இதுக்கு அப்புறம் தான் கதையே ஆரம்பிக்குது! மல்லுக்கட்டி நிற்கும் டாடா - மஹிந்திரா... மக்களின் தேர்வு யாருக்கு!!
டாடா மோட்டார்ஸ் (Tata Motors), மஹிந்திரா (Mahindra) இரண்டும் முழுக்க முழுக்க இந்தியாவை அடிப்படையாக கொண்டு செயல்படும் கார் நிறுவனங்கள் ஆகும். வெளிநாட்டு கார் நிறுவனங்களில் இருந்து இந்திய மக்களின் பார்வை மெல்ல மெல்ல இந்திய கார் நிறுவனங்களை நோக்கி நகர்ந்து வருவதால், அதற்கேற்ப டாடா மோட்டார்ஸ் மற்றும் மஹிந்திரா நிறுவனங்களின் கார் விற்பனையும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, டாடா மோட்டார்ஸின் கார்கள் விற்பனை ஆனது கடந்த சில வருடங்களாக பெரிய அளவில் முன்னேற்றம் கண்டுள்ளது.
இதனால், 2024ஆம் ஆண்டிலும் டாடா மோட்டார்ஸின் கார்கள் விற்பனை வழக்கத்தை காட்டிலும் அதிகரிக்கும் என எதிர்பார்த்தோம். டாடா கார்கள் விற்பனை சற்று அதிகரித்து இருப்பது என்னமோ உண்மைதான். ஆனால், அதனை காட்டிலும் மஹிந்திரா கார்கள் விற்பனை ஆனது பெரிய அளவில் வளர்ச்சி கண்டுள்ளது.

கடந்த 2024 டிசம்பர் மாதத்தில் அதிக எண்ணிக்கையில் கார்களை விற்பனை செய்த கார் நிறுவனங்கள் குறித்த விபரங்கள் சமீபத்தில்தான் வெளியாகின. அதில் அனைவரையும் ஆச்சிரியப்படுத்தும் விதமாக, அதிக கார்களை விற்பனை செய்து டாடா மோட்டார்ஸ் 2வது இடத்தை பிடித்தது. மாருதி சுஸுகிக்கு அடுத்து, வழக்கமாக 2வது இடத்தை ஹூண்டாய் நிறுவனம்தான் பிடிப்பது வழக்கம். கார்கள் விற்பனையில் ஹூண்டாயை டாடா மோட்டார்ஸ் முந்துவது இது ஒன்றும் முதல்முறை அல்ல.
கடந்த 2023ஆம் ஆண்டில் கூட சில மாதங்களில் 2வது இடத்தை பிடித்து டாடா மோட்டார்ஸ் ஆச்சிரியப்படுத்தி இருந்தது. ஒட்டுமொத்தமாக கடந்த 2024ஆம் ஆண்டில் 5 லட்சத்து 62 ஆயிரத்து 468 கார்களை டாடா மோட்டார்ஸ் விற்பனை செய்துள்ளது. 2023ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், கடந்த 2024இல் டாடா கார்கள் விற்பனை ஆனது 2.11% அதிகரித்துள்ளது. ஏனெனில், அந்த ஆண்டில் சற்று குறைவாக 5 லட்சத்து 50 ஆயிரத்து 838 கார்களை மட்டுமே டாடா மோட்டார்ஸ் விற்பனை செய்திருந்தது.

இந்த வகையில் பார்த்தால், 2024இல் ஒவ்வொரு மாதத்திலும் சராசரியாக 46 ஆயிரத்து 872 கார்களை டாடா மோட்டார் விற்பனை செய்துள்ளது. அப்படியே மஹிந்திரா பக்கம் சென்றால், மஹிந்திராவில் இருந்து கடந்த ஆண்டில் மொத்தம் 5 லட்சத்து 28 ஆயிரத்து 460 கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு மாதத்திலும் சராசரியாக 44 ஆயிரத்து 38 மஹிந்திரா கார்கள் விற்பனையாகி உள்ளன.
டாடா மோட்டார்ஸை காட்டிலும் மஹிந்திராவின் இந்த விற்பனை எண்ணிக்கைகள் குறைவுதான் என்றாலும், மஹிந்திராவின் வழக்கமான விற்பனையை காட்டிலும் அதிகமாகும். ஏனெனில், 2023ஆம் ஆண்டில் வெறும் 4 லட்சத்து 33 ஆயிரத்து 172 கார்களை மட்டுமே மஹிந்திரா விற்பனை செய்திருந்தது. இதனுடன் ஒப்பிடுகையில், 2024இல் மஹிந்திரா கார்கள் விற்பனை ஆனது 22% அதிகரித்துள்ளது. அதாவது, சுமார் 95 ஆயிரம் கார்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன.

குறிப்பாக, கடந்த 2024 மே மாதத்தில் எக்ஸ்யூவி 3எக்ஸ்.ஓ காரின் அறிமுகத்திற்கு பிறகு மஹிந்திராவின் கார்கள் விற்பனை பெரியளவில் அதிகரிக்க ஆரம்பித்தது. இருப்பினும் டாடா மோட்டார்ஸை முந்த முடியவில்லை என்றாலும், டாடாவுக்கு நெருக்கமாக மஹிந்திரா வந்தது. கடந்த டிசம்பர் மாதத்தில் கூட, 44 ஆயிரத்து 289 கார்கள் விற்பனை உடன் டாடா மோட்டார்ஸ் 2வது இடத்தை தனதாக்கி உள்ள நிலையில், 41 ஆயிரத்து 424 கார்கள் விற்பனை உடன் மஹிந்திரா 4வது இடத்தை பிடித்துள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மஹிந்திரா கார்கள் விற்பனை ஆனது கடந்த சில மாதங்களாக எளியதாக 40 ஆயிரத்தை கடந்துள்ளது. அதுவே, 2023, 2022ஆம் ஆண்டுகளில் 40 ஆயிரம் என்கிற மைல்கல்லை தொடுவதற்கே மஹிந்திரா திண்டாடியது. மஹிந்திராவின் அபரிதமான வளர்ச்சிக்கு காரணமாக நாங்கள் பார்ப்பது, மஹிந்திராவின் தலைமை கார் டிசைனராக பிரதாப் போஸ் பொறுப்பேற்றது ஆகும். இவர் முன்பு டாடா மோட்டார்ஸில் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications









