காரே மினி தியேட்டர் தான்... 30 லட்ச ரூபாய் காரில் சொகுசு கார்களுக்கே சவால்விடும் மஹிந்திரா!
மஹிந்திரா (Mahindra) நிறுவனம் நவம்பர் 26 மற்றும் 27ஆம் தேதிகளில் பெங்களூருவில் 'ஸ்க்ரீம் எலக்ட்ரிக்' (Scream Electric) என்கிற நிகழ்ச்சியை நடத்த உள்ளது. இந்த நிகழ்ச்சியில் மஹிந்திராவின் இரண்டு புதிய எலெக்ட்ரிக் எஸ்யூவி (Electric SUV) கார்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. இதன்படி, நவம்பர் 26 அன்று பிஇ 6 (BE 6) எலெக்ட்ரிக் காரின் சிறப்புப் பதிப்பு வெளியாக உள்ளது.
ஆனால், அனைவரின் கவனமும் நவம்பர் 27 அன்று வெளியாகவுள்ள எக்ஸ்இவி 9எஸ் (XEV 9S) எலெக்ட்ரிக் கார் மீதே உள்ளது. ஏனெனில், மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் விற்பனைக்கு கொண்டுவரப்படும் எக்ஸ்இவி 9எஸ் எலெக்ட்ரிக் கார் தொடர்பான டீசர்களை கடந்த சில வாரங்களாகவே மஹிந்திரா தொடர்ச்சியாக வெளியிட்டு வருகிறது.

இந்தியாவின் முதல் 7 இருக்கைகள் கொண்ட எலெக்ட்ரிக் எஸ்யூவி காராக, அதிக பயணிகளை ஏற்றி செல்ல விரும்புபவர்களுக்காக அறிமுகப்படுத்தப்படும் இது, மஹிந்திராவின் மூன்றாவது 'எலக்ட்ரிக் ஒரிஜின்' எஸ்யூவி கார் ஆகும். மஹிந்திரா நிறுவனத்தின் 'எலக்ட்ரிக் ஒரிஜின்' வரிசையில் தற்போதைய பிஇ 6 மற்றும் எக்ஸ்இவி 9இ எலெக்ட்ரிக் கார்களுக்கு மேலாக விலைமிக்கதாக இது நிலைநிறுத்தப்பட உள்ளது.
மஹிந்திரா வெளியிட்டுள்ள டீசர்களின்படி, புதிய எக்ஸ்இவி 9எஸ் ஆனது ரூ.30 லட்சத்துக்கும் குறைவான விலையிலான எலெக்ட்ரிக் எஸ்யூவி காராக, சிறந்த உபகரணங்களை வழங்கும் காராக உருவாகி வருகிறது. இந்த நிலையில் தற்போது வெளியிடப்பட்டுள்ள டீசர்கள், எக்ஸ்இவி 9எஸ் காரின் பெரிய பூட் ஸ்பேஸ், பயன்படுத்தக்கூடிய முன்பக்க ஃபிரன்க் (Frunk) பகுதி, பிரீமியம் ஹர்மன் கார்டன் ஆடியோ சிஸ்டம், அதிநவீன கேபின் விளக்குகள் மற்றும் முன் & பின் இருக்கை பயணிகளுக்கான பொழுதுபோக்கு திரைகளை வெளிக்காட்டுகின்றன.

