இதுக்கு அப்புறம் எத்தனை கம்பெனி வேணும்னா இந்த சாதனையை படைக்கலாம்! ஆனா மஹிந்திரா தான் ஃபர்ஸ்ட்டு!
இந்தியாவின் நம்பர் 1 எலெக்ட்ரிக் வர்த்தக வாகன உற்பத்தியாளரான மஹிந்திரா லாஸ்ட் மைல் மொபிலிட்டி லிமிடெட் (MLMML), 3 லட்சம் எலெக்ட்ரிக் வாகன விற்பனை என்ற மாபெரும் மைல்கல்லை எட்டியுள்ளது. இதன் மூலம் எலெக்ட்ரிக் வாகன சந்தையில் ஒரு புதிய அத்தியாயத்தை MLMML தொடங்கியுள்ளது. இந்தியாவின் வர்த்தக எலெக்ட்ரிக் வாகன பிரிவில் இந்த சாதனையை எட்டிய முதல் அசல் உபகரண உற்பத்தி நிறுவனம் (OEM) மஹிந்திரா ஆகும்.
இது, நிலையான லாஸ்ட்-மைல் (Last-mile) போக்குவரத்தில் மஹிந்திராவின் தலைமையை எடுத்துக்காட்டுகிறது. மஹிந்திராவின் ட்ரேயோ (Treo), ஸோர் கிராண்ட் (Zor Grand), இ-ஆல்ஃபா (e-Alfa) உள்ளிட்ட 3-சக்கர எலெக்ட்ரிக் வாகனங்கள் மற்றும் ஸியோ (ZEO) என்கிற 4-சக்கர எலெக்ட்ரிக் வாகனத்திற்கும் அதிகரித்து வரும் வரவேற்பை இந்த மைல்கல் பிரதிபலிக்கிறது.

இந்த மஹிந்திரா எலெக்ட்ரிக் வாகனங்கள் ஒட்டுமொத்தமாக 500 கோடி கிலோ மீட்டருக்கும் மேல் பயணித்து, 185 கிலோ மெட்ரிக் டன்களுக்கும் அதிகமான கார்பன்-டை-ஆக்சைடு (CO2) உமிழ்வைக் குறைத்துள்ளதாக மஹிந்திரா தெரிவித்துள்ளது. இது, 4.3 மில்லியன் மரங்களை நட்டதற்கு சமம் ஆகும். மஹிந்திரா லாஸ்ட் மைல் மொபிலிட்டி நிறுவனம் வர்த்தக எலெக்ட்ரிக் வாகன பிரிவில் தனது ஆதிக்கத்தைத் தொடர்ந்து நிலைநிறுத்தி வருகிறது.
கடந்த 12 மாதங்களில் மட்டும் 1 லட்சம் வாகனங்களை விற்பனை செய்து, தனது பயணத்தில் மிக வேகமான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. கடந்த ஆண்டில், MLMML தனது தயாரிப்பு வரிசையை விரிவுபடுத்தி மேம்படுத்தியுள்ளது. ட்ரேயோ பிளஸ் ஷீட் மெட்டல், இ-ஆல்ஃபா பிளஸ், ஸோர் கிராண்ட் ரேஞ்ச் பிளஸ் மற்றும் ஸியோ போன்ற புதிய எலெக்ட்ரிக் கமர்ஷியல் வாகனங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

இவை, லாஸ்ட்-மைல் சேவையில் ஈடுப்படும் நிறுவனங்களின் செயல்திறன், வரம்பு மற்றும் உற்பத்தித்திறனை மேம்படுத்துகின்றன. முன்னதாக, 2 லட்சம் எலெக்ட்ரிக் வாகன விற்பனை மைல்கல்லை எட்டியபோது, மஹிந்திரா உதாய் நெக்ஸ்ட் (UDAY NXT) என்கிற திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இது ஓட்டுநர்களுக்கான ஒரு சிறப்பு முயற்சியாகும். இதில் 20 லட்சம் ரூபாய் விபத்து காப்பீடு மற்றும் நிதி ஆலோசனை போன்ற பலன்கள் வழங்கப்படுகின்றன.
தற்போது, விற்பனையில் 3 லட்சம் மைல்கல்லைக் குறிக்கும் வகையில், நிறுவனம் மேம்படுத்தப்பட்ட NEMO (Next-Generation Mobility) தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது iOS, ஆண்ட்ராய்டு மற்றும் இணைய தளங்களில் கிடைக்கிறது. இந்த மேம்படுத்தப்பட்ட NEMO தளம் ஆனது பல வாகனங்களை நிர்வகித்தல், நிகழ்நேர புவி-தடமறிதல், சேவை முன்பதிவு, சாலையோர உதவி மற்றும் வளர்ந்து வரும் சார்ஜிங் நெட்வொர்க் அணுகல் போன்ற அம்சங்களை வழங்குகிறது.

இந்த டிஜிட்டல் கருவிகள், தனிப்பட்ட ஓட்டுநர்கள் மற்றும் வாகன நிறுவனங்கள் தங்கள் வாகனங்களின் செயல்திறன் மற்றும் செயல்பாட்டுத் திறனை மேம்படுத்த உதவுகின்றன. இந்த சாதனையைப் பற்றி பேசிய மஹிந்திரா லாஸ்ட் மைல் மொபிலிட்டின் நிர்வாக இயக்குநரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான திருமதி.சுமன் மிஸ்ரா, "3 லட்சம் எலெக்ட்ரிக் வாகன விற்பனை மைல்கல்லை எட்டியது, நிலையான போக்குவரத்தை நோக்கிய எங்கள் பயணத்தில் ஒரு பெருமைமிக்க தருணமாகும்.
இது எங்கள் மின்சார வாகனங்கள் மீது வாடிக்கையாளர்கள் வைத்துள்ள நம்பிக்கை மற்றும் உறுதியின் பிரதிபலிப்பாகும். மஹிந்திரா லாஸ்ட் மைல் மொபிலிட்டியில், நாங்கள் வெறும் மின்சார வாகனங்களை உற்பத்தி செய்வதில்லை. வாழ்வாதாரங்களை உருவாக்கி, தூய்மையான எதிர்காலத்தை வடிவமைக்கிறோம். புதுமை சார்ந்த தயாரிப்புகள் மூலம், மின்சார போக்குவரத்தை அனைவருக்கும் நடைமுறைப்படுத்தவும், அணுகக்கூடியதாகவும் மாற்றும் எங்கள் உறுதிப்பாட்டை தொடர்ந்து வலுப்படுத்தி வருகிறோம்" என்றார்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த விரைவான வளர்ச்சி, மஹிந்திராவின் தயாரிப்புகள் மீது வாடிக்கையாளர்களுக்கு இருக்கும் நம்பிக்கையையும், வலுவான விற்பனைக்குப் பிந்தைய ஆதரவு மற்றும் வாடிக்கையாளர் மையப்படுத்திய திட்டங்களையும் எடுத்துக்காட்டுகிறது. மேலும், இந்தியாவில் கமர்ஷியல் வாகனங்களையும் மக்கள் எலெக்ட்ரிக்கில் வாங்க ஆரம்பித்துள்ளனர் என்பதையும் இது காட்டுகிறது.


Click it and Unblock the Notifications









