விஜய் மாநாடு மாதிரி, இந்த காரை புக் பண்ண பெரிய கூட்டம் காத்துக்கிட்டு இருக்கு! ஆகஸ்ட் 23ஆம் தேதி தான் தெரியும்
மஹிந்திரா (Mahindra) நிறுவனத்தில் இருந்து சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட எலக்ட்ரிக் கார், பிஇ 6 பேட்மேன் எடிசன் (BE 6 Batman Edition) ஆகும். கடந்த 2024ஆம் ஆண்டின் இறுதியில் அறிமுகம் செய்யப்பட்ட பிஇ 6 எலக்ட்ரிக் காரில் புதிய ஸ்பெஷல் எடிசன் (Special Edition) ஆக பேட்மேன் எடிசன் கடந்த ஆகஸ்ட் 14ஆம் தேதியில் சுதந்திர தினம், கிருஷ்ண ஜெயந்தியை முன்னிடடும், வரவிருக்கும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டும் அறிமுகம் செய்யப்பட்டது.
ஸ்பெஷல் எடிசன் என சொல்வதை காட்டிலும் இதனை லிமிடெட் எடிசன் (Limited Edition) என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில், வெறும் 300 பிஇ 6 பேட்மேன் எடிசன் கார்களை மட்டுமே விற்பனை செய்ய போவதாக அறிமுகத்தின் போதே மஹிந்திரா தெரிவித்து இருந்தது.

இந்த நிலையில், பிஇ 6 பேட்மேன் எடிசன் காருக்கு தொடர்ந்து வரவேற்பு அதிகரித்து வருவதை அடுத்து, இன்னும் கூடுதலாக பிஇ 6 பேட்மேன் எடிசன் கார்களை விற்பனை செய்ய போவதாக மஹிந்திரா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிக்கையின் மூலம் அறிவித்துள்ளது. கூடுதலாக எத்தனை கார்களை என்றால், மொத்தம் 999 பிஇ 6 பேட்மேன் எடிசன் கார்களை விற்பனை செய்ய போவதாக மஹிந்திரா அறிவித்துள்ளது.
புதிய பிஇ 6 பேட்மேன் எடிசன் காருக்கான ப்ரீ-புக்கிங்குகள் (Pre-Bookings) ஆகஸ்ட் 21ஆம் தேதியான இன்று மாலை 5 மணி முதல் துவங்கப்பட்டுள்ளன. இந்த ஸ்பெஷல் எடிசன் பிஇ 6 எலக்ட்ரிக் காரை ப்ரீ-புக்கிங் செய்பவர்கள் அப்போதே 'உங்களது விருப்பத்தை சேர்க்கவும்' என்கிற ஆப்ஷன் மூலம் தங்களது கார் எந்தெந்த வசதிகள் உடன் இருக்க வேண்டும் என்பதை தேர்வு செய்து வைத்து கொள்ளலாம் என மஹிந்திரா தெரிவித்துள்ளது.

இதனை தொடர்ந்து ஆகஸ்ட் 23ஆம் தேதி பகல் 11 மணியளவில் துவங்கப்படும் பிஇ 6 பேட்மேன் எடிசன் காருக்கான அதிகாரப்பூர்வ புக்கிங்கின் போது ஏற்கனவே தேர்வு செய்து வைத்திருக்கும் வசதிகள் உடன் விரைவாக காரை முன்பதிவு செய்துவிடலாம். அப்போது காரை முன்பதிவு செய்வதற்கான டோக்கன் தொகையாக ரூ.21 ஆயிரம் செலுத்த வேண்டியிருக்கும் என மஹிந்திரா நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஆகஸ்ட் 23ஆம் தேதியில் காரை புக் செய்யும் போது கே.ஒய்.சி (KYC) செயல்முறைகள் மற்றும் மொபைல் போனுக்கு வரும் ஒடிபி (OTP) மூலமாக காஸ்டமர்கள் உறுதிச் செய்யப்படுவர். இதனை தொடர்ந்து, பிஇ 6 பேட்மேன் எடிசன் காரை புக் செய்தவர்களுக்கு டெலிவிரி (Delivery) கொடுக்கும் பணிகள் சர்வதேச பேட்மேன் தினமான செப்டம்பர் 20ஆம் தேதியில் இருந்து துவங்கப்பட உள்ளதாகவும் மஹிந்திரா தெரிவித்துள்ளது.

உற்பத்தி செய்யப்பட உள்ள 999 மஹிந்திரா பிஇ 6 பேட்மேன் எடிசன் கார்கள் ஒவ்வொன்றிலும் 0இல் இருந்து 999 வரையிலான எண்கள் பிரத்யேகமாக பேட்ஜ் ஆக பொருத்தப்பட உள்ளன. காரை முன்பதிவு செய்பவர்கள் தங்களுக்கு பிடித்தமான எண் கொண்ட பேட்ஜ் உடன் பிஇ 6 பேட்மேன் எடிசன் காரை வாங்கலாம் என மஹிந்திரா தெரிவித்துள்ளது.
தோற்றத்தை பொறுத்தவரையில், புதிய பிஇ 6 பேட்மேன் எடிசன் ஆனது அதன் பெயரை போலவே முழுவதும் கருப்பு நிறத்தில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. பிஇ 6 எலக்ட்ரிக் கார் மொத்தம் மூன்று விதமான வேரியண்ட்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதில், விலைமிக்க பேக்-3 (Pack 3) வேரியண்ட்டின் அடிப்படையில் புதிய பேட்மேன் எடிசன் உருவாக்கப்பட்டு உள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: கடந்த 1 வருடமாகவே மஹிந்திரா தொடுவது எல்லாம் தங்கமாக மாறுகிறது. அதாவது, அந்த அளவிற்கு மஹிந்திராவில் இருந்து அறிமுகம் செய்யப்படும் கார்கள் அனைத்தும் உடனடியாகவே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறுகின்றன. உதாரணத்திற்கு, தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள பிஇ 6 பேட்மேன் எடிசனை சொல்லலாம். ஏனெனில், 300 யூனிட்கள் மட்டுமே விற்பனை செய்ய திட்டமிட்ட காரை ஒரேடியாக 999 யூனிட்கள் விற்பனை செய்ய வேண்டிவரும் என்பதை மஹிந்திரா நிறுவனம் கூட நினைத்து பார்த்திருக்குமா என்பது தெரியவில்லை.


Click it and Unblock the Notifications









