850கிமீ பயணத்துக்கு 45 மணிநேரம்... இந்தியன் இரயில்வேயை நம்பி போன மாருதி சுஸுகி!!
ஜம்மு காஷ்மீரின் அனந்தநாகில் உள்ள மாருதி சுஸுகி (Maruti Suzuki) டீலர்ஷிப் ஷோரூமுக்கு சரக்கு ரயிலில் கார்கள் கொண்டுவரப்பட்டு உள்ளன. தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படும் கார்கள் இரயில்கள் மூலமாக டீலர்ஷிப் ஷோரூம்களுக்கு கொண்டு செல்லப்படுவது சமீப காலமாக வழக்கமான ஒன்றாக மாறி வருகிறது.
இருப்பினும், மாருதி சுஸுகி கார்கள் இரயிலில் ஏற்றி செல்லப்பட்ட இந்த நிகழ்வை ஹைலைட்டாக பார்ப்பதற்கு காரணம், மலைப்பிரதேச பகுதியான காஷ்மீருக்கு இந்த போக்குவரத்து நடைபெற்று இருப்பதாகும். மாருதி சுஸுகி நிறுவனம் இந்தியாவின் பல இடங்களுக்கு இரயில்கள் மூலமாக கார்களை அனுப்பி வைத்துள்ளது. இருப்பினும், காஷ்மீருக்கு இதுதான் முதல்முறை என கூறப்படுகிறது.

ஹரியானா மாநிலத்தில் உள்ள மாருதி சுஸுகி நிறுவனத்தின் மனேசர் (Manesar) ஆலையிலிருந்து 116 வாகனங்களை ஏற்றி வந்த முதல் ரயில் காஷ்மீர் இரயில் நிலையத்தை வந்தடைந்தது. காஷ்மீர் பள்ளத்தாக்கிற்கு ரயில்கள் மூலம் வாகனங்களை அனுப்பிய முதல் இந்திய வாகன தயாரிப்பாளர் என்ற பெருமையை மாருதி சுஸுகி இந்தியா லிமிடெட் பெற்றுள்ளது.
ஏனெனில், காஷ்மீர் பள்ளத்தாக்கிற்கு நேரடி ரயில் இணைப்பு கடந்த ஜூன் மாதத்தில் தான் தொடங்கப்பட்டது. இது குறித்து மாருதி சுஸுகி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நூற்றுக்கும் மேற்பட்ட மாருதி சுஸுகி வாகனங்களை ஏற்றிச் சென்ற முதல் ரயில், சமீபத்தில் திறக்கப்பட்ட மனேசரில் உள்ள நிறுவனத்தின் ரயில்வே தளத்திலிருந்து புறப்பட்டது.

இந்த ரயில் ஜம்மு காஷ்மீரில் புதிதாக திறக்கப்பட்ட அனந்தநாக் (Anantnag) ரயில் நிலையத்திற்கு 850 கிலோமீட்டருக்கும் மேல் பயணித்து வந்து சேர்ந்தது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ரயில் இணைப்பு பயணிகள் சேவைக்கு மட்டுமல்லாமல், காஷ்மீர் பள்ளத்தாக்கில் இருந்து ஆப்பிள்களை கொண்டு செல்லவும் பயன்படுத்தப்படுகிறது.
அத்துடன், பள்ளத்தாக்கு முழுவதும் குளிர்சாதன ஸ்டோரேஜ் (Storage) வசதிகளை உருவாக்கவும், பராமரிக்கவும் தேவையான சிமென்ட் மற்றும் உதிரிபாகங்களும் ரயில்கள் மூலம் கொண்டு வரப்படுகின்றன. ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் இது குறித்து பேசுகையில், "சமீப காலமாக, பள்ளத்தாக்கிலிருந்து ஆப்பிள்கள் ஜம்மு காஷ்மீர் ரயில் இணைப்பு மூலம் கொண்டு செல்லப்படுகின்றன.
இப்போது, மாருதி சுஸுகி கார்கள் ரயில் மூலம் காஷ்மீர் பள்ளத்தாக்கிற்கு கொண்டு செல்ல துவங்கப்பட்டு உள்ளன. ஜம்மு- ஸ்ரீநகர் ரயில் பாதை ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு ஒரு புரட்சிகரமான மாற்றத்தை கொண்டு வரும்" என்று கூறினார். மாருதி சுஸுகி இந்தியா லிமிடெட்டின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ஹிசாஷி டேக்யூச்சி, "ரயில்வே மூலம் வாகனங்களை அனுப்புவது எங்கள் தளவாட உத்திக்கு மிக முக்கியமானது.

பிரதமரின் தலைமையில், நாடு முழுவதும் உருமாறும் உள்கட்டமைப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு உள்ளதற்கு நாங்கள் நன்றி கூறுகிறோம். செனாப் ஆற்றின் மீது கட்டப்பட்ட உலகின் மிக உயரமான ரயில்வே வளைவுப் பாலம் ஒரு முக்கிய மைல்கல்லாகும். இது காஷ்மீர் பள்ளத்தாக்கிற்கு தடையற்ற மற்றும் திறமையான இணைப்பை ஏற்படுத்தி, மாருதி சுஸுகி அப்பகுதியில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவையை வழங்க உதவுகிறது" என்று தெரிவித்தார்.
பிரதம மந்திரி கதிசக்தி (Gatishakti) தேசிய மாஸ்டர் திட்டத்திற்கு இணங்க, மாருதி சுஸுகி தனது மனேசர் மற்றும் குஜராத் உற்பத்தி ஆலைகளில் இரண்டு உள்-ஆலை ரயில்வே தளங்களை அமைத்துள்ளது. "இது நிறுவனத்தின் உற்பத்தி தொழிற்சாலைகளில் இருந்து நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு வாகனங்களை நேரடியாக கொண்டு செல்ல உதவுகிறது" என்று டேக்யூச்சி கூறினார்.
இந்த முயற்சி இந்திய ரயில்வேயால் பிரத்யேகமாக மாற்றியமைக்கப்பட்ட சரக்கு (NMG) இரயில் பெட்டிகள் மூலம் சாத்தியமாகிறது. இந்த வேகன்கள் மூலம் மாருதி சுஸுகியின் மொத்தம் 116 பயணிகள் கார்கள் காஷ்மீருக்கு கொண்டு செல்லப்பட்டன. இந்த கார்கள் மாருதி சுஸுகியின் மனேசர் தளத்திலிருந்து ரயிலில் ஏற்றப்பட்டு, அக்டோபர் 1 அன்று காஷ்மீருக்கு புறப்பட்டு, அக்டோபர் 3 அன்று காலை 9:50 மணிக்கு அனந்தநாகை வந்தடைந்தது. 850 கி.மீ தூரத்தை கடக்க மொத்தம் 45 மணி நேரம் ஆனது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த முயற்சி நீண்டகால தேவையாக இருந்தது. ஜம்முவிலிருந்து ஸ்ரீநகருக்கு நீண்ட பயண நேரம் மக்களின் பொருளாதாரத்தை முன்பு பாதித்தது. ஆனால், எப்போது செனாப் ஆற்றின் மீது பிரம்மாண்டமான பாலத்தை எழுப்பி, காஷ்மீருக்கு இரயில் போக்குவரத்தை மத்திய அரசு கொண்டுவந்ததோ அப்போதே இந்த பிரச்சனை பாதியாக குறைந்துவிட்டது. தற்போது, மாருதி சுஸுகி போன்ற பெரிய நிறுவனங்கள் இந்த இரயில் சேவையை பயன்படுத்த துவங்கி உள்ளதால் மீதி பிரச்சனையும் வரும் காலங்களில் குறைந்துவிடும் என நம்புகிறோம்.


Click it and Unblock the Notifications









