பெட்டி கடைல எதோ கடலை மிட்டாய் விக்கற மாதிரி கார்களை வித்துட்டு இருக்காங்க! நடந்த விஷயத்தை நம்பவே முடியல!
இந்தியாவின் நம்பர்-1 கார் உற்பத்தி நிறுவனமாக உள்ள மாருதி சுஸுகி (Maruti Suzuki), விற்பனையில் மிக பிரம்மாண்டமான மைல்கல் (Sales Milestone) ஒன்றை கடந்துள்ளது. இந்திய சந்தையில் ஒட்டுமொத்தமாக 3 கோடி (3 Crore) கார்கள் விற்பனை என்பதுதான் அந்த மைல்கல் ஆகும்.
இந்தியாவில் மாருதி சுஸுகி நிறுவனத்தின் கார் விற்பனை, கடந்த 1983ம் ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கியது. சரியாக 28 ஆண்டுகள் மற்றும் 2 மாதங்கள் கடந்த நிலையில், அதாவது 2012ம் ஆண்டு பிப்ரவரி மாதம், 1 கோடி கார்கள் விற்பனை என்ற மைல்கல்லை மாருதி சுஸுகி நிறுவனம் கடந்தது.

அதன் பின் மாருதி சுஸுகி நிறுவன கார்களின் விற்பனை இன்னும் வேகம் எடுத்தது. அடுத்த 7 ஆண்டுகள் மற்றும் 5 மாதங்களில், அதாவது 2019ம் ஆண்டு ஜூலை மாதம், 2 கோடி கார்கள் விற்பனை என்ற மைல்கல்லை மாருதி சுஸுகி நிறுவனம் கடந்தது. இது நடந்து, 6 ஆண்டுகள் மற்றும் 4 மாதங்கள் மட்டுமே கடந்துள்ளன.
அதற்குள்ளாக தற்போது (2025ம் ஆண்டு நவம்பர் மாதம்) 3 கோடி கார்கள் விற்பனை என்ற மைல்கல்லை மாருதி சுஸுகி நிறுவனம் கடந்து விட்டது. இது மிகவும் பிரம்மாண்டமான மைல்கல் என்பதில் நமக்கு துளியும் சந்தேகம் இல்லை. இதற்கு மாருதி சுஸுகி நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்த அனைத்து கார்களும் தங்களின் பங்களிப்பை வழங்கியுள்ளன.

ஆனால் 3 கார்கள்தான் மிக முக்கியமான பங்களிப்பை வழங்கியுள்ளன. அவை மாருதி சுஸுகி ஆல்டோ (Maruti Suzuki Alto), மாருதி சுஸுகி வேகன் ஆர் (Maruti Suzuki Wagon R) மற்றும் மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் (Maruti Suzuki Swift) ஆகியவை ஆகும்.
மாருதி சுஸுகி நிறுவனம் தற்போது வரை ஒட்டுமொத்தமாக 47 லட்சம் ஆல்டோ கார்களை விற்பனை செய்துள்ளது. அதே நேரத்தில் 34 லட்சம் வேகன் ஆர் கார்களையும், 32 லட்சம் ஸ்விஃப்ட் கார்களையும் மாருதி சுஸுகி நிறுவனம் விற்பனை செய்துள்ளது. ஆக மொத்தத்தில் இந்த 3 கார்கள் மட்டும் ஒட்டுமொத்தமாக 1 கோடியே 13 லட்சம் என்ற விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்துள்ளன.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: மாருதி சுஸுகி நிறுவனத்தின் கார்களை இந்திய வாடிக்கையாளர்கள் விரும்பி வாங்குவதற்கு ஏராளமான காரணங்கள் உள்ளன. குறைவான விலை, அதிக மைலேஜ், பிரம்மாண்டமான சேல்ஸ் மற்றும் சர்வீஸ் நெட்வொர்க் போன்றவற்றை எல்லாம் இதற்கு மிகவும் முக்கியமான காரணங்களாக கூற முடியும்.
மாருதி சுஸுகி நிறுவனத்தின் கார்கள், வாடிக்கையாளர்கள் வழங்கும் பணத்திற்கு மதிப்பு வாய்ந்த தயாரிப்புகளாக இருக்கின்றன. இவை அனைத்தும் ஒன்று சேர்ந்து, மாருதி சுஸுகி நிறுவனத்தை மிகவும் வெற்றிகரமான கார் நிறுவனங்களில் ஒன்றாக மாற்றியுள்ளன. அத்துடன் மாருதி சுஸுகி நிறுவனம் ஹேட்ச்பேக், செடான், எஸ்யூவி என கிட்டத்தட்ட அனைத்து செக்மெண்ட்களிலும் ஏராளமான கார்களை விற்பனை செய்கிறது.
இதன் மூலம் மாருதி சுஸுகி நிறுவனத்தால் பலதரப்பட்ட வாடிக்கையாளர்களையும் கவர முடிகிறது. இந்தியாவில் தற்போது கார்கள் மீதான ஜிஎஸ்டி வரிகள் குறைக்கப்பட்டுள்ளதால், கார் வாங்குபவர்களின் எண்ணிக்கை மேலும் உயர்ந்துள்ளது. இது மாருதி சுஸுகி நிறுவனத்திற்கு இன்னும் பலன் அளிக்க கூடியதாக இருக்கும் என நாங்கள் கருதுகிறோம். அதாவது வரும் காலங்களில், மாருதி சுஸுகி நிறுவனம் விற்பனையில் இன்னும் பல்வேறு புதிய உச்சங்களை எட்டலாம்.


Click it and Unblock the Notifications








