மஹிந்திராவில் இந்த காரை வாங்க ஏற்கனவே பல பேர் பிளான் போட்டுனு இருக்காங்க! இந்த நேரத்தில் விலை குறைப்பு வேறயா!!
மஹிந்திரா (Mahindra) நிறுவனத்தில் இருந்து அதிகளவில் விற்பனை செய்யப்படும் கார்களுள் ஒன்றான எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ (XUV 3XO) காரின் விலைகள் அதிரடியாக குறைத்துக் கொள்ளப்பட்டு உள்ளன. எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ காரின் அனைத்து வேரியண்ட்களின் விலைகளும் குறைத்துக் கொள்ளப்படாமல், குறிப்பிட்ட சில வேரியண்ட்களின் விலைகள் மட்டும் குறைத்துக் கொள்ளப்பட்டுள்ளன. அவை என்னென்ன என்பதை பற்றி தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.
மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனத்தில் இருந்து கடந்த 2024ஆம் ஆண்டு மே மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்ட கார், எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ ஆகும். முன்பு விற்பனையில் இருந்த மஹிந்திரா எக்ஸ்யூவி300 காருக்கு மாற்றாக எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ காரை மஹிந்திரா அறிமுகம் செய்தது. எக்ஸ்யூவி300 காரை காட்டிலும் அசத்தலான தோற்றத்தை கொண்டிருந்ததால், உடனடியாகவே எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ கார் மக்களை வெகுவாக கவர ஆரம்பித்தது.

இதன் மூலமாக, அறிமுகம் செய்யப்பட்டு ஒரே வருடம் நிறைவடைவதற்கு உள்ளாகவே சுமார் 1 லட்சம் எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ கார்கள் விற்பனை செய்யப்பட்டதாக கடந்த ஏப்ரல் மாதத்தில் தெரிவித்து இருந்தோம். அதனை தொடர்ந்து, எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ காரின் விற்பனையை மேலும் அதிகரிக்கும் விதமாக, இந்த காரில் புதியதாக ரெவ் எக்ஸ் (REVX) வேரியண்ட்கள் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டன.
வழக்கமான வேரியண்ட்களை காட்டிலும் கவனிக்கத்தக்க அம்சங்கள் உடன் ரெவ் எக்ஸ் வேரியண்ட்கள் அறிமுகம் செய்யப்பட்டன. இந்த நிலையில், விற்பனையை மேலும் அதிகரிக்கும் முயற்சியாக எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ காரின் விலைகளை (Prices) மஹிந்திரா நிறுவனம் கணிசமாக குறைத்துக் கொண்டுள்ளது. ஏற்கனவே கூறியதுபோல், எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ காரின் அனைத்து வேரியண்ட்களின் விலைகளும் குறைக்கப்படவில்லை.

ஏ.எக்ஸ்5 (AX5) என்கிற மிட்-வேரியண்ட்டின் விலைகள் மட்டுமே ரூ.20,000 குறைத்துக் கொள்ளப்பட்டுள்ளது. அதுவும், பெட்ரோல் என்ஜின் (Petrol Engine) உடன் இந்த ஏஎக்ஸ்5 வேரியண்ட்டை வாங்குபவர்களுக்கு மட்டுமே இந்த விலை குறைப்பு ஆகும். எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ காரின் ஏஎக்ஸ்5 வேரியண்ட் ஆனது பெட்ரோல் என்ஜின் உடன் மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் என இரு விதமான கியர்பாக்ஸ் ஆப்ஷன்களிலும் கிடைக்கிறது.
இவை இரண்டின் விலைகளும் ரூ.20,000 குறைக்கப்பட்டு உள்ளது. எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ காரின் ஏஎக்ஸ்5 வேரியண்ட்டில் 16 இன்ச்சில் அலாய் சக்கரங்கள், மேற்கூரையில் ரூஃப் ரெயில்கள் மற்றும் ஸ்பாய்லர் (Spoiler) உள்ளிட்டவையும், காருக்கு உள்ளே பின் இருக்கை வரிசையின் மத்திய இருக்கையில் அமரும் பயணிக்கும் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய தலையணையும் வழங்கப்படுகிறது.

மேலும், ஏஎக்ஸ்5 வேரியண்ட்டில் ஸ்டேரிங் சக்கரம் மற்றும் கியர் க்னாப் (Gear Knob) லெதரால் மூடப்பட்டவைகளாக வழங்கப்படுகின்றன. தொழிற்நுட்ப அம்சங்களை பொறுத்தவரையில், ட்யூயல்-ஸோன் க்ளைமேட் கண்ட்ரோல், காரை ஸ்டார்ட்/ ஸ்டாப் செய்ய புஷ் பொத்தான், உயரத்தை அட்ஜெஸ் செய்யக்கூடிய டிரைவர் இருக்கை மற்றும் பின் இருக்கை வரிசையின் மத்தியில் ஆர்ம்ரெஸ்ட் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ரெவ் எக்ஸ் வேரியண்ட்கள் எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ காரின் ஏஎக்ஸ்5 வேரியண்ட்டின் அடிப்படையில்தான் உருவாக்கப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டன. இதனால், ஏஎக்ஸ்5 வேரியண்ட்டின் விற்பனை பாதிக்கப்பட கூடும் என்பதால், அவற்றின் விலைகளை தற்போது ரூ.20,000 வரையில் மஹிந்திரா குறைத்திருப்பதாகவே இந்த நிகழ்வை பார்க்கிறோம்.
Source: Gaadiwaadi (https://gaadiwaadi.com/)


Click it and Unblock the Notifications









