ஆடி, பென்ஸ்லாம் ஓரமா போய் விளையாடுங்கப்பா! இந்த மஹிந்திரா காரை வாங்க பெரிய பெரிய ஆளுங்களே வரிசைல நிக்கறாங்க!
இந்தியாவில் கடந்த ஒரு சில வருடங்களில் மஹிந்திரா (Mahindra) விற்பனைக்கு அறிமுகம் செய்த பல்வேறு கார்களுக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் பிரம்மாண்ட வரவேற்பு கிடைத்து வருகிறது. இதில், மஹிந்திரா எக்ஸ்யூவி 700 (Mahindra XUV 700) மிகவும் முக்கியமானது. இந்த காரை பொதுவாக ஆடி, பென்ஸ் போன்ற சொகுசு கார்களில் பயணம் செய்யும் திரையுலக நட்சத்திரங்கள் பலரும் கூட வாங்கி வருகின்றனர். பாலிவுட் நடிகைகள் ஷனாயா கபூர் (Shanaya Kapoor), கங்கனா ஷர்மா (Kangna Sharma) போன்றவர்கள், மஹிந்திரா எக்ஸ்யூவி 700 காரில் பயணம் செய்ததை கடந்த காலங்களில் நம்மால் பார்க்க முடிந்துள்ளது.
திரையுலக நட்சத்திரங்கள் மட்டுமின்றி, இந்திய சந்தையில் அனைத்து தரப்பு வாடிக்கையாளர்களும், மஹிந்திரா எக்ஸ்யூவி 700 காரை ஆர்வமுடன் வாங்கி வருகின்றனர். இதன் காரணமாக கடந்த 2024-25ம் நிதியாண்டில், மஹிந்திரா எக்ஸ்யூவி 700 கார், விற்பனையில் மிகவும் சிறப்பான வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

கடந்த 2024-25ம் நிதியாண்டில் (2024 ஏப்ரல் 1-2025 மார்ச் 31), மஹிந்திரா நிறுவனம் ஒட்டுமொத்தமாக 93,082 எக்ஸ்யூவி 700 கார்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் அதற்கு முந்தைய 2023-24ம் நிதியாண்டில் (2023 ஏப்ரல் 1-2024 மார்ச் 31), வெறும் 79,398 எக்ஸ்யூவி 700 கார்களை மட்டுமே மஹிந்திரா நிறுவனம் விற்பனை செய்திருந்தது.
அதாவது மஹிந்திரா எக்ஸ்யூவி 700 கார் விற்பனையில் 17 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து அசத்தியுள்ளது. அத்துடன் கடந்த 2024-25ம் நிதியாண்டில் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட டாப் 10 ஏழு இருக்கை கார்களின் பட்டியலில் (Top 10 7-Seater Cars), மஹிந்திரா எக்ஸ்யூவி 700 கார், 5வது இடத்தை பிடித்துள்ளது.

முதல் 4 இடங்களில் முறையே மாருதி சுஸுகி எர்டிகா (Maruti Suzuki Ertiga), மஹிந்திரா ஸ்கார்பியோ (Mahindra Scorpio), டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா மற்றும் ஹைக்ராஸ் (Toyota Innova Crysta + Hycross), மஹிந்திரா பொலிரோ (Mahindra Bolero) ஆகிய கார்கள் உள்ளன.
இந்த வரிசையில் 5வது இடம் பிடித்துள்ள மஹிந்திரா எக்ஸ்யூவி 700 கார் தற்போதைய நிலையில் 14.49 லட்ச ரூபாய் என்ற ஆரம்ப விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட் 25.14 லட்ச ரூபாய் என்ற விலையில் விற்பனையாகி கொண்டுள்ளது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.
இந்த விலைக்கு மதிப்பு வாய்ந்த தயாரிப்பாக மஹிந்திரா எக்ஸ்யூவி 700 கருதப்படுகிறது. எனவேதான் அதன் விற்பனை எண்ணிக்கை மிகவும் பிரம்மாண்டமானதாக இருக்கிறது. அத்துடன் 5 சீட்டர், 6 சீட்டர் மற்றும் 7 சீட்டர் என 3 விதமான இருக்கை ஆப்ஷன்களில் கிடைப்பதும், மஹிந்திரா எக்ஸ்யூவி 700 காரின் முக்கியமான ப்ளஸ் பாயிண்ட்களில் ஒன்றாக கருதப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: மஹிந்திரா எக்ஸ்யூவி 700 காரில், சக்தி வாய்ந்த இன்ஜின் ஆப்ஷன்கள் மற்றும் அதிநவீன வசதிகள் வழங்கப்படுகின்றன. அத்துடன் இந்த காரின் டிசைனும் கம்பீரமாக இருக்கிறது. இவை அனைத்தும் ஒன்று சேர்ந்துதான், மஹிந்திரா எக்ஸ்யூவி 700 காரை மிகவும் வெற்றிகரமான தயாரிப்பாக மாற்றியுள்ளன.


Click it and Unblock the Notifications








