மஹிந்திரா பக்காவா ஸ்கெட்ச் போட்டுடுச்சு... ஒவ்வொரு கார் கம்பெனியையும் அடிச்சு ஓட விட போகுது!
மஹிந்திரா (Mahindra) நிறுவனம் ஒவ்வொரு வருடமும் இந்திய சுதந்திரத்தின்போது புதிய வாகனங்களை அறிமுகம் செய்வது வழக்கம். அவ்வாறுதான், கடந்த வருடங்களில் மஹிந்திரா தார் ராக்ஸ் (Thar ROXX) உள்ளிட்ட வாகனங்கள் சுதந்திர தினத்தின் போது மார்க்கெட்டில் அறிமுகம் செய்யப்பட்டன. அந்த வகையில் இந்த 2025ஆம் வருடத்திலும் சுதந்திர தினத்தை 'ஃப்ரீடம் என்யு' (Freedom NU) என்கிற நிகழ்ச்சி மூலம் மஹிந்திரா கொண்டாடி வருகிறது.
மும்பையில் நடத்தப்பட்டுவரும் இந்த நிகழ்ச்சியில் பல்வேறு புதிய கான்செப்ட் (Concept) வாகனங்கள் மற்றும் சேசிஸ்கள் மஹிந்திரா சார்பில் காட்சிக்கு நிறுத்தப்பட்டு உள்ளன. அதாவது, எங்களது வருங்கால கார்கள் இந்த கான்செப்ட்களையும், சேசிஸ்களையும் அடிப்படையாக கொண்டதாக இருக்கும் என்று மஹிந்திரா தெரிவித்துள்ளது. இதில், ஃப்ரீடம் என்யு நிகழ்ச்சியில் காட்சிப்படுத்தப்பட்டு உள்ள மஹிந்திரா விஷன் டி (Vision T) கான்செப்ட் வாகனத்தை பற்றி தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.

மஹிந்திரா விஷன் டி ஆனது எலக்ட்ரிக் வாகனங்களை உருவாக்குவதற்கான கான்செப்ட் ஆகும். குறிப்பாக, மஹிந்திரா தார் போன்ற ஆஃப்-ரோடு பயணங்களுக்கு வாகனத்தை எலக்ட்ரிக் தரத்தில் இந்த கான்செப்ட்டின் அடிப்படையில் உருவாக்க முடியும். கடந்த சில மாதங்களாகவே இந்த கான்செப்ட் வாகனத்தை பற்றிய டீசர்களை மஹிந்திரா தொடர்ச்சியாக வெளியிட்டு வந்தது. அதனை தொடர்ந்து தற்போது ஃப்ரீடம் என்யு கண்காட்சியில் இந்த கான்செப்ட் வாகனம் பார்வையாளர்கள் முன் காட்சிக்கு நிறுத்தப்பட்டு உள்ளது.
கடந்த 2023 ஆகஸ்ட் மாதத்தில் நடைபெற்ற இதே போன்றதான சுதந்திர தின நிகழ்ச்சியின் போது மஹிந்திரா நிறுவனம் தனது தார்.இ (Thar.e) கான்செப்ட் வாகனத்தை காட்சிக்கு நிறுத்தியது. அதாவது, விற்பனையில் இருக்கும் தார் வாகனம் எலக்ட்ரிக்கில் கொண்டுவரப்பட உள்ளதாகவும், அது தோற்றத்தில் எவ்வாறு இருக்கும் என்பதையும் தார்.இ கான்செப்ட் மூலமாக மஹிந்திரா வெளிக்காட்டி இருந்தது.

இந்த நிலையில் தற்போது காட்சிப்படுத்தப்பட்டு உள்ள விஷன் டி கான்செப்ட் ஆனது தார்.இ கான்செப்ட்டின் பரிணாம வளர்ச்சி ஆக காட்சியளிக்கிறது. விஷன் டி என்கிற பெயரில் உள்ள 'டி' என்பது தார் வாகனத்தை குறிக்கிறது. இதனாலேயே தோற்றத்தில் தார் வாகனங்களுக்கும், இந்த விஷன் டி கான்செப்ட்டிற்கும் இடையே நிறைய ஒற்றுமைகள் உள்ளன.
நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி, இந்த விஷன் டி கான்செப்ட்டின் அடிப்படையில் உருவாக்கப்படும் எலக்ட்ரிக் வாகனம் 2027ஆம் ஆண்டில் மஹிந்திரா தொழிற்சாலையில் அதிக எண்ணிக்கையில் உற்பத்தி செய்ய துவங்கப்படலாம். தோற்றத்தை பொறுத்தவரையில், முன்பக்கத்தில் சதுரமான பொனெட், கிடைமட்டமான ஸ்லாட்கள் உடன் இரு பகுதிகளாக கிரில், கிரில்லுக்கு இரு பக்கங்களிலும் இரு பிரிவுகளாக ஹெட்லைட்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டு உள்ளன.

இதேபோன்றதான லைட் செட்-அப்பை வாகனத்திற்கு பின்பக்கத்திலும் காண முடிகிறது. ஆஃப்-ரோடு வாகனங்களுக்கே உண்டானது போல், சக்கரங்கள் வாகனத்தில் இருந்து வெளியே தள்ளப்பட்டு உள்ளன. அதாவது, வாகனத்தின் அகலத்தை காட்டிலும் சக்கரங்களின் அகலம் அதிகமாக உள்ளதை படங்களில் காணலாம். எந்தவொரு பாதையிலும் இயங்குவதற்கு ஏற்ப விஷன் டி கான்செப்ட்டில் அனைத்து பாதைகளிலும் இயங்கக்கூடிய டயர்கள் பொருத்தப்பட்டு உள்ளன.
மேலும், ஆஃப்-ரோடு வாகனங்களை போன்று விஷன் டி கான்செப்ட்டில் பின்பக்கத்தில் ஸ்பேர் சக்கரம் பொருத்தப்பட்டுள்ளது. இவை தவிர்த்து, விஷன் டி கான்செப்ட்டில் என்ன மாதிரியான எலக்ட்ரிக் மோட்டார் (Electric Motor) மற்றும் பேட்டரி (Battery) பொருத்தப்பட்டுள்ளது என்கிற விபரங்களை தற்போதைக்கு மஹிந்திரா வெளியிடவில்லை.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மஹிந்திராவின் புதிய நியு_ஐ.க்யூ (nu_IQ) பிளாட்ஃபாரத்தில் கட்டமைக்கப்பட்டு உள்ள வாகனங்களுள் ஒன்று விஷன் டி கான்செப்ட் ஆகும். இந்த பிளாட்ஃபாரத்தில் உருவாக்கப்படும் வாகனங்களை எலக்ட்ரிக் மோட்டார் உடன் மட்டுமின்றி, பெட்ரோல்/ டீசல் என்ஜின்கள் உடனும் உருவாக்க முடியும் என்பதால், எதிர்காலத்தில் விஷன் டி கான்செப்ட்டின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட வேறு விதமான பெட்ரோல்/ டீசல் என்ஜின் தார் வாகனங்களையும் எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications









