மஹிந்திரா கார் யூஸ் பண்றவங்களுக்கு இப்போ தான் பெரிய நிம்மதி! பெட்ரோல் பங்க்கிற்கு இனி தைரியமா போகலாம்!
மஹிந்திரா & மஹிந்திரா (Mahindra & Mahindra) நிறுவனம், அதன் வாகனங்களில் இ20 (E20) எரிபொருளைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கான அனைத்து உத்தரவாதங்களையும் (warranty) முழுமையாகப் பின்பற்றுவோம் என அதிகாரப்பூர்வமாக உறுதியளித்துள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம். வாருங்கள் செய்திக்குள் போகலாம்.
இ20 எரிபொருளை பற்றி சமீப காலத்தில் நிறைய பேர் கேள்விப்பட்டு இருப்பீர்கள் என நினைக்கிறேன். ஏனெனில், அதுதான் கடந்த சில வாரங்களாகவே ஹாட் டாப்பிக்காக உலா வந்துக் கொண்டிருக்கிறது. குறிப்பாக, பழைய பெட்ரோல் வாகனங்களை பயன்படுத்துபவர்கள் மத்தியில்தான் இந்த பேச்சு அதிகமாக உள்ளது.

ஏனெனில், இ20 ஆனது 20% எத்தனால் (Ethanol) கலக்கப்பட்ட பெட்ரோல் எரிபொருள் ஆகும். அதாவது, 20% எத்தனால் மற்றும் 80% பெட்ரோல் மூலக்கூறுகளை கலந்துதான் பெட்ரோலாக தற்போது இந்தியாவில் உள்ள அனைத்து பெட்ரோல் பங்க்களிலும் விநியோகம் செய்யப்படுகிறது. இதன் மூலமாக வெளிநாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைக்க முடியும் என்பதால், எதிர்காலத்தில் 30% எத்தனாலை கலக்கவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
முன்னதாக 5% எத்தனால் மட்டுமே கலக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது 20% எத்தனால் கலக்கப்படுவது, புதியதாக உருவாக்கப்படும் பெட்ரோல் வாகனங்களில் பெரியதாக எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாவிடினும், பழைய பெட்ரோல் வாகனங்களில் அடிக்கடி பழுதுகளை ஏற்படுத்துவதாக வாகன ஓட்டிகள் குற்றஞ்சாட்டி வருகின்றனர். இது நாடு முழுவதும் பெட்ரோல் வாகன ஓட்டிகள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளதன் காரணமாக இந்த விஷயம் இந்திய அளவில் கவனத்தைப் பெற்றுள்ளது.

மேலும், மஹிந்திரா நிறுவனமே நேரடியாக இதுகுறித்து அறிக்கையை வெளியிடும் அளவிற்கு சென்றுள்ளது. மஹிந்திராவின் பெட்ரோல் என்ஜின்கள் தற்போதுள்ள பெட்ரோல் தரநிலைகளுக்கு முழுமையாக இணங்குவதாக வாடிக்கையாளர்களுக்கும், டீலர்களுக்கும் மஹிந்திரா நிறுவனம் தனது சுற்றறிக்கையின் மூலம் தெரிவித்துள்ளது. இ20 எரிபொருள் கார் உரிமையாளர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியிருந்த நிலையில், மஹிந்திராவின் இந்த அறிவிப்பு அவர்களுக்கு நிம்மதியை அளித்துள்ளது.
இ20 எரிபொருளை பயன்படுத்துவது தங்கள் வாகனங்களின் நம்பகத்தன்மையை பாதிக்குமா? கார் உற்பத்தி நிறுவனத்தின் உத்தரவாதத்தை செல்லாதது ஆக்குமா? என்கிற சந்தேகங்கள் பல மஹிந்திரா கார் உரிமையாளர்களுக்கு இருந்தது. மஹிந்திராவின் இந்தத் தெளிவுபடுத்தல், வாடிக்கையாளர்களின் சந்தேகங்களை நீக்கி, அவர்களுக்கு நம்பிக்கையை அளிப்பதாக உள்ளது.

2025 ஏப்ரல் 1க்கு முன் தயாரிக்கப்பட்ட பெட்ரோல் கார்களில், இ20 எரிபொருளைப் பயன்படுத்தும்போது முடுக்கம் (acceleration) அல்லது எரிபொருள் சிக்கனத்தில் சிறிய மாற்றங்கள் இருக்கலாம். ஆனால், இது ஓட்டுநரின் டிரைவிங் ஸ்டைலை பொறுத்தது என்றும், வாகனத்தின் பாதுகாப்பை பாதிக்காது என்றும் மஹிந்திரா நிறுவனம் தனது அறிக்கையில் கூறியுள்ளது.
ஏப்ரல் 1ஆம் தேதி முதல் தயாரிக்கப்படும் வாகனங்கள் இ20 எரிபொருளுடன் உகந்த செயல்திறனை வெளிப்படுத்தக்கூடிய வகையில் சிறப்பாக தயாரிக்கப்படுகின்றன. இதனால் காரின் ஆக்ஸலரேஷன் மற்றும் எரிபொருள் சிக்கனம் சீராக இருக்கும் என்று மஹிந்திரா கூறுகிறது. "பொறுப்புள்ள கார் உற்பத்தி நிறுவனம் என்கிற முறையில், எங்கள் வாகனங்களில் இ20 எரிபொருள் பயன்பாடு தொடர்பாக வாடிக்கையாளர்களுக்கு அனைத்து உத்தரவாத உறுதிமொழிகளையும் மஹிந்திரா மதிக்கும்" என்று அறிக்கையில் மஹிந்திரா குறிப்பிட்டுள்ளது.

அதேநேரம், மாற்று எரிபொருள்கள், குறிப்பாக பயோ எரிபொருள்கள் (Biofuels) தொடர்பான அரசின் முயற்சிகளுக்கு தனது நீண்டகால ஆதரவையும் வலியுறுத்தியுள்ள மஹிந்திரா நிறுவனம், நிலையான போக்குவரத்து சூழலுக்கு பங்களிக்கும் தனது தொடர்ச்சியான முயற்சிகளையும் தனது அறிக்கையில் எடுத்துரைத்துள்ளது. "மாற்று எரிபொருள்கள், குறிப்பாக பயோ எரிபொருள்கள் தொடர்பான அரசு முன்முயற்சிகளை மஹிந்திரா எப்போதும் ஆதரித்து வந்துள்ளது. புதுமையான வாகன தீர்வுகளின் மூலம் நிலையான எதிர்காலத்திற்கு நாங்கள் பங்களிப்பதாக நம்புகிறோம்" என்றும் அறிக்கையில் மஹிந்திரா தெரிவித்துள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவின் தூய்மையான எரிசக்தி திட்டத்தின் ஒரு பகுதியாக எத்தனால் கலந்த எரிபொருட்களை மத்திய அரசு தீவிரமாக ஊக்குவித்து வருகிறது. இதன் ஒருபகுதியாகவே, இ20 எரிபொருள் நாடு முழுவதும் அறிமுகப்படுத்தப்பட்டது. இருப்பினும், இ20 எரிபொருளால் நாடு தழுவிய அளவில் சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில், மஹிந்திராவின் இந்த அறிவிப்பு தற்போதைய மற்றும் எதிர்கால மஹிந்திரா கார் வாடிக்கையாளர்கள் காரின் செயல்திறன் மற்றும் உத்தரவாதக் கவரேஜ் பற்றிய கவலைகள் இல்லாமல் பசுமையான எரிபொருட்களுக்கு மாற உதவும் என்பது உறுதி.


Click it and Unblock the Notifications









