16,000 கோடி ரூபாயை வாரி இறைக்கும் மஹிந்திரா... போட்டது எல்லாத்தையும் திருப்பி எடுத்திடுமா?
மஹிந்திரா (Mahindra) நிறுவனம் புனே (Pune)-இல் உள்ள அதன் சாகான் தொழிற்சாலையில் எலக்ட்ரிக் வாகனங்களை மட்டுமே உற்பத்தி செய்வதற்கான பிரத்யேகமான பகுதியை திறந்துள்ளது. சுமார் 2.83 சதுர கிமீ பரப்பளவு கொண்ட மஹிந்திராவின் புனே தொழிற்சாலையில் புதியதாக திறக்கப்பட்டுள்ள இந்த பகுதி ஆனது மஹிந்திராவின் எதிர்கால எலக்ட்ரிக் கார்களை உற்பத்தி செய்வதற்கான பகுதியாக கொண்டுவரப்பட்டுள்ளது. இங்கு எலக்ட்ரிக் வாகனங்கள் உற்பத்தி செய்யப்படுவது மட்டுமின்றி, அவற்றிற்கான பேட்டரிகளை பொருத்தும் பணிகளும் நடைபெற உள்ளது. இதனை பற்றிய கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.
இந்தியா உள்பட உலகம் முழுவதும் எலக்ட்ரிக் கார்களுக்கான மார்க்கெட் வேகமாக அதிகரித்து வருகிறது. இதனை பயன்படுத்திக் கொள்ள டாடா மோட்டார்ஸ், எம்ஜி மோட்டார் போன்ற கார் நிறுவனங்கள் தயாராக உள்ளன. அதேபோன்று, இந்தியாவின் முன்னணி கார் நிறுவனமாக விளங்கும் மஹிந்திராவும் எலக்ட்ரிக் கார்களுக்காக பல்வேறு திட்டங்களை வகுத்துள்ளது.

சமீபத்தில், பி.இ 6 (BE 6) மற்றும் எக்ஸ்.இ.வி 9இ (XEV 9e) எலக்ட்ரிக் கார்கள் மஹிந்திராவில் இருந்து அறிமுகம் செய்யப்பட்டதை பார்த்திருப்பீர்கள் என நினைக்கிறேன். இதேபோன்று இந்த 2025ஆம் வருடத்திலும் ஏகப்பட்ட எலக்ட்ரிக் எஸ்யூவி கார்களை மார்க்கெட்டில் அறிமுகம் செய்ய மஹிந்திரா திட்டமிட்டுள்ளது. புது, புது எலக்ட்ரிக் கார்களை அறிமுகம் செய்தால் மட்டும் போதுமா? அவற்றை உற்பத்தி செய்வதற்கான இடமும் வேண்டும் அல்லவா.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் எலக்ட்ரிக் கார்களை உற்பத்தி செய்வதற்காக என்றே பிரத்யேகமாக ஒரு தொழிற்சாலையை பயன்படுத்தி வருகிறது. அந்த தொழிற்சாலை ஆனது ஃபோர்டு நிறுவனம் இந்தியாவில் கைவிட்டு சென்ற தொழிற்சாலை ஆகும். ஆனால், மஹிந்திரா தற்போதுதான் எலக்ட்ரிக் கார்கள் விற்பனையில் இறங்கியுள்ளதால், தனது புனே தொழிற்சாலைக்கு உள்ளேயே எலக்ட்ரிக் கார்களை உற்பத்தி செய்வதற்கான பகுதியை கட்டியெழுப்பி உள்ளது.

மஹாராஷ்டிரா மாநிலம், புனேவில் சாகான் (Chakan) என்கிற பகுதியில் மஹிந்திரா நிறுவனத்துக்கு சுமார் 2.83 சதுர கிமீ பரப்பளவில் பிரம்மாண்ட வாகன உற்பத்தி தொழிற்சாலை உள்ளது. இதில், 88 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் எலக்ட்ரிக் கார்களை மட்டும் உற்பத்தி செய்வதற்கான பிரத்யேகமான பகுதி திறக்கப்பட்டுள்ளது. மேலும், தொழிற்சாலையின் இந்த பகுதிக்குள் எடுக்கப்பட்ட படங்கள் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
எலக்ட்ரிக் கார்களை மட்டும் உற்பத்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த தொழிற்சாலை பிரிவில் தானியங்கி தொழிற்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 2021ஆம் ஆண்டிலேயே துவங்கப்பட்ட இந்த தொழிற்சாலை கட்டுமான பணிகள் அடுத்த 2026ஆம் ஆண்டின் இறுதியில்தான் முடியும் என கணிக்கப்பட்டுள்ளது. அதாவது, இந்த இவி தொழிற்சாலையை மேலும் மேலும் வளர்த்துக் கொண்டே செல்ல மஹிந்திரா திட்டங்களை வகுத்துள்ளது.

இதற்கு மொத்தமாக ரூ.16 ஆயிரம் கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதில், ரூ.4,500 கோடி ஆனது தொழிற்சாலைக்குள் மஹிந்திரா எலக்ட்ரிக் வாகனங்களை உற்பத்தி செய்வதற்கான செயல்பாடுகளுக்கு பயன்படுத்தப்பட உள்ளது. இந்த இவி தொழிற்சாலையினுள் ஆயிரத்திற்கும் அதிகமான ரோபோட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவை உள்பட மற்ற தொழிற்நுட்ப கருவிகளின் தரவுகளை வழங்க 'நெர்வ் செண்டர்' (Nerve Center) உள்ளிட்ட வசதிகளும் இந்த தொழிற்சாலையில் உள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: எலக்ட்ரிக் கார்கள் உலகிற்குள் முழுவதுமாக நுழைய மஹிந்திரா எல்லா விதங்களிலும் தயாராகி வருவது, இந்த தொழிற்சாலை உருவாக்கத்தை பார்த்தாலே தெரிகிறது. வரும் காலங்களில், மஹிந்திராவின் தொழிற்சாலையில் மற்ற பகுதிகளையும் இந்த இவி பிரிவு ஆட்கொள்ளும். இதற்கேற்ப, பெட்ரோல்/ டீசல் கார்களுக்கு மாற்றாக எலக்ட்ரிக் கார்களை மட்டும் அறிமுகம் செய்ய மஹிந்திரா ஆரம்பித்துவிடும்.


Click it and Unblock the Notifications









