ஒரு கிலோ சிஎன்ஜி போதும், 19கிமீ-க்கு போய்ட்டு வந்துடலாம்! மஹிந்திரா வாகனத்தில் குறை இருக்குமா என்ன...
மஹிந்திரா & மஹிந்திரா (Mahindra & Mahindra), இந்தியாவின் முன்னணி கனரக வாகன உற்பத்தி நிறுவனம். பின்னர், கார்கள் விற்பனையிலும் இறங்கி வெற்றியை ருசித்து வருகிறது. பெட்ரோல்/ டீசலுக்கு மாற்றாக சிஎன்ஜி (CNG) எரிபொருளை நம்பும் நிறுவனங்களுள் மஹிந்திராவும் ஒன்று. இந்த நிலையில், மஹிந்திராவில் இருந்து புதிய வீரோ சிஎன்ஜி (Veero CNG) வாகனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.
சமீபத்தில் நடந்து முடிந்த 2025 ஆட்டோ எக்ஸ்போ (2025 Auto Expo) கண்காட்சியில் பல்வேறு கமர்ஷியல் வாகனங்கள் காட்சிக்கு நிறுத்தப்பட்டன. இதில் பங்கேற்று முடித்த கையோடு புதியதாக வீரோ சிஎன்ஜி வாகனத்தை மஹிந்திரா அறிமுகம் செய்துள்ளது. மஹிந்திரா வீரோ கமர்ஷியல் வாகனம் ஏற்கனவே விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் அதில் புதியதாக சிஎன்ஜி ஆப்ஷன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அதிகப்பட்சமாக 3.5 டன் வரையில் எடை கொண்ட பொருட்களை கொண்டு செல்லக்கூடியதாக இந்த வாகனம் உருவாக்கப்பட்டுள்ளது. வி2 மற்றும் வி4 (ஏ) என இரு விதமான வேரியண்ட்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள வீரோ சிஎன்ஜி வாகனத்தின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.8.99 லட்சம் (வி2) மற்றும் ரூ.9.39 லட்சம் (வி4 (ஏ)) என நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
முதன்முதலாக கடந்த 2024ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் பொது வெளியில் காட்சிப்படுத்தப்பட்ட வீரோ சிஎன்ஜி வாகனம் தற்போது அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. மஹிந்திராவின் மாடுலர் அர்பன் பிராஸ்பர் பிளாட்ஃபாரம் (Urban Prosper Platform)-இல் உருவாக்கப்பட்டுள்ள இந்த சிஎன்ஜி வாகனம் செயல்திறன்மிக்கதாக மட்டுமில்லாமல், சவுகரியமான பயணத்தை வழங்கக்கூடியதாகவும் உருவாக்கப்பட்டுள்ளது.

வீரோ சிஎன்ஜி வாகனத்தில் டர்போ சிஎன்ஜி என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது அதிகப்பட்சமாக 67 கிலோவாட்ஸ் மற்றும் 210 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. இந்த டர்போ என்ஜினை இயங்க வைக்க டீசலோ அல்லது பெட்ரோலோ நிரப்ப தேவையில்லை. அதற்கு பதிலாக, சிஎன்ஜி நிரப்பிக் கொள்ளலாம்.
அழுத்தத்திற்கு உள்ளாகப்பட்ட இயற்கை எரிவாயுவான சிஎன்ஜி-இன் விலை டீசலை விட குறைவாக உள்ளது. அதைவிட முக்கியமாக, பெட்ரோல்/ டீசல் என்ஜினை காட்டிலும் சிஎன்ஜி பவர்டிரெயினில் இருந்து மிகவும் குறைவான கார்பன் மாசு மட்டுமே வெளியிடப்படுகிறது. மேலும், சிஎன்ஜி வாகனங்களில் மைலேஜும் அதிகமாக கிடைப்பதால், டாக்ஸி மற்றும் விவசாய பணிகளுக்கு சிஎன்ஜி வாகனங்களை வாங்கவே மக்கள் விரும்புகின்றனர்.

புதிய வீரோ சிஎன்ஜி வாகனத்தின் மைலேஜ் கூட ஒரு கிலோ சிஎன்ஜி-க்கு 19.2கிமீ ஆகும். இந்த வாகனத்தில் வழங்கப்பட்டுள்ள 150 லிட்டர் கொள்ளளவு கொண்ட சிஎன்ஜி டேங்கை முழுவதுமாக நிரப்பிவிட்டால், 480கிமீ தொலைவிற்கு பயணிக்கலாம். வீரோ சிஎன்ஜி வாகனத்தை அவசரத்திற்கு பெட்ரோலிலும் இயக்கலாம். இதற்காக சிறிய அளவில் 4.5 லிட்டர் கொள்ளளவில் பெட்ரோல் டேங்க்கும் கொடுக்கப்பட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மஹிந்திரா நிறுவனமும் பசுமையான சுற்றுச்சூழலுக்காக பெட்ரோல்/ டீசலுக்கு பதிலாக மாற்று எரிபொருளில் இயங்கும் வாகனங்களை உருவாக்குவதில் ஆர்வமாக உள்ளது. அதன் வெளிப்பாடே இந்த வீரோ சிஎன்ஜி வாகனம் ஆகும். சிஎன்ஜி டேங்க் மற்றும் பெட்ரோல் டேங்க்கை முழுவதுமாக நிரப்பிவிட்டால் சுமார் 500கிமீ தொலைவிற்கு எரிபொருள் தேவையின்றி செல்லலாம்.


Click it and Unblock the Notifications









