வெறும் 4 லட்சம்தானா! 34 கிமீ மைலேஜ் தர்ற காரை கம்மி ரேட்ல வித்து தள்றாங்க! மண்டய சொறியும் போட்டி நிறுவனங்கள்!
இந்தியாவில் அறிமுகமே தேவை இல்லை என்னும் அளவிற்கு அனைத்து தரப்பு மக்கள் மத்தியிலும் பரிட்சயமாக இருந்து வரும் கார்களில் ஒன்று மாருதி சுஸுகி ஆல்டோ கே10 (Maruti Suzuki Alto K10). ஹேட்ச்பேக் (Hatchback) ரகத்தை சேர்ந்த இந்த காரின் 2024-25ம் நிதியாண்டிற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) தற்போது வெளியாகியுள்ளது. இது கடந்த 2024ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதியில் இருந்து நடப்பு 2025ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி வரையிலான விற்பனை நிலவரம் ஆகும். இந்த காலகட்டத்தில் 1,02,232 ஆல்டோ கே10 கார்களை மாருதி சுஸுகி விற்பனை செய்துள்ளது.
ஆனால் அதற்கு முந்தைய 2023-24ம் நிதியாண்டில், அதாவது கடந்த 2023ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதியில் இருந்து கடந்த 2024ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி வரையிலான காலகட்டத்தில், மாருதி சுஸுகி நிறுவனம் 1,11,955 ஆல்டோ கே10 கார்களை விற்பனை செய்திருந்தது. இது 9 சதவீத வீழ்ச்சி ஆகும்.

இருப்பினும் கடந்த 2024-25ம் நிதியாண்டில், அதிகமாக விற்பனை செய்யப்பட்ட டாப் 10 ஹேட்ச்பேக் கார்களின் (Top 10 Hatchbacks) பட்டியலில், மாருதி சுஸுகி ஆல்டோ கே10 கார், 4வது இடத்தை பிடித்துள்ளது. முதல் 3 இடங்களில் முறையே, மாருதி சுஸுகி வேகன் ஆர் (Maruti Suzuki Wagon R), மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் (Maruti Suzuki Swift), மாருதி சுஸுகி பலேனோ (Maruti Suzuki Baleno) ஆகிய கார்கள் உள்ளன.
மாருதி சுஸுகி ஆல்டோ கே10 சந்தித்திருப்பது சிறிய அளவிலான சரிவுதான். எனவே நடப்பு 2025-26ம் நிதியாண்டில், இந்த சரிவில் இருந்து, மாருதி சுஸுகி ஆல்டோ கே10 மீண்டு வந்து விடும் என நாம் எதிர்பார்க்கலாம். விற்பனையில் சரிவை சந்தித்திருந்தாலும் கூட, மாருதி சுஸுகி ஆல்டோ கே10 பிரம்மாண்டமான விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்துள்ளது என்பதில் சந்தேகம் இல்லை.

இதற்கு முதல் காரணம் அதன் குறைவான விலைதான். இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் மாருதி சுஸுகி ஆல்டோ கே10 கார், வெறும் 4.23 லட்ச ரூபாய் என்ற ஆரம்ப விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலையும் கூட வெறும் 6.21 லட்ச ரூபாயாக மட்டுமே இருக்கிறது.
இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும். விலை குறைவானது என்றாலும் கூட, மாருதி சுஸுகி ஆல்டோ கே10 காரில், 6 ஏர்பேக்குகள் வழங்கப்படுகின்றன. ஆரம்ப நிலை வேரியண்ட் முதல் டாப் வேரியண்ட் வரை அனைத்து வேரியண்ட்களிலும் 6 ஏர்பேக்குகள் வழங்கப்படுகின்றன என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.
அத்துடன் இந்த செக்மெண்ட்டிலேயே முதல் முறையாக 4 ஸ்பீக்கர்களும் கொடுக்கப்படுகின்றன. வசதிகளை (Features) போலவே மாருதி சுஸுகி ஆல்டோ கே10 காரின் மைலேஜூம் (Mileage) சிறப்பானது. இருப்பதிலேயே அதிகபட்சமாக இந்த காரின் சிஎன்ஜி வேரியண்ட்கள் 33.40 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்குகின்றன என மாருதி சுஸுகி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: குறைவான விலையில் அதிக மைலேஜ் வழங்க கூடிய ஒரு காரை எதிர்பார்க்க கூடிய வாடிக்கையாளர்களுக்கு மாருதி சுஸுகி ஆல்டோ கே10 மிகச்சிறந்த ஆப்ஷனாக இருக்கும். முதல் முறையாக ஒரு புதிய காரை வாங்க திட்டமிட்டுள்ளவர்கள், மாருதி சுஸுகி ஆல்டோ கே10 காரை பரிசீலனை செய்யலாம்.


Click it and Unblock the Notifications








