ஒரே மாதத்தில் 15 ஆயிரம் கஸ்டமர்ஸ் குறைந்தது சாதாரண விஷயம் இல்ல! மஹிந்திராவுக்கு ஷாக் கொடுத்த டாடா!
2025 நவம்பரில் இந்தியாவின் கார் விற்பனை கடந்த ஆண்டு நவம்பரை விட 18.17% உயர்ந்த நிலையில், பெரும்பாலான முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்கள் விற்பனையில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன. ஆனால் அதேநேரம், கிட்டத்தட்ட அனைத்து கார் நிறுவனங்களும் அக்டோபரை காட்டிலும் நவம்பரில் விற்பனை சரிவை சந்தித்துள்ளன.
குறிப்பாக, மஹிந்திரா நிறுவனம் 2025 அக்டோபரில் 71,624 கார்கள் விற்பனை என்ற மிக உயர்ந்த விற்பனையை எட்டிய நிலையில், நவம்பர் மாத விற்பனை 21% குறைந்து 56,336 யூனிட்களாக பதிவாகியுள்ளது. இருப்பினும், 46,222 மஹிந்திரா கார்கள் விற்கப்பட்ட 2024 நவம்பரில் இருந்து 22% உயர்வு கண்டுள்ளது. அதிக கார்களை விற்பனை செய்த நிறுவனங்களின் பட்டியலில் மஹிந்திரா 3வது இடத்தில் இருந்ததுடன், சந்தைப் பங்கும் 13.1%-இல் இருந்து 13.5% ஆக உயர்ந்துள்ளது.

மஹிந்திராவின் ஸ்கார்பியோ/என் (Scorpio/N) கார், 15,616 யூனிட்கள் விற்பனை உடன் இந்த பட்டியலில் மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளது. இது கடந்த ஆண்டு நவம்பரின் 12,704 யூனிட்களுடன் ஒப்பிடுகையில் 23% வளர்ச்சியை காட்டுகிறது. எனினும், 2025 அக்டோபரில் விற்பனையான 17,880 ஸ்கார்பியோ கார்களுடன் ஒப்பிடுகையில் மாதாந்திர விற்பனை 13% சரிந்துள்ளது.
2026 ஸ்கார்பியோ என் ஃபேஸ்லிஃப்ட் சோதனை செய்யப்பட்டு வந்தாலும், அதன் வெளியீடு இப்போதைக்கு இருக்காது. ஸ்கார்பியோவுக்கு அடுத்ததாக, மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ (XUV 3XO) 10,601 யூனிட்கள் விற்பனையாகி இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. இது 2024 நவம்பரின் 7,656 யூனிட்களுடன் ஒப்பிடுகையில் 38% வளர்ச்சியாகும். ஆனால், 2025 அக்டோபர் மாத விற்பனையான 12,237 யூனிட்களுடன் ஒப்பிடும்போது, இது 13% சரிவை சந்தித்துள்ளது.

விற்பனை எண்ணிக்கையில் எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ காரை மஹிந்திரா பொலேரோ (Bolero) 10,512 யூனிட்கள் விற்பனை உடன் நெருக்கமாகப் பின்தொடர்கிறது. இது 2024 நவம்பரின் 7,045 யூனிட்களில் இருந்து 49% உடன் ஒரு வலுவான வளர்ச்சியாகும். இருப்பினும், 2025 அக்டோபரின் 14,343 யூனிட்களுடன் ஒப்பிடுகையில் மாதாந்திர விற்பனை 27% குறைந்துள்ளது.
மஹிந்திரா தார்/ராக்ஸ் (Thar/Roxx) விற்பனை 2024 நவம்பரின் 8,708 யூனிட்களில் இருந்து 10,234 யூனிட்களாக 18% அதிகரித்துள்ளது. முந்தைய மாதமான 2025 அக்டோபரில் 12,029 யூனிட்கள் விற்பனையாகிய நிலையில், இந்த மஹிந்திரா ஆஃப்-ரோடு எஸ்யூவி (Off-road SUV) வாகனம் 14.92% குறைவான விற்பனையை சந்தித்துள்ளது. நான்கு ஆண்டுகளில் 3 லட்சம் உரிமையாளர்களைக் கடந்த எக்ஸ்யூவி700 (XUV700) காரின் விற்பனை கடந்த மாதத்தில் சரிவை சந்தித்திருக்கிறது.
இந்த பிரீமியம் எஸ்யூவி கார் 2024 நவம்பர் மாத விற்பனை உடன் ஒப்பிடுகையிலும் 32% சரிந்து, அதேபோல் 2025 அக்டோபர் மாத விற்பனை உடன் ஒப்பிடுகையிலும் 39% குறைந்து கடந்த மாதம் 6,176 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. மஹிந்திராவின் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார்கள் பிரிவில், 'எக்ஸ்இவி 9இ' (XEV 9e) கடந்த மாதம் 1,423 யூனிட்கள் விற்பனையாகி உள்ளது. பிஇ6 (BE6) எலெக்ட்ரிக் கார் 1,314 யூனிட்கள் விற்பனையாகியுள்ளது.
மஹிந்திராவின் மற்றொரு எலெக்ட்ரிக் காரான எக்ஸ்யூவி400 (XUV400) 2025 அக்டோபரில் விற்பனையான 152 யூனிட்களுடன் ஒப்பிடுகையில் 166% மாதாந்திர வளர்ச்சியைப் பதிவு செய்து கடந்த மாதத்தில் 404 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. மஹிந்திரா மராஸ்ஸோ (Marazzo) கார் 2024 நவம்பரில் 9 யூனிட்களும், 2025 அக்டோபரில் 2 யூனிட்களும் விற்பனையான நிலையில், கடந்த மாதம் 47 யூனிட்கள் விற்பனையாகி, 422% ஆண்டுக்கு ஆண்டு வளர்ச்சியையும், 2250% மாதாந்திர வளர்ச்சியையும் கண்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரின் இந்த சரிவுக்கு மத்தியிலும், மஹிந்திரா நிறுவனம் 'எக்ஸ்யூவி 7எக்ஸ்ஓ' (XUV7XO) என்கிற பெயரில் அதன் ஃபேஸ்லிஃப்ட் காரை சந்தையில் அறிமுகப்படுத்தத் தயாராகி வருகிறது. சமீபத்திய டீசரின்படி, இது 2026 ஜனவரி 5 அன்று அறிமுகமாகும் என்று தெரிகிறது. சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட 'எக்ஸ்இவி 9எஸ்' (XEV 9S) எதிர்வரும் மாதங்களில் மஹிந்திராவின் எலெக்ட்ரிக் கார்கள் விற்பனையை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








