40 லட்ச ரூபாய் செலவு செய்து உருவாக்கிய படைப்பு... ஸ்கார்பியோ கார்னு சொன்னா மஹிந்திரா கூட நம்பாது
மெர்சிடிஸ்-பென்ஸ் (Mercedes-Benz) கார்களிலேயே ஜி-கிளாஸ் (G-Class) மிகவும் விலை உயர்ந்தது ஆகும். கிட்டத்தட்ட 3 கோடி ரூபாய் அளவில் இதன் விலை உள்ளது. ஜி-கிளாஸ் ஆனது கார் கிடையாது; மஹிந்திரா தார், ஸ்கார்பியோ போன்று பெட்டகம் வடிவிலான எஸ்யூவி (SUV) ஆகும். அதிகளவில் சொகுசு வசதிகளை மெர்சிடிஸ் வழங்குவதால், ஜி-கிளாஸ் ஆனது லக்சரியான எஸ்யூவி வாகனமாக விளங்குகிறது. ஏஎம்ஜி ஜி63 (AMG G63) என்கிற வேரியண்ட்டும் இதில் விற்பனை செய்யப்படுகிறது.
அது இன்னும் அதிக பவர்ஃபுல்லானது என்பதால், அதற்கேற்ப மெர்சிடிஸ்-ஏஎம்ஜி ஜி63 காரின் விலை ஆனது ரூ.4.5 கோடி என்கிற அளவில் உள்ளது. இவ்வளவு கோடிகளை கொடுத்து எல்லாம் நம்மால் வாங்க முடியாது என இங்கு ஒருவர் தனது பழைய மஹிந்திரா ஸ்கார்பியோ (Mahindra Scorpio) காரை மெர்சிடிஸ் ஜி-கிளாஸ் போன்று மாற்றிக் கொண்டுள்ளார்.

உடலமைப்பை தவிர்த்து, ஸ்கார்பியோவும் ஜி-கிளாஸும் முற்றிலும் வெவ்வேறானவை. அப்படியிருந்தும் தனது ஸ்கார்பியோ காரை ஜி-கிளாஸ் போன்று மாற்ற முடியும் என நம்பிய இந்த நபர் செய்துள்ள மற்றொரு விஷயம் நம்மை மேலும் ஆச்சிரியத்துக்கு உள்ளாக்குகிறது. ஸ்கார்பியோ காரின் நீளத்தை மேலும் அதிகரித்து, லிமௌசைன் (Limousine) வாகனம் போன்று மாற்றியுள்ளார்.
லிமௌசைன் வாகனங்களை வெளிநாடுகளில் அதிபர்கள், பெரும் செல்வந்தர்கள் போன்றோர் பயன்படுத்துவதை பார்க்க முடியும். அவற்றை பலர் சொகுசு வசதிகள் மற்றும் பாதுகாப்பு கவசங்களுடன் தங்க தேர் போன்று வைத்திருக்கின்றனர். லிமௌசைன் ரக கார்களை பெரும்பாலான கார் நிறுவனங்கள் தயாரிப்பதில்லை. மெர்சிடிஸ் நிறுவனம் உள்பட.

மெர்சிடிஸ்-பென்ஸ் ஜி-கிளாஸ் லிமௌசைன் என்கிற ஒரு வாகனம் மார்க்கெட்டில் கிடையவே கிடையாது. வெளிநாடுகளில் சிலர் ஜி-கிளாஸ் வாகனத்தை லிமௌசைனாக மாற்றி பயன்படுத்துகின்றனர். ஆனால், இந்த தொகுப்பில் நாம் பார்க்கும் நபர் மஹிந்திரா ஸ்கார்பியோவை லிமௌசைன் வாகனமாக மாற்றியுள்ளார். இந்த குறிப்பிட்ட ஸ்கார்பியோ கார் ஆனது 2012ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது ஆகும்.
ஜெய்பூரை சேர்ந்த யூடியூப் சேனலில் இந்த கஸ்டமைஸ்ட் (Customised) ஸ்கார்பியோ கார் தொடர்பான வீடியோ பதிவிடப்பட்டுள்ளதால், இந்த ஸ்கார்பியோ ஆனது ராஜஸ்தான் மாநிலத்தில் பதிவு செய்யப்பட்டதாக இருக்கலாம். இந்த போலி ஜி-கிளாஸ் லிமௌசைன் காரின் முன்பக்கம் ஆனது புதிய எல்இடி ஹெட்லைட்கள், ஜி-கிளாஸ் ஸ்டைலில் கிரில் உடன் முற்றிலும் புதியதாக மாற்றப்பட்டுள்ளது.

என்ஜினை மூடியிருக்கும் பொனெட் மூடியின் டிசைனில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்றாலும், முன்பக்க பம்பரை பிரத்யேகமாக உருவாக்கி பொருத்தி உள்ளனர். இரண்டு ஸ்கார்பியோ கார்களை இணைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்த லிமௌசைன் வாகனத்தில் கார்கள் இரண்டும் இணைக்கப்பட்ட பகுதியில் பெரிய ஜன்னல் கண்ணாடியை கொடுத்துள்ளனர்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி, இந்த வேலைப்பாடுகள் மொத்தத்திற்கும் சுமார் ரூ.40 லட்சம் செலவாகி உள்ளது. ரூ.3 கோடி கொடுத்து ஜி-கிளாஸ் வாகனத்தை விட இது சிறந்தது என உங்களுக்கு தோன்றலாம். ஆனால், உண்மையான ஜி-கிளாஸை என்ன செய்தாலும் ஸ்கார்பியோவால் முந்த முடியாது. மேலும், பழைய ஸ்கார்பியோ காரை இவ்வாறு லிமௌசைனாக மாற்றுவது எந்த அளவிற்கு பாதுகாப்பானதாக இருக்கும் என்பது தெரியவில்லை.


Click it and Unblock the Notifications









