வீடியோ கேமில் ஜெய்பவர்களுக்கு பிராண்ட்-நியூ மஹிந்திரா கார்! இருக்கும் இடத்தில் இருந்தே சொந்தமாக்கலாம்
மஹிந்திரா (Mahindra), இந்தியாவின் முன்னணி கார் நிறுவனமான இது பிரபல மொபைல் கேம் (Mobile Game) வடிவமைப்பாளரான கிராஃப்டன் (KRAFTON) உடன் கூட்டணி சேர்ந்துள்ளது. இந்த 'KRAFTON' பெயரை எங்கேயோ அடிக்கடி பார்த்தது போன்று தோன்றலாம். பப்ஜி (PUBG) ஞாபகம் இருக்கிறதா? பப்ஜியை கிராஃப்டன் உருவாக்கவில்லை. பப்ஜி தடை செய்யப்பட்ட பிறகு அதேபோன்றதான 'பேட்டில்கிரவுண்ட்ஸ் மொபைல் இந்தியா' (BATTLEGROUNDS MOBILE INDIA (BGMI)) என்கிற மொபைல் கேம்-ஐ உருவாக்கிய நிறுவனம்தான் கிராஃப்டன் ஆகும். சரி... இத்தகைய நிறுவனம் மஹிந்திரா உடன் கூட்டணி சேர்ந்துள்ளதினால் என்ன நடக்க போகிறது என்றுதானே கேட்கிறீர்கள்.
மஹிந்திராவின் லேட்டஸ்ட் எலக்ட்ரிக் கார் (Electric Car)-ஆன பிஇ 6 (BE 6)-ஐ தனது மொபைல் கேமில் கிராஃப்டன் பயன்படுத்த உள்ளது. இதன் மூலம், வேறொரு யூனிவர்ஸிற்குள் நுழைய போகும் மஹிந்திரா பிஇ 6 எலக்ட்ரிக் காரை ஜனவரி 16 முதல் அனைவரும் பேட்டில்கிரவுண்ட்ஸ் மொபைல் இந்தியா போன்ற கிராஃப்டன் வடிவமைக்கும் மொபைல் கேம்களில் பார்க்கலாம்.

பப்ஜி போன்றதுதான் பேட்டில்கிரவுண்ட்ஸ் மொபைல் இந்தியா மொபைல் கேமும் என்று சொன்னோம் அல்லவா. பப்ஜியை போலவே அனைவரையும் கொன்று வீழ்த்தி கடைசியில் நிலைத்து நிற்பதுதான் பேட்டில்கிரவுண்ட்ஸ் மொபைல் இந்தியா கேம் ஆகும். குறிப்பாக, இளம் தலைமுறையினரை கவரும் வகையில் இந்த மொபைல் கேமில் நிறைய மாடர்ன் தரத்திலான அம்சங்கள் தொடர்ந்து சேர்க்கப்பட்டு வருகின்றன.
அவ்வாறுதான், அட்வான்ஸான தோற்றம் கொண்ட மஹிந்திரா பிஇ 6 எலக்ட்ரிக் காரையும் இந்த மொபைல் கேமிற்குள் இணைக்கவுள்ளனர். பிஇ 6 எலக்ட்ரிக் கார் மட்டுமில்லாமல், கேமிற்குள் அதனுடன் ஒத்த சில அம்சங்களும் வழங்கப்பட உள்ளன. அதாவது, குவாண்டம், க்ரோனோ சார்ஜ் போன்றதான உடைகளும், வோல்ட் டிரேசர் துப்பாக்கி மற்றும் நியான் டிராப் பிஇ6 பாராசூட், ஃப்ளாஷ்வால்ட் பிஇ6 பேக்பேக், ஸ்பார்க்ஸ்ட்ரைக் பேன் போன்றதான ஆயுத உபகரணங்களும் பேட்டில்கிரவுண்ட்ஸ் மொபைல் இந்தியா கேமில் சேர்க்கப்பட உள்ளன.

இவை மட்டுமின்றி, மஹிந்திரா உடனான கூட்டணியை வெளிப்படுத்தும் விதமாக சில பிரத்யேகமான விளையாட்டு பயணங்கள், மஹிந்திரா நிகழ்ச்சி பெட்டிகள் மற்றும் பரிசுகளும் கேமில் சேர்க்கப்படவுள்ளன. இதன் மூலமாக, உண்மையான மஹிந்திரா பிஇ 6 எலக்ட்ரிக் காரை மக்கள் வெல்வதற்கான வாய்ப்பையும் கிராஃப்டன் ஏற்படுத்திக் கொடுக்கவுள்ளது.
பிராண்ட்-நியூ மஹிந்திரா பிஇ 6 எலக்ட்ரிக் காரை வெல்ல பேட்டில்கிரவுண்ட்ஸ் மொபைல் இந்தியா கேமில் பங்கேற்பவர்கள் முதலில் மஹிந்திரா பிஇ 6 எக்ஸ்சேஞ்ச் செண்டர் மிஷன்களை முடித்து 'நைட்ரோ வீல்' மற்றும் 'மஹிந்திரா நிகழ்ச்சி பெட்டி'-ஐ பெற வேண்டும். இதன் மூலம் கேமில் மஹிந்திரா பிஇ 6 எலக்ட்ரிக் கார் உங்களுக்கு சொந்தமாகிவிடும்.

பின்னர், கேமில் இந்த மஹிந்திரா எலக்ட்ரிக் காரை பயன்படுத்துவதை 10இல் இருந்து 30 வினாடி வீடியோவாக பதிவு செய்து இன்ஸ்டாகிராம் (Instagram) அல்லது யூடியூப் (Youtube)-இல் 'BGMI' மற்றும் மஹிந்திரா எலக்ட்ரிக் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ பக்கங்களை டேக் (Tag) செய்து, #BGMIxMahindra மற்றும் #UnleashTheCharge ஹாஸ்டேக்குகள் (Hashtags) உடன் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மஹிந்திரா நிறுவனம் ஏற்கனவே எக்ஸ்யூவி400 என்கிற எலக்ட்ரிக் காரை விற்பனை செய்து வந்தாலும், பிஇ 6 ஆனது தோற்றத்தில் முற்றிலுமாக வேறுப்பட்ட மஹிந்திரா எலக்ட்ரிக் கார் ஆகும். அதாவது, எதிர்காலத்தில் இருந்து டைம் டிராவல் செய்து கொண்டுவரப்பட்ட எலக்ட்ரிக் கார் போன்றதான தோற்றத்தை கொண்டிருக்கிறது. ஆதலால், இத்தகைய எலக்ட்ரிக் கார் ஆனது BGMI போன்ற வீடியோ கேமில் பயன்படுத்துவதற்கு ஏற்றதாகும்.


Click it and Unblock the Notifications









