பல வருஷமா இருக்கும் ஸ்கார்பியோவை இப்படி எதிர்பார்த்திருக்கவே மாட்டீங்க! மஹிந்திரா பெரிய பிளானோட இருக்கு!
மஹிந்திரா (Mahindra) நிறுவனத்தின் ஸ்கார்பியோ-என் (Scorpio-N) காரை அடிப்படையாகக் கொண்ட புதிய பிக்-அப் டிரக் (Pick-up Truck), ஹைதராபாத்தில் சோதனை ஓட்டத்தின்போது மீண்டும் அடையாளம் காணப்பட்டுள்ளது. இது குறித்த சமீபத்திய படங்கள், இந்த பிக்-அப் டிரக் வாகனம் அதன் அறிமுகத்திற்கு இன்னும் வெகு தொலைவில் இல்லை என்பதை காட்டுகின்றன.
ஸ்கார்பியோ பிக்-அப் டிரக் முதன்முதலில் 2023ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் 'குளோபல் பிக் அப் விஷன் கான்செப்ட்' என்கிற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் பின்னர், பலமுறை இந்த பிக்-அப் டிரக் சோதனை ஓட்டங்களின் போது தென்பட்டிருப்பதால், இதன் வடிவமைப்பு பணிகள் சீராக முன்னேறி வருவது தெளிவாகிறது. தற்போதைய சோதனை ஓட்டத்தில் முழுமையான உருமறைப்புடன் காணப்பட்டாலும், சாலையில் வாகனம் இயங்கும் விதம் மற்றும் உறுதியான வடிவமைப்பு கவனத்தை ஈர்க்கிறது.

வாகனத்தின் முன்புறத்தில் உள்ள பிரம்மாண்டமான கிரில் மற்றும் தடிமனான வீல் ஆர்ச்கள் இதற்கு ஒரு முரட்டுத்தனமான தோற்றத்தை அளிக்கின்றன. உட்புறத்தைப் பொறுத்தவரை, ஸ்கார்பியோ காரில் உள்ளதை போன்று ஒரு முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் திரை, ஒரு பெரிய மூன்ரூஃப் மற்றும் ஸ்கார்பியோ-என் காரில் உள்ளதைப் போன்ற ஒரு முன்பக்க சென்டர் ஆம்ரெஸ்ட் ஆகியவை எதிர்பார்க்கப்படுகின்றன.
தற்போது அடையாளம் காணப்பட்டு இருக்கும் ஸ்கார்பியோ பிக்-அப் டிரக்கில் பின் இருக்கை கணிசமான இடவசதியுடன் காட்சியளிக்கிறது. இது, டொயோட்டா ஹிலக்ஸ் (Toyota Hilux) போன்ற மார்க்கெட்டில் உள்ள மற்ற பிக்-அப் டிரக்குகளை விட இந்த மஹிந்திரா வாகனம் அதிக கேபின் இடவசதியை வழங்கக்கூடும் என்பதற்கான அறிகுறியாகும். பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப அம்சங்களைப் பொறுத்தவரை, இந்த பிக்-அப் மாடலில் லெவல்-2 அடாஸ் (ADAS) மற்றும் 5G இணைப்பு வசதி ஆகியவை இடம்பெறும் என மஹிந்திரா உறுதிப்படுத்தியுள்ளது.
மேலும், நார்மல், புல்-கற்கள்-பனி, சகதி-பாறை மற்றும் மணல் போன்ற பல விதமான நிலப்பரப்பு மோட்களும் (terrain modes) இந்த வாகனத்தில் இருக்கும். இதற்கு முன் தென்னாப்பிரிக்காவில் காட்சிப்படுத்தப்பட்ட குளோபல் பிக் அப் விஷன் கான்செப்ட்டில் அதிக எண்ணிக்கையில் ஏர்பேக்குகள், ஓட்டுநரின் சோர்வை கண்டறிந்து செயல்படும் வசதி மற்றும் மஹிந்திராவின் 4எக்ஸ்ப்ளோர் 4-வீல்-டிரைவ் சிஸ்டம் (4Xplore Four-wheel-drive System) போன்ற பல நவீன தொழில்நுட்பங்கள் இருந்தன.
