மொத்த பேரும் வாங்க விரும்பும் காரையா மஹிந்திரா மாற்ற போகிறது? இது மட்டும் நடந்துட்டா மாருதிக்கு தான் டென்ஷன்!!
மஹிந்திரா (Mahindra) நிறுவனத்தில் இருந்து தற்சமயம் சிறப்பாக விற்பனையாகும் கார்களுள் தார் (Thar) ஒன்றாகும். 3-கதவு தார் மற்றும் 5-கதவு தார் ராக்ஸ் என இரு விதமான வெர்சன்களில் தார் வாகனங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. கடந்த 2020ஆம் ஆண்டு இறுதியில் அறிமுகம் செய்யப்பட்ட 3-கதவு தார் வாகனத்திற்கு ஓரளவிற்கு சிறப்பான வரவேற்பு கிடைத்துவந்த நிலையில், கடந்த 2024ஆம் ஆண்டில் 5-கதவு தார் ராக்ஸ் வாகனத்தை மஹிந்திரா அறிமுகம் செய்தது. தார் ராக்ஸின் அறிமுகத்திற்கு பிறகு மஹிந்திரா தார் வாகனங்களின் விற்பனை மேலும் அதிகரிக்க ஆரம்பித்தது. கடந்த சில மாதங்களாக, மாதத்திற்கு 10 ஆயிரம் தார் வாகனங்களை அசால்ட்டாக மஹிந்திரா விற்பனை செய்து வருகிறது.
இருப்பினும், தார் வாகனங்களின் விற்பனையை அதிகரிக்கும் முயற்சியாக இந்த வாகனத்தில் புதியதாக ஃபேஸ்லிஃப்ட் (Facelift) அப்கிரேட் வழங்கப்பட உள்ளது. ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேட் என்றால், வாகனத்தின் முன் மற்றும் பின்பக்கத்தில் டிசைனில் மாற்றங்கள் கொண்டுவரப்படும். சக்கரங்களின் டிசைனும் மாற்றப்படலாம். அதேபோல், காருக்கு உள்ளேயும் சில முக்கியமான வசதிகள் கொண்டுவரப்படலாம்.
ஒரு சில கார் நிறுவனங்கள் காரின் என்ஜின் ஆப்ஷன்களையும் மாற்றுவது உண்டு. ஆனால், தார் ஃபேஸ்லிஃப்ட் வாகனத்தில் என்னென்ன மாதிரியான அப்கிரேட்களை மஹிந்திரா கொண்டுவர உள்ளது என்பது இனி போக போக தான் தெரியும். இந்த நிலையில், தார் ஃபேஸ்லிஃப்ட் வாகனம் ஒன்று பொது வெளியில் சாலையில் ஓட்டிப் பார்க்கப்பட்டு சோதனை செய்யப்பட்டுள்ளது.
அப்போது எடுக்கப்பட்ட படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன. இந்த படங்களை பற்றி பார்ப்பதற்கு முன்னர், ஒன்றை தெளிவுப்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். அதாவது, தார் ராக்ஸ் வாகனம் ஆனது கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில்தான் அறிமுகம் செய்யப்பட்டதால், அதற்கு ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேட் வழங்கப்படுவதற்கு வாய்ப்புகள் மிகவும் குறைவே. 2020இல் அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து பெரியதாக அப்கிரேட் செய்யப்படாத, 3-கதவு தார் வாகனத்திற்குதான் முக்கியமாக ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேட் வழங்கப்பட உள்ளது.

2020இல் 3-கதவு தார் வாகனத்தை வடிவமைக்கும் போது இருந்த மஹிந்திராவின் யோசனைகளும், கடந்த ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட தார் ராக்ஸை உருவாக்கிய போது இருந்த ஐடியாக்களுக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. ஏனெனில், 4 வருட இடைவெளி அல்லவா... எங்களுக்கு தெரிந்தவரையில், தார் ராக்ஸின் முன் மற்றும் பின்பக்க டிசைனை 3-கதவு தார் வாகனத்திற்கு மஹிந்திரா வழங்கலாம்.
இருப்பினும், இந்த இரு தார் வாகனங்களையும் வேறுப்படுத்தும் விதமான சில வித்தியாசங்கள் இருக்கும். அந்த வித்தியாசங்கள் என்ன? புதிய 3-கதவு தார் ஃபேஸ்லிஃப்ட் காரின் முன் மற்றும் பின்பக்கம் எப்படி இருக்கும் என்பதை தற்போது வெளியாகியுள்ள ஸ்பை படங்களின் மூலம் அறிய முடியவில்லை. ஏனெனில், இந்த படங்களில் வாகனத்தின் முன்பகுதி மறைப்புகளால் மறைக்கப்பட்டு உள்ளது.
இந்த படங்களில், தார் வாகனத்தின் முன்பக்கத்தில் கிரில், ஹெட்லைட்கள், பம்பர் மற்றும் ஃபெண்டர்கள் உள்ளிட்டவை மறைக்கப்பட்டு உள்ளதால், அவற்றை புதிய டிசைனில் எதிர்பார்க்கலாம். இந்த படங்களில் புதிய 3-கதவு தார் வாகனத்தின் முன்பக்கத்தையும், உட்புறத்தையும் மட்டுமே பார்க்க முடிகிறது; பின்பக்கத்தை காண முடியவில்லை. எங்களுக்கு தெரிந்தவரையில், ஹெட்லைட்களை போன்று, பின்பக்கத்தில் டெயில்லைட்களின் டிசைனும் மறைக்கப்பட்டு இருக்கலாம்.
அதாவது, டெயில்லைட்களையும் புதியவை ஆக எதிர்பார்க்கலாம். அதேபோல், இந்த படங்களில் வாகனத்தின் சக்கரங்களையும் பார்க்க முடியவில்லை. அவற்றையும் புதியவை ஆக எதிர்பார்க்கலாம். தற்போது சோதனை செய்யப்பட்டுள்ள தார் வாகனத்திற்கு உள்ளே எந்த மறைப்பும் இல்லாததால், பெரிய அளவிலான இன்ஃபோடெயின்மெண்ட் டச் ஸ்க்ரீன், 360-டிகிரி கேமரா மற்றும் வெண்டிலேட்டட் முன் இருக்கைகள் உள்ளிட்டவை வழங்கப்பட உள்ளன என்பதை அறிய முடிந்துள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த தொகுப்பில் கூறப்பட்டு உள்ளவற்றை தவிர்த்து, வாகனத்தின் என்ஜின் ஆப்ஷன்கள் & கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் எந்த மாற்றத்தையும் எதிர்பார்க்க முடியாது என்றே நினைக்கிறோம். தார் ராக்ஸின் முன் & பின்பக்கத்துடன் புதிய 3-கதவு தார் ஃபேஸ்லிஃப்ட் கார் வரவில்லை என்றால், அந்த புதிய அப்டேட்களில் விரைவில் மஹிந்திரா தார் ராக்ஸ் ஃபேஸ்லிஃப்ட் காரையும் எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











