மாருதி 800 கார்னு சொன்னா மாருதி கம்பெனி கூட நம்பாது! இத்தனை வருஷம் பாதுகாத்ததே பெரிய விஷயம்!
கார் மாடிஃபிகேஷன்கள் அண்மைக்காலமாக ஒரு விவாதப் பொருளாக மாறி வருகின்றன. இந்த வகையில், மாருதி 800 கார் ஒன்று இங்கு முற்றிலும் மாற்றி அமைக்கப்பட்டு, இரண்டு கதவுகள் கொண்ட திறக்கக்கூடிய மேற்கூரை உடன் காட்சியளிக்கிறது. இதனால் பலரால் இது மாருதி 800 என்பதையே நம்ப முடியவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
மாருதி 800, பல இந்தியக் குடும்பங்களில் ஒரு அடையாளமாக மாறிய கார் என சொன்னால் அது மிகையில்லை. தற்போது உற்பத்தி செய்யப்படாவிட்டாலும், இளைஞர்கள் மத்தியில் இதற்கு இப்போதும் ஒரு தனி மதிப்பு உண்டு. இத்தகைய கார்களை, சில நவீன கார் ஷாப்கள் நம்ப முடியாத அளவிற்கு மாற்றி அமைத்து வருகின்றன. அவ்வாறு மாற்றப்பட்ட மாருதி 800 கார் ஒன்றைப் பற்றி இங்கே காணலாம்.

'மேக்னெட் 11' என்கிற யூடியூப் சேனல் மூலம் கிடைத்துள்ள இந்த படங்கள் மூலம் மாருதி 800 காரின் உண்மையான வடிவத்தை அடையாளம் காண்பது மிகவும் கடினமாக உள்ளது. காரின் முன் பகுதியில் சதுர வடிவில் ஹெட்லைட்கள், தனித்துவமான பொனட் மற்றும் பம்பர் அமைப்பு என ரெட்ரோ ஸ்டைலிங் அம்சங்கள் உள்ளன.
முன்பக்க அடிப்பகுதியில் எளிய வடிவமைப்புடன் கூடிய பம்பரில் பழைய ஃபாக் லைட்டுகள் பொருத்தப்பட்டுள்ளன. காரின் பக்கவாட்டில், நான்கு கதவுகளுக்கு இரண்டு கதவுகள் கொண்ட வடிவமைப்பு மற்றும் கவர்ச்சிகரமான அலாய் சக்கரங்களுடன் காட்சியளிக்கிறது. இருப்பினும், இவற்றை விடவும் நம்மை இந்த காரில் வசீகரிப்பது என்றால், அது மேனுவலாக மென்மையாக மடக்கூடிய காரின் மேற்கூரை ஆகும்.

கதவுகள் மட்டுமின்றி, கார் உரிமையாளர் இதை இரண்டு இருக்கைகள் கொண்ட ஸ்போர்ட்ஸ் காராக மாற்றி, நீண்டத்தூர நெடுஞ்சாலைப் பயணங்களுக்கு ஏற்றதாக பயன்படுத்த விரும்பியுள்ளார். கதவுகளில் பிரேம் இல்லாத வடிவமைப்பு தனித்துவமானது. காருக்கு மேலும் அழகு சேர்க்கும் வகையில் கவர்ச்சிகரமான பாடி கிராஃபிக்ஸ் பயன்படுத்தப்பட்டுள்ளன.
பின்பக்க டெயில் லைட்கள் 'செவ்ரோலெட் ஸ்பார்க்' கார் ஒன்றில் இருந்து எடுக்கப்பட்டுள்ளன. காரின் டிக்கிப் பகுதி சற்று வளைந்த வடிவத்தைக் கொண்டுள்ளது. காரின் உட்புறத்தில், கதவு பேனல்கள் முற்றிலும் மாற்றப்பட்டுள்ளன. இரண்டே இருக்கைகள் மற்றும் மோமோ-டைப் ஸ்டீயரிங் வீல் உள்ளிட்டவை இதை ஓட்டும்போது ரேலி கார் உணர்வை ஏற்படுத்துகிறது.

அத்துடன், ஆஃப்டர்-மார்க்கெட் மியூசிக் சிஸ்டம், டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளே, ஏசி போன்ற வசதிகளும் உள்ளன. என்ஜின் மாற்றப்படாமல் இருப்பது, வாகனத்தின் நம்பகத்தன்மையை உறுதி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஏனெனில், மாருதி 800 கார்களில் நம்பகமான 796சிசி, 3-சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டு வந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பல வாகனங்கள் இவ்வாறு மாற்றி அமைக்கப்பட்ட சம்பவங்களை இதற்குமுன் நாம் பார்த்திருக்கிறோம். மாருதி 800 போன்ற மாஸ் மார்க்கெட் கார்களை உயர்தர ஸ்போர்ட்ஸ் கார்களைப் போல வடிவமைத்து கொடுக்கும் நிறுவனங்களின் எண்ணிக்கை சமீப காலத்தில் அதிகரித்துள்ளதால், இது போன்ற கார் மாடிஃபிகேஷன்களையும் அடிக்கடி பார்க்க முடிகிறது.

இருப்பினும், மாருதி 800 போன்ற பல வருடங்களுக்கு முன் விற்பனை நிறுத்தப்பட்ட காரையே இவ்வாறு கன்வர்டிபிள் கார் போன்று மாற்ற முடிவதில் இருந்து, இந்தியாவின் கார் கஸ்டமைசேஷன் கலாச்சாரம் எந்த அளவிற்கு வளர்ந்துள்ளது என்பதை அறிய முடிகிறது. இந்த வடிவமைப்பு கண்கவரக் கூடியதாக இருந்தாலும், சில தீவிர மாருதி 800 ரசிகர்கள் இந்த மாடிஃபிகேஷனை ஜீரணிக்க சிரமப்படுவார்கள்.


Click it and Unblock the Notifications









