கார் வாங்கும் முதல் 999 பேருக்கு செம்ம லக்கு! மஹிந்திரா பார்த்து பார்த்து உருவாக்கிய எலெக்ட்ரிக் கார்!
மஹிந்திரா (Mahindra) நிறுவனம் இன்று அதன் பிஇ 6 (BE 6) எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் புதிய ஸ்பெஷல் எடிஷனை அறிமுகப்படுத்தி உள்ளது. 'ஃபார்முலா இ எடிசன்' (Formula e Edition) என்கிற பெயரில் இந்த ஸ்பெஷல் எடிசன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஃபார்முலா இ என்பது மற்ற ஃபார்முலா பந்தயங்களை போன்றதே. ஆனால், இது எலெக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் கார்களுக்கு இடையே நடத்தப்படுவது ஆகும்.
அதற்காக புதிய பிஇ 6 ஃபார்முலா இ எடிசன் எலெக்ட்ரிக் காரை ஃபார்முலா இ பந்தயத்தில் பயன்படுத்தலாமா என கேட்காதீர்கள். ஏனெனில், ஃபார்முலா இ பந்தயத்தில் பயன்படுத்தப்படும் பந்தய கார்களின் தீம் (Theme)-இல் பிஇ 6 ஃபார்முலா இ எடிசன் வடிவமைக்கப்பட்டு உள்ளதால், அதற்கு இந்த பெயர் சூட்டப்பட்டுள்ளது. எஃப்.இ2 (FE2) மற்றும் எஃப்.இ3 (FE3) என்கிற இரு விதமான வேரியண்ட்களில் பிஇ 6 ஃபார்முலா இ எடிசன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதில் எஃப்இ2 வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் (Ex-Showroom Prices) ரூ.23.69 லட்சத்தில் இருந்தும், எஃப்இ2 வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.24.49 லட்சத்தில் இருந்தும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. பிஇ 6 எலெக்ட்ரிக் காரின் இந்த புதிய ஃபார்முலா இ எடிசன் கார்களுக்கான முன்பதிவுகள் 2026 ஜனவரி 14 பொங்கல் (Pongal) திருநாளில் இருந்து துவங்கப்பட உள்ளன.
அதனை தொடர்ந்து, காரின் டெலிவிரிகள் பிப்ரவரி 14இல் இருந்து ஆரம்பிக்கப்படும் என மஹிந்திரா தெரிவித்துள்ளது. மேலும், இந்த ஸ்பெஷல் எடிசன் பிஇ 6 எலெக்ட்ரிக் காரை வாங்கும் முதல் 999 வாடிக்கையாளர்களுக்கு நிச்சய பரிசு உள்ளதாகவும் அறிவித்துள்ள மஹிந்திரா நிறுவனம், இதில் மூன்று அதிர்ஷ்டசாலி வாடிக்கையாளர்களுக்கு அடுத்த ஆண்டு லண்டனில் நடைபெறும் இ-பிரிக்ஸ் (E-Prix) போட்டியை நேரில் காணும் வாய்ப்பையும் ஏற்படுத்தி கொடுக்க போவதாகவும் தெரிவித்துள்ளது.

பிஇ 6 எலெக்ட்ரிக் காரின் இந்த புதிய ஃபார்முலா இ எடிசன் காருக்கு FIA ஃபார்முலா-2 பந்தய வெற்றியாளரும், இந்தியாவின் வேகமான பந்தய டிரைவர்களில் ஒருவரான குஷ் மைனி (Kush Maini) பிராண்ட் தூதராக நியமிக்கப்பட்டு உள்ளார். பிஇ 6 ஃபார்முலா இ எடிசன் காரின் தோற்றத்தை பொறுத்தவரையில், ஏற்கனவே கூறியதுபோல் இது பந்தய கார்களின் தோற்றத்தில், நகர்புற பயன்பாட்டிற்கு ஏற்ப உருவாக்கப்பட்டுள்ளது.
அந்த அளவிற்கு ஃபார்முலா ரேசிங் கார்களை நினைவூட்டும் வகையில், வட்ட வடிவ புரொஜெக்டர் ஹெட்லேம்ப்களுடன் கூடிய சிக்னேச்சர் பம்பர், பளபளப்பான கருப்பு நிற பெசல் ஃபினிஷ் மற்றும் ஆரஞ்சு நிறக் கோடுகள் ஆகியவை பிஇ 6 ஃபார்முலா இ எடிசன் காரின் வெளிப்பக்கத்தில் வழங்கப்பட்டுள்ளன. எவரெஸ்ட் ஒயிட், ஃபயர்ஸ்டார்ம் ஆரஞ்சு, டேங்கோ ரெட், மற்றும் ஸ்டெல்த் பிளாக் ஆகிய நான்கு கவர்ச்சிகரமான கலர் ஆப்ஷன்களில் இந்த ஸ்பெஷல் எடிசன் கார் கிடைக்கும்.