குறிப்பாக, மஹிந்திரா எக்ஸ்இவி 9எஸ் காரின் பின்பக்க பெரிய பூட் ஸ்பேஸை பற்றி சொல்ல வேண்டுமென்றால், நெகிழ்வான இருக்கை அமைப்பைக் கொண்டுள்ள இந்த கார், 5 இருக்கைகள் கொண்ட மற்ற எஸ்யூவி கார்களைப் போல் அல்லாமல் பன்முகத்தன்மையை வழங்குகிறது. இதன்படி, 3வது வரிசை இருக்கைகளை மடக்கினால், பொருட்களை வைப்பதற்கு மிகப்பெரிய இடவசதியை இந்த கார் வழங்கக்கூடியதாக இருக்கும் என தற்போது வெளியிடப்பட்டு இருக்கும் டீசரில் காட்டப்பட்டுள்ளது.
மேலும் லக்கேஜ் அதிகம் இருந்தால், எக்ஸ்இவி 9எஸ் காரின் முன்பக்க ஃபிரன்க் பகுதியிலும் சில பொருட்களை வைத்துக் கொள்ளலாம். மற்றொரு டீசரில் எக்ஸ்இவி 9எஸ் காரின் பிரீமியம் ஹர்மன் கார்டன் ஆடியோ சிஸ்டத்தை காண முடிகிறது. இது பிஇ 6 மற்றும் எக்ஸ்இவி 9இ கார்களில் காணப்படும் 16 ஸ்பீக்கர், 1400 வாட்ஸ் சிஸ்டமாக இருக்கலாம்.

டால்பி (Dolby) வசதியுடன், இந்த சிஸ்டம் சக்திவாய்ந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்த புதிய எலெக்ட்ரிக் காரின் அதிநவீன கேபின் விளக்குகளும் குறிப்பிடத்தக்கவை. பிரதான இன்ஃபோடெயின்மென்ட் திரையிலும், முன் இருக்கை பயணிக்கான திரையிலும் ஒரே கால்பந்து போட்டி இரு திரைகளாக காட்டப்படுவதைக் காணலாம். இது ஹோம் தியேட்டர் அனுபவத்தை வழங்குகிறது.
இரண்டாம் வரிசை பயணிகள் BYOD (உங்கள் சொந்த சாதனத்தைக் கொண்டு வாருங்கள்) சிஸ்டத்தைப் பெறுவதால், முன் இருக்கை பயணிகள் காணும் காட்சிகளை பின் இருக்கை பயணிகளும் தனி திரைகளில் சாஃப்ட்வேர் ஒருங்கிணைப்பின் மூலம் காணலாம். இதற்காக, முன் இருக்கைகளின் பின்புறத்தில் திரைகள் வழங்கப்பட்டுள்ளன.

புதிய எக்ஸ்இவி 9எஸ் காரின் மற்ற குறிப்பிடத்தக்க அம்சங்கள் என்று பார்த்தால், திறக்கக்கூடிய பனோரமிக் சன்ரூஃப், வென்டிலேட்டட் முன் இருக்கைகள், பவர்டு முன் இருக்கைகள், ஓட்டுநர் இருக்கைக்கு மெமரி செயல்பாடு, ஆட்டோ-டிம்மிங் IRVM, எலெக்ட்ரிக் மூலமாக இயக்கப்படும் பாஸ் மோட், மல்டி-ஸோன் க்ளைமேட் கண்ட்ரோல் உள்ளிட்டவற்றை சொல்லலாம். மஹிந்திரா எக்ஸ்இவி 9எஸ் 500 கிமீ-க்கும் அதிகமான ரேஞ்சை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இரட்டை மோட்டார் AWD ஆப்ஷன் உடன் இந்த காரை வாங்கும் வாய்ப்பையும் மஹிந்திரா வழங்கும் என எதிர்பார்க்கிறோம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பிஇ 6 எலெக்ட்ரிக் காரை காட்டிலும், விலைமிக்க எக்ஸ்இவி 9இ எலெக்ட்ரிக் காருக்கு சிறப்பான வரவேற்பு கிடைத்து வருவதினால்தான், எக்ஸ்இவி 9இ கார் வரிசையை விரிவுப்படுத்தும் விதமாக புதியதாக எக்ஸ்இவி 9எஸ் காரை மஹிந்திரா களமிறக்குகிறது. சமீபத்திய டீசரில், மஹிந்திரா எக்ஸ்இவி 9எஸ் காரின் பொழுதுபோக்கு அம்சங்கள் ஹைலைட்டாக காட்டப்பட்டுள்ளன. இந்த அனைத்து தொழில்நுட்ப அம்சங்களும் பயணிகளின் பயண அனுபவத்தை மேம்படுத்துவது மட்டுமன்றி, எலெக்ட்ரிக் கார்கள் வடிவமைப்பில் புதிய அத்தியாயத்தை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications









