் கடந்த 2025 ஏப்ரல் மாதத்தில் மஹிந்திராவில் இருந்து விற்பனை செய்யப்பட்ட கார்களின் எண்ணிக்கை குறித்த விபரங்கள் கிடைத்துள்ளன. இந்தியாவில் கார்களை விற்பனை செய்வதில் மாருதி சுஸுகி (Maruti Suzuki) முதலிடத்தில் உள்ளது. மாதத்திற்கு இலட்சக்கணக்கிலான கார்களை விற்பனை செய்யக்கூடிய மாருதி சுஸுகியை இந்தியாவில் வேறொரு கார் நிறுவனம் முந்துவதற்கு இன்னும் பல காலம் ஆகும்.
மாருதி சுஸுகிக்கு அடுத்து 2வது இடத்தை பெரும்பாலும் ஹூண்டாய் (Hyundai) பிடிப்பது வழக்கம். மாதத்தோறும் ஏறக்குறைய 50 ஆயிரம் கார்களை விற்பனை செய்வதன் மூலம் ஹூண்டாய் 2வது இடத்தை பிடித்துவந்தது. மிகவும் அரிதாக, எப்போதாவது சில மாதங்களில் ஹூண்டாயை முந்தி டாடா மோட்டார்ஸ் 2வது இடத்தை பிடிப்பது உண்டு. கடந்த 2024ஆம் ஆண்டில் இரு மாதங்களில் டாடா மோட்டார்ஸ் 2வது இடத்தை பிடித்தது.

ஆனால், இந்த 2025ஆம் வருடத்தில் ஹூண்டாய் மற்றும் டாடா மோட்டார்ஸ் நிறுவனங்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் விதமாக, வழக்கமாக 4வது இடத்தை பிடிக்கக்கூடிய மஹிந்திரா 2வது இடத்தை பிடிக்க ஆரம்பித்துள்ளது. கடந்த 2025 பிப்ரவரி மாத விற்பனையில் ஹூண்டாயை 3வது இடத்திற்கு தள்ளி 2வது இடத்தை மஹிந்திரா சொந்தமாக்கியதை பார்த்திருந்தோம்.
அதன்பின், மார்ச் மாத விற்பனையில் ஹூண்டாய் மீண்டும் தனது 2வது இடத்தை பெற்றது. ஆனால், கடந்த ஏப்ரல் மாத விற்பனையில் மீண்டும் மஹிந்திரா இந்தியாவின் கார்கள் விற்பனையில் மாருதி சுஸுகிக்கு அடுத்து 2வது இடத்தை பிடித்துள்ளது. ஹூண்டாய் இந்த முறை 3வது இடத்திற்கு அல்ல... அதனினும் மேலும் ஒரு இடம் சறுக்கி 4வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
டாடா மோட்டார்ஸ் தனது வழக்கமான 3வது இடத்தை சொந்தமாக்கி உள்ளது. மஹிந்திராவில் இருந்து கடந்த 2025 ஏப்ரல் மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட கார்களின் எண்ணிக்கை 52 ஆயிரத்து 330 ஆகும். கடந்த 2024ஆம் ஆண்டில் இதே ஏப்ரல் மாதத்தில் வெறும் 41 ஆயிரத்து 8 கார்களை மட்டுமே மஹிந்திரா விற்பனை செய்திருந்தது.
இந்த வகையில் பார்க்கும்போது, மஹிந்திரா கார்கள் விற்பனை ஆனது 27.61%, அதாவது சுமார் 11 ஆயிரத்து 322 கார்கள் அதிகரித்துள்ளது. கடந்த 2025 மார்ச் மாதத்தில் 48 ஆயிரத்து 48 கார்கள் விற்பனை உடன் 4வது இடத்தை மஹிந்திரா பிடித்திருந்தது. மார்ச் உடன் ஒப்பிடுகையில், ஏப்ரலில் மஹிந்திரா கார்கள் விற்பனை எண்ணிக்கை ஆனது 8.91%, அதாவது 4,282 யூனிட்கள் அதிகரித்துள்ளது.
வழக்கம்போல், மஹிந்திராவில் இருந்து கடந்த ஏப்ரல் மாதத்தில் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்ட காராக ஸ்கார்பியோ (Scorpio) முதலிடத்தை பிடித்துள்ளது. ஸ்கார்பியோ-என் மற்றும் ஸ்கார்பியோ கிளாசிக் என இரு விதமான ஸ்கார்பியோ கார்கள் விற்பனை செய்யப்படும் நிலையில், இவை இரண்டும் மொத்தமாக கடந்த ஏப்ரல் மாதத்தில் 15 ஆயிரத்து 534 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
அதாவது, மஹிந்திரா காரை வாங்க விரும்புபவர்களில் கிட்டத்தட்ட மூன்றில் ஒருவர் ஸ்கார்பியோ காரை வாங்குவதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2024 ஏப்ரல் மாதத்தில் 14 ஆயிரத்து 807 ஸ்கார்பியோ கார்களை மட்டுமே மஹிந்திரா நிறுவனம் விற்பனை செய்திருந்தது. இந்த வகையில் பார்க்கும்போது ஸ்கார்பியோ கார்கள் விற்பனை கடந்த 1 வருடத்தில் 4.91% அதிகரித்துள்ளது.
கடந்த 2025 ஏப்ரல் மாதத்தில் இன்னும் குறைவாக 13 ஆயிரத்து 913 ஸ்கார்பியோ கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. ஸ்கார்பியோவுக்கு அடுத்து கடந்த மாதத்தில் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்ட மஹிந்திரா காராக தார் 2வது இடத்தை பிடித்துள்ளது. கடந்த மாதத்தில் மொத்தம் 10 ஆயிரத்து 703 தார் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
கடந்த 2024ஆம் ஆண்டில், மாதத்திற்கு 6 ஆயிரம் தார் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், அது கடந்த ஏப்ரல் மாதத்தில் வெற்றிக்கரமாக 10 ஆயிரத்தை தாண்டி உள்ளது. இந்த 10 ஆயிரத்து 703 தார் வாகனங்களில் 3-கதவு தார் மற்றும் 5-கதவு தார் ராக்ஸ் வாகனங்கள் அடங்குகின்றன.
தாருக்கு அடுத்து 3வது இடத்தில் ஸ்கார்பியோவை போன்று நீண்ட வருடங்களாக விற்பனை செய்யப்பட்டு வரும் மஹிந்திரா வாகனமான பொலிரோ (Bolero) 8,380 யூனிட்கள் விற்பனை உடன் உள்ளது. ஆனால் உண்மையில், 2024 ஏப்ரலை காட்டிலும் இந்த ஆண்டு ஏப்ரலில் விற்பனை குறைந்த மிகவும் சில மஹிந்திரா கார்களுள் பொலிரோவும் ஒன்றாகும்.
ஏனெனில், 2024 ஏப்ரலில் 9,537 பொலிரோ கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இதற்கடுத்து 4வது மற்றும் 5வது இடங்களில் மஹிந்திராவின் லேட்டஸ்ட் எஸ்யூவி கார்களான எக்ஸ்யூவி 3எக்ஸ்.ஓ மற்றும் எக்ஸ்யூவி700 உள்ளன. இவற்றின் கடந்த ஏப்ரல் மாத விற்பனை எண்ணிக்கைகள் முறையே 7,568 மற்றும் 6,811 ஆகும். 6வது இடத்தில் 2,441 யூனிட்கள் விற்பனை உடன் எக்ஸ்இவி 9இ எலக்ட்ரிக் கார் உள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இவை இல்லாமல், கடந்த ஏப்ரல் மாதத்தில் 550 பிஇ 6 மற்றும் 337 எக்ஸ்யூவி400 இவி எலக்ட்ரிக் கார்களையும், 6 மராஸ்ஸோ கார்களையும் மஹிந்திரா விற்பனை செய்துள்ளது. ஸ்கார்பியோ மற்றும் தார் கார்களின் விற்பனை வரும் மாதங்களில் அதிகரிக்கும் என்பது நாம் எதிர்பார்த்த ஒன்றுதான். இருப்பினும், விலைமிக்க மஹிந்திரா எலக்ட்ரிக் காரான எக்ஸ்இவி 9இ காருக்கு மக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பு கிடைத்து வருவது நாம் எதிர்பார்க்காத ஒன்றாகும்.


Click it and Unblock the Notifications