காரின் பம்பரில் ஃபயர்ஸ்டார்ம் ஆரஞ்சு மற்றும் எவரெஸ்ட் ஒயிட் ஆகிய நிறங்கள் பிரத்யேகமாக பயன்படுத்தப்பட்டுள்ளன. ரேஸ்ட்ராக்கில் ஓடும் கார்களைப் போல, 20-இன்ச் அலாய் சக்கரங்கள் அடர் நிறத்தில் மெருகூட்டப்பட்டுள்ளன. ஃபயர்ஸ்டார்ம் ஆரஞ்சு நிறத்தில் பிரேக் காலிப்பர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ஸ்போர்ட்டியான பின்புற பூட் லிப் மற்றும் ரூஃப் ஸ்பாய்லர்களும் இதன் கூடுதல் சிறப்பம்சங்களாகும்.
காரின் விண்ட்ஷீல்டில் 'மஹிந்திரா ஃபார்முலா இ' செராமிக் பெயிண்ட் பிராண்டிங் இடம்பெற்றுள்ளது. ஃபார்முலா இ பேட்ஜிங் மற்றும் டீகால்கள் முன் குவார்ட்டர் பேனல்கள், கண்ணாடி மேற்கூரை மற்றும் நைட் ட்ரெயில் கார்பெட் விளக்குகளில் தனித்துவமாகப் பொறிக்கப்பட்டுள்ளன. காரின் உட்புறம் ஒரு ரேஸ் கார் காக்பிட் போன்ற உணர்வை அளிக்கிறது. ஃபயர்ஸ்டார்ம் ஆரஞ்சு தீம் கொண்ட இன்டீரியர்கள் கண்கவர் வண்ணத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

ஃபார்முலா இ லோகோ ஆனது முன் இருக்கை பயணிக்கு எதிரே டாஷ்போர்டு பேனல் மற்றும் இருக்கைகளில் தனித்துவமாகப் பதிக்கப்பட்டுள்ளது. சீட் பெல்ட்களில் FIA பிராண்டிங் இடம்பெற்றுள்ளது. ஸ்டீயரிங் வீல், இன்-டச் கண்ட்ரோலர், எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக், ஸ்டார்ட்/ஸ்டாப் பட்டன் மற்றும் கதவு திறக்கும் பகுதியில் உள்ள ஸ்ட்ராப்கள் ஆகியவற்றில் ஃபயர்ஸ்டார்ம் ஆரஞ்சு நிறக் கோடுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
இவற்றுடன் இன்னும் பல தனித்துவமான அம்சங்கள் பிஇ 6 ஃபார்முலா இ எடிசன் காரில் வழங்கப்பட்டுள்ளன. இந்த காரின் எஃப்.இ2 வேரியண்ட்டை காட்டிலும், எஃப்.இ3 வேரியண்ட்டில் கூடுதலாக கிடைக்கும் அம்சங்களாவன, இண்டெலிஜென்ட் அடாப்டிவ் சஸ்பென்ஷன், ஸ்போர்டியான ஆர்20 அலாய் சக்கரங்கள் மற்றும் நைட் டிரைல்- கார்பேட் விளக்குகள் ஆகியவை ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: கடந்த ஆண்டு இறுதியில் அறிமுகம் செய்யப்பட்ட பிஇ 6 எலெக்ட்ரிக் காரில் ஸ்பெஷல் எடிசன் அறிமுகம் செய்யப்படுவது இது ஒன்றும் முதல்முறை அல்ல. முன்னதாக, பிஇ 6 பேட்மேன் எடிசன் (Batman Edition) அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால், அதனை காட்டிலும் இந்த புதிய ஃபார்முலா இ எடிசனில் மஹிந்திரா நிறுவனம் கூடுதல் கவனம் செலுத்தி இருப்பது இந்த காரின் வெளிப்புற மற்றும் உட்புற தோற்றத்தை பார்த்தாலே தெரிகிறது.


Click it and Unblock the Notifications









