டீசல் என்ஜின் கார்களில் அப்படி என்ன ஸ்பெஷல்? மஹிந்திரா ஆலையில் பெட்ரோல் என்ஜினை ஸ்டாப் பண்ண வேண்டி வருமா?
மஹிந்திரா (Mahindra), இந்தியாவில் கார்களை விற்பனை செய்வதில் மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவனத்துக்கு அடுத்து 2வது இடத்தை பிடித்துவரும் உள்நாட்டு கார் நிறுவனம். கடந்த வருடங்களில் கார்கள் விற்பனையில் 4வது இடத்தையே பிடித்துவந்த மஹிந்திரா நிறுவனம், கடந்த சில மாதங்களாகவே ஹூண்டாய் (Hyundai) மற்றும் டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனங்களை முந்தி 2வது இடத்தை தனதாக்கி வருகிறது. மஹிந்திராவின் இந்த வளர்ச்சிக்கு சமீப காலத்தில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய மஹிந்திரா கார்கள் ஒரு காரணம் என்றால், மற்றொரு காரணம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
அது என்னவென்றால், மஹிந்திராவில் இருந்து பெட்ரோல் கார்களை காட்டிலும் டீசல் கார்களே அதிக எண்ணிக்கையில் விற்பனையாகுகின்றன. இதுகுறித்து நமக்கு கிடைத்துள்ள புள்ளி விபரங்களின்படி, கடந்த 2024 ஏப்ரல் மாதத்தில் இருந்து 2025 மார்ச் மாதம் வரையில் மொத்தம் 5 லட்சத்து 38 ஆயிரத்து 597 கார்களை மஹிந்திரா விற்பனை செய்துள்ளது.

இதில், மஹிந்திரா பெட்ரோல் கார்களின் எண்ணிக்கை எத்தனை என்று தெரியுமா? வெறும் 1 லட்சத்து 13 ஆயிரத்து 268 மட்டுமே ஆகும். மீதி 4 லட்சத்து 25 ஆயிரத்து 329 கார்கள் டீசல் கார்களாகும். இந்த அளவிற்கு, மஹிந்திராவில் இருந்து மக்களால் வாங்கப்படும் கார்களில் 4இல் மூன்று கார்கள் டீசல் கார்களாக உள்ளன.
குறிப்பாக, மஹிந்திராவில் அதிக பேர் வாங்கும் ஸ்கார்பியோ (Scorpio) கார்களில் கடந்த 2024 ஏப்ரல்- 2025 மார்ச் வரையில் விற்பனை செய்யப்பட்டவைகளில் வெறும் 11 ஆயிரத்து 447 ஸ்கார்பியோ கார்கள் மட்டுமே பெட்ரோல் என்ஜினை கொண்டவை ஆகும். மீதி, சுமார் 1 லட்சத்து 53 ஆயிரத்து 395 ஸ்கார்பியோ கார்கள் டீசல் என்ஜினை கொண்டவை ஆகும்.

அதாவது, மஹிந்திரா ஸ்கார்பியோ காரை வாங்குபவர்களில் 16 பேரில் ஒருவர் மட்டுமே பெட்ரோல் என்ஜின் உடன் ஸ்கார்பியோவை வாங்குகின்றனர். மேலும், இதனாலேயே டீசல் என்ஜின் ஆப்ஷன் மட்டும் கிடைக்கும் பொலேரோ (Bolero) காரின் விற்பனையும் சிறப்பாக உள்ளது. மேற்கூறப்பட்ட கடந்த 1 வருட காலத்தில் மட்டும் சுமார் 94 ஆயிரத்து 750 பொலேரோ கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
ஸ்கார்பியோ காரை போன்று, மஹிந்திரா எக்ஸ்யூவி700 (XUV700), தார் (Thar) மற்றும் தார் ராக்ஸ் (Thar ROXX) வாகனங்களும் பெட்ரோல் என்ஜினை காட்டிலும், டீசல் என்ஜின் உடன் தான் அதிக எண்ணிக்கையில் கஸ்டமர்களால் வாங்கப்படுகின்றன. குறிப்பாக, 3 கதவுகளை மட்டுமே கொண்ட தார் வாகனம் கடந்த 2024-25 நிதியாண்டில் பெட்ரோல் என்ஜின் உடன் வெறும் 3,235 யூனிட்களும், டீசல் என்ஜின் உடன் சுமார் 43 ஆயிரத்து 9 யூனிட்களும் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

அதேபோல், 5-கதவுகளை கொண்ட தார் ராக்ஸ் வாகனமும் டீசல் என்ஜின் உடன் 32 ஆயிரத்து 410 யூனிட்களும், பெட்ரோல் என்ஜின் உடன் வெறும் 6 ஆயிரத்து 180 யூனிட்களும் கடந்த நிதியாண்டில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இத்தனை மஹிந்திரா கார்கள் டீசல் என்ஜின் உடனே அதிகமாக விற்பனை செய்யப்படும் போதிலும், ஒரேயொரு மஹிந்திரா கார் மட்டும் பெட்ரோல் என்ஜின் உடன் அதிகமாக விற்பனையாகிறது. அது, எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ (XUV 3XO) ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ என்கிற ஒரு மஹிந்திரா கார் மட்டுமே டீசல் என்ஜினை காட்டிலும், பெட்ரோல் என்ஜின் உடன் டபுள் மடங்கு அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளது. மற்றப்படி, டீசல் கார்கள் தான் மஹிந்திராவின் பிரதானமான நம்பிக்கைக்கு உரியவைகளாக உள்ளன. இதனாலேயே, ஸ்கார்பியோ காரில் அவ்வப்போது புது, புது டீசல் வேரியண்ட்களை மஹிந்திரா அறிமுகம் செய்கிறது.


Click it and Unblock the Notifications









