விலையில் இரண்டிற்கும் இடையே ரூ.10 லட்சம் வித்தியாசம்... ஆனால் பார்க்க ஒரே மாதிரி இருக்கும்!!
மஹிந்திரா தார் ராக்ஸ் (Mahindra Thar ROXX), இந்திய மார்க்கெட்டில் சமீப காலத்தில் அறிமுகம் செய்யப்பட்ட மாடர்ன் ஆஃப்-ரோடு எஸ்யூவி (Off-road SUV) ரக வாகனம். ஏற்கனவே விற்பனையில் இருந்த 3-கதவு தார் வாகனத்தின் 5-கதவு வெர்சனாக தார் ராக்ஸ் கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது. மஹிந்திரா தார் 3-கதவு வாகனத்திற்கு ஏற்கனவே சிறப்பான வரவேற்பு கிடைத்துவந்த நிலையில், அதனை மேலும் அதிகரிக்கும் விதமாக தார் ராக்ஸ் வாகனத்தை மஹிந்திரா அறிமுகம் செய்தது.
3-கதவு தார் வாகனத்தில் இருந்த ஒரேயொரு குறை என்னவென்றால், அதன் நெருக்கமான உட்புற அமைப்பாகும். ஆனால், 5-கதவு தார் ராக்ஸ் வாகனத்தில் அந்த குறையும் தவிர்க்கப்பட்டுள்ளதால், இந்த புதிய வாகனத்தை மக்கள் போட்டி போட்டு வாங்கி வருகின்றனர். கடந்த டிசம்பர் மாதத்தில் மட்டும் 7 ஆயிரத்து 659 தார் ராக்ஸ் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

இதற்கேற்ப எல்லா தரப்பு மக்களுக்குமான வாகனமாக தார் ராக்ஸை மஹிந்திரா விற்பனை செய்து வருகிறது. எந்த அளவிற்கு என்றால், குறைந்த விலையில் கிடைக்கக்கூடிய தார் ராக்ஸ் வேரியண்ட் (Variant)-விற்கும், விலைமிக்க வேரியண்ட்டிற்கும் இடையே விலையில் கிட்டத்தட்ட சுமார் ரூ.10 லட்சம் இடைவெளி உள்ளது. அதாவது, இதற்கு இடையில்தான் தார் ராக்ஸ் வாகனத்தின் மற்ற 16 வேரியண்ட்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
மஹிந்திரா தார் ராக்ஸின் விலை குறைவான வேரியண்ட் எம்.எக்ஸ்1 (MX1) ஆகும். பெட்ரோல் என்ஜின் மற்றும் மேனுவல் கியர்பாக்ஸ் உடன் இந்த வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலை தற்சமயம் ரூ.12.99 லட்சம் ஆகும். தார் ராக்ஸின் விலைமிக்க டாப் வேரியண்ட் ஏ.எக்ஸ்7 (AX7) ஆகும். டீசல் என்ஜின், ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மற்றும் 4-வீல்-டிரைவ் சிஸ்டத்துடன் இந்த வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலை தற்சமயம் ரூ.22.49 லட்சம் ஆகும்.

இந்த அளவிற்கு பெரிய விலை வித்தியாசத்துடன் இருக்கும் எம்.எக்ஸ்1 வேரியண்ட்டில் டி.ஆர்.எல்-கள் (DRLs), ஃபாக் விளக்குகள், முன்பக்கத்தில் சென்சார்கள் மற்றும் அடாஸ் (ADAS) உள்ளிட்டவை எதுவும் வழங்கப்படுவதில்லை. அதுவே, ஏ.எக்ஸ்7 வேரியண்ட்டில் இவை அனைத்து கிடைப்பதுடன், கூடுதலாக 19-இன்ச் அலாய் சக்கரங்கள் வழங்கப்படுகின்றன. ஆனால், எம்.எக்ஸ்1 வேரியண்ட்டில் 18-இன்ச்சில் இரும்பு சக்கரங்கள் மட்டுமே கொடுக்கப்படுகின்றன.
ஏ.எக்ஸ்7 வேரியண்ட்டில் அடாஸ் வழங்கப்படுவது அதனை பாதுகாப்பானதாக காட்டுகிறது. அதேபோல், இந்த டாப் வேரியண்ட்டில் பெரிய அளவிலான பனோராமிக் சன்ரூஃப் வழங்கப்படுகிறது. மிட்-ஸ்பெக் வேரியண்ட்களில் சிங்கிள்-பேன் சன்ரூஃப் கொடுக்கப்படுகிறது. எம்.எக்ஸ்1 வேரியண்ட்டில் எந்தவொரு சன்ரூஃப்-உம் வழங்கப்படுவது இல்லை. அதேபோல், எம்.எக்ஸ்1 வேரியண்ட்டில் கிடைக்காத ஜன்னல் கண்ணாடிகளை அட்ஜெஸ்ட் செய்யும் வசதியை ஏ.எக்ஸ்7 வேரியண்ட்டில் பெறலாம்.

எம்.எக்ஸ்1 வேரியண்ட்டின் பின்பக்கத்தில் கேமரா, வைபர் மற்றும் டீஃபாகர் என எந்த வசதியும் வழங்கப்படுவதில்லை. இவ்வளவு நேரம் பார்த்தது எல்லாம் வாகனத்திற்கு வெளியே இருக்கும் வித்தியாசங்கள் ஆகும். அதேபோல் வாகனத்திற்கு உள்ளேயும் மேனுவல் பகல்/ இரவு IRVM, ஆண்ட்ராய்டு டச்ஸ்க்ரீன் மற்றும் பேசிக் ஆடியோ சிஸ்டம் என எம்.எக்ஸ்1 வேரியண்ட்டிற்கும், ஏ.எக்ஸ்7 வேரியண்ட்டிற்கும் இடையே நிறைய வித்தியாசங்கள் உள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மஹிந்திரா தார் ராக்ஸ் போன்ற வாகனத்தை வாங்க வேண்டும் என்பது நம்மில் நிறைய பேரது ஆசையாக இருக்கிறது. அந்த ஆசையை நிஜமாக்குவதற்காகவே முடிந்தவரையில் குறைந்த விலையில் தார் ராக்ஸ் வாகனத்தை வழங்க மஹிந்திரா முயற்சிக்கிறது. மாடர்ன் தொழிற்நுட்ப வசதிகள் எல்லாம் பெரிய அளவில் வேண்டாம், பவர்ஃபுல்லான தார் ராக்ஸ் கிடைத்தாலே போதும் என நினைப்பவர்களுக்கு எம்.எக்ஸ்1 வேரியண்ட் ஏற்றது ஆகும்.


Click it and Unblock the Notifications