இந்த அம்சங்களில் எத்தனை விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் ஸ்கார்பியோ பிக்-அப் டிரக்கில் இருக்கும் என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. என்ஜின் மற்றும் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களை பற்றி சொல்ல வேண்டுமென்றால், முன்பு காட்சிப்படுத்தப்பட்ட கான்செப்ட் மாடல் மஹிந்திராவின் ஜென்-2 எம்ஹாக் டீசல் என்ஜினை கொண்டிருந்தது. இது 6-ஸ்பீடு மேனுவல் அல்லது ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உடன் வழங்கப்படலாம்.

ஹைதராபாத்தில் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள ஸ்கார்பியோ பிக்-அப் டிரக்கின் சோதனை வாகனத்தில் 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உள்ளது. மஹிந்திரா, இந்த பிக்-அப் டிரக்கின் சிங்கிள்-கேப் மற்றும் டபுள்-கேப் ஆகிய இரு மாடல்களையும் சோதனை செய்து வருவது, வெவ்வேறு சந்தைகளுக்கான அதன் திட்டங்களைக் காட்டுகிறது. சிங்கிள்-கேப் மாடலில் ஸ்கார்பியோ-என் போன்று அலாய் சக்கரங்களும், டபுள்-கேப் மாடலில் எளிமையான ஸ்டீல் சக்கரங்களும் வழங்கப்படலாம்.
இரண்டில் எந்த வெர்சனாக இருப்பினும், இரண்டும் கேபின் கூரைக்கு மேல் ஒரு ரோல் பாரைக் கொண்டுள்ளன. இது விபத்துக்களின்போது பாதுகாப்பிற்காக இருக்கலாம். கான்செப்ட் மாடலில் இருந்த எல்இடி டெயில்-லேம்ப்களுக்குப் பதிலாக, இந்த சோதனை ஸ்கார்பியோ பிக்-அப் டிரக்குகளில் பழைய ஸ்கார்பியோ கார்களில் காணப்பட்டதைப் போன்ற ஹாலோஜன் டெயில்-லேம்ப்கள் பயன்படுத்தப்பட்டிருப்பது கவனிக்கத்தக்கது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஸ்கார்பியோ-என் வடிவமைப்பை அடிப்படையாகக் கொண்டிருப்பதால், எல்இடி புரொஜெக்டர் ஹெட்லேம்ப்கள், மஹிந்திராவின் புதிய 'இரட்டை இறக்கை' லோகோவுடன் கூடிய கம்பீரமான கிரில் மற்றும் பெரிய பொனெட் போன்ற பல வடிவமைப்பு அம்சங்களை இந்த பிக்-அப் டிரக் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கிறோம். இவ்வாறான அனைத்தும் கலந்த அம்சங்கள் இதற்கு ஒரு கம்பீரமான மற்றும் நவீன தோற்றத்தை அளிக்கிறது.
வாகனத்தின் அதிகாரப்பூர்வ வெளியீட்டு காலத்தை மஹிந்திரா இன்னும் அறிவிக்கவில்லை என்றாலும், தொடர்ச்சியான சோதனை ஓட்டங்கள் இதன் விரைவான அறிமுகத்திற்கான நல்ல முன்னேற்றத்தை உணர்த்துகின்றன. இது ஒரு உலகளாவிய தயாரிப்பாக உருவாக்கப்பட்டு வருகிறது என்றும், உற்பத்திக்கு வந்தவுடன் பல சர்வதேச சந்தைகளில் அறிமுகப்படுத்தப்படும் என்றும் மஹிந்திரா நிறுவனம் ஏற்கனவே தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications








