'சோப்பு டப்பா' செல்லம் ரிட்டர்ன் வருதா!.. உண்மை என்ன? புதிய ஆம்னி காருக்காக காத்திருக்கலாமா?..
இந்தியாவில் கடந்த காலத்தில் இருந்து விற்பனையில் இருந்து அகற்றப்பட்டு கார் மாடல்கள் சில ஒவ்வொன்றாக மீண்டும் விற்பனைக்கு வர தொடங்கி இருக்கின்றன. இதற்கு சிறந்த உதாராணமாக டாடா சஃபாரி கார் மாடலை கூறலாம். புதுப் பொலிவுடனும், புதிய அவதாரத்திலும் அது தற்போது விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே மாருதி சுஸுகி ஆம்னி (Maruti Suzuki Omni) இந்தியாவில் மீண்டும் விற்பனைக்கு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
ஆம்னி, கார் மாடலை அறியாதவர்களே இருக்க முடியாது. சோப்பு டப்பா உருவத்தில் இருக்கும் இந்த கார் இந்தியாவில் விற்பனையில் இல்லை என்றாலும் அது இப்போதும் பல ரோல்களில் பயன்பாட்டில் இருக்கின்றது. குடும்பங்களுக்கான கார், பள்ளி மாணவர்களுக்கான ஸ்கூல் வேன், உயிர் காக்கும் ஆம்புலன்ஸ் வாகனம் மற்றும் சிலருக்கு லோடு வண்டியாகவும் பயன்பட்டுக் கொண்டு உள்ளது.

இத்தகைய பன்முக பயன்பாட்டை வழங்கக் கூடிய கார் மாடல் இப்போது விற்பனையில் இல்லை என்பது பலருக்கும் வருத்தமளிக்கக் கூடியதாக உள்ளது. இந்த வருத்தத்திற்கு முற்று புள்ளி வைக்கும் விதமாகவே ஓர் தகவலே தற்போது இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கின்றது. மீண்டும் ஆம்னி விற்பனைக்கு வர இருப்பது பற்றிய தகவலே அது ஆகும். இந்த தகவலின் உண்மை தன்மை என்ன என்பது பற்றிய விபரங்களையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாங்க விரிவான பதிவிற்குள் போகலாம்.
ஆம்னி விரைவில் விற்பனைக்கு வர இருப்பதாக வெளியாகி இருக்கும் தகவல் ஓர் வதந்தியே ஆகும். இது உண்மை தன்மை அற்ற தகவல் ஆகும். ஆம்னியின் வருகை குறித்த எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் இதுவரை மாருதி சுஸுகி-யிடமிருந்து வெளியாகவில்லை என்பதே உண்மை. இதுபற்றிய தகவல் எதிர்காலத்தில்வெளியாகுமா என்பதும் சந்தேகமே.

மேலும், இதற்கான எந்தவொரு அறிகுறியும் இதுவரை தென்படவில்லை என்பதை நாம் இங்கு ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும். ஆகையால், ஆம்னியின் வருகைக்காக காத்திருப்பது நேரத்தை வீணடிக்கக் கூடிய செயல் என்பதே ஆட்டோத்துறை சார்ந்த வல்லுநர்களின் கருத்தாக உள்ளது. இருப்பினும், ஆம்னி இந்தியர்களின் மனம் கவர்ந்த வாகனம் என்பதை நம் யாராலும் மறுக்க முடியாத ஒன்று.
1984-லேயே இந்த வாகனம் முதன் முதலில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. விற்பனைக்கு வந்த சில மாதங்களிலேயே இந்திய மோட்டார் வாகனத் துறையில் தனக்கென ஒரு இடத்தை அது பிடித்தது. ஆனால், இது நீண்ட வருடங்களுக்கு நீடிக்கவில்லை. குறைந்த பாதுகாப்பு, எளிமையான தோற்றம் மற்றும் பெரிய அளவில் அப்டேட் இல்லாத நிலை உள்ளிட்டவற்றால் இதன் மீதான மோகம் மக்கள் மத்தியில் குறையத் தொடங்கியது.

இந்த சூழலிலேயே இந்திய அரசாங்கம் புதிய பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் மாசு கட்டுப்பாட்டு விதிகளை நடைமுறைக்குக் கொண்டு வந்தது. இதுவே அந்த காரை மொத்தமாக சந்தையை விட்டு வெளியேற்றும் நிலைக்கு தள்ளியது. இறுதியாக ஆம்னியின் பயணம் 2019 ஆம் ஆண்டுடன் முடிவடைந்தது.
இது சந்தையில் வெளியேற்றப்பட்டு கிட்டதட்ட 6 ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்த நிலையிலேயே சமூக வலை தளங்களில் ஏஐ (AI) தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட ஆம்யின் படங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கின்றன. மேலும், விரைவில் ஆம்னி விற்பனைக்கு வர இருப்பதாகவும் வதந்திகளைப் பரப்பிக் கொண்டிருக்கின்றனர்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பலரும் விரைவில் மாருதி சுஸுகி ஆம்னி விற்பனைக்கு வந்துவிடும் என்கிற நம்பிக்கையில் உள்ளனர். ஆனால், இது நடக்க சாத்தியமே இல்லை. இதற்கான எந்தவொரு சிறிய அறிகுறிகூட இல்லை. இப்போது ஆம்னி இல்லாத இடத்தை ஈகோ கார் மாடல் தீர்த்து வைத்துக் கொண்டிருக்கின்றது. ஆகையால், மாருதி சுஸுகி ஆம்னியை மீண்டும் களமிறக்கும் என்பது கேள்விக்குறியே.


Click it and Unblock the Notifications









