ஒரே மாதத்தில் 4 லட்சம் கார்கள்... இந்தியா ஏழை நாடுனு யாருங்க சொன்னா? முதலிடத்தில் மாருதி!
இந்தியாவில் கார்களுக்கு எந்த அளவிற்கு பெரிய மார்க்கெட் உள்ளது என்பதை நான் கூற வேண்டியது இல்லை. தினந்தோறும் சாலையில் அதிகரித்துவரும் கார்களின் எண்ணிக்கை தான் அதற்கு சாட்சியாகும். அதற்கேற்ப கார் நிறுவனங்களின் விற்பனையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதனை வெளிக்காட்டும் வகையில், கடந்த 2025 ஜனவரி மாதத்தில் இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் கார்களை விற்பனை செய்த டாப்-10 கார் நிறுவனங்களை பற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம். வாருங்கள் செய்திக்குள் போகலாம்.
இந்தியாவில் தற்சமயம் மொத்தம் 14 விதமான கார் நிறுவனங்கள் கார்களை விற்பனை செய்கின்றன. இந்த 14 நிறுவனங்களில் இருந்து ஒட்டுமொத்தமாக கடந்த ஜனவரியில் 4 லட்சத்து ஆயிரத்து 538 கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதுவே, கடந்த 2024ஆம் ஆண்டின் இதே ஜனவரி மாதத்தில் 3 லட்சத்து 93 ஆயிரத்து 471 கார்கள் மட்டுமே விற்கப்பட்டு இருந்தன.

இந்த வகையில் பார்த்தால், கடந்த ஆண்டு ஜனவரியை காட்டிலும் இந்த ஆண்டு ஜனவரியில் 8 ஆயிரத்து 67 கார்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதுவே, கடந்த 2024ஆம் ஆண்டின் கடைசி டிசம்பர் மாதத்தில் வெறும் 3 லட்சத்து 21 ஆயிரத்து 345 கார்கள் மட்டுமே விற்கப்பட்டு இருந்தன.
இந்த வகையில் பார்த்தால், கடந்த டிசம்பரை காட்டிலும் நடந்து முடிந்த ஜனவரியில் சுமார் 80 ஆயிரத்துக்கும் அதிகமான கார்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. வழக்கம்போல், கடந்த 2025 ஜனவரி மாதத்திலும் அதிக எண்ணிக்கையில் கார்களை விற்பனை செய்த நிறுவனமாக முதலிடத்தில் மாருதி சுஸுகி (Maruti Suzuki) உள்ளது.

மாருதி சுஸுகியில் இருந்து கடந்த மாதத்தில் மொத்தம் 1 லட்சத்து 73 ஆயிரத்து 599 கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இந்தியாவில் கார் வாங்குவோரில் 3இல் ஒருவர் நிச்சயமாக மாருதி சுஸுகி காரை தேர்வு செய்வதாக இந்த புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2024ஆம் ஆண்டின் ஜனவரியிலும் சரி, டிசம்பரிலும் சரி இதனை காட்டிலும் குறைவான எண்ணிக்கையிலான கார்களையே மாருதி சுஸுகி விற்பனை செய்திருந்தது.
மாருதி சுஸுகிக்கு அடுத்து 2வது இடத்தில் ஹூண்டாய் (Hyundai) 54 ஆயிரத்து 3 கார்கள் விற்பனை உடன் உள்ளது. கடந்த ஆண்டு டிசம்பரில் இந்த 2வது இடத்தை பிடித்து அனைவரையும் ஆச்சிரியப்படுத்திய டாடா மோட்டார்ஸ் நிறுவனம், கடந்த மாத விற்பனையில் 4வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இந்த முறை, 3வது இடத்தை அனைவரையும் ஆச்சிரியப்படுத்தும் விதமாக மஹிந்திரா (Mahindra) பிடித்துள்ளது.

மஹிந்திராவில் இருந்து கடந்த மாதத்தில் 50,659 கார்களும், டாடாவில் இருந்து 48,075 கார்களும் விற்பனை செய்யப்பட்டுள்ளன. 5வது மற்றும் 6வது இடங்களை டொயோட்டா, கியா பெற்றுள்ளன. இவற்றில் இருந்து கடந்த மாதத்தில் முறையே 26,178 மற்றும் 25,025 கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. 7- 10வது இடங்களில் ஹோண்டா (6,103), எம்ஜி மோட்டார் (4,455), ஸ்கோடா (4,133) மற்றும் ஃபோக்ஸ்வேகன் (3,344) உள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ரெனால்ட், நிஸான் போன்ற முன்னணி கார் நிறுவனங்கள் எல்லாம் இந்த டாப்-10 லிஸ்ட்டிலேயே இல்லை. இந்த லிஸ்ட்டில் நம்மை வெகுவாக வசீகரிப்பது, மஹிந்திராவின் வளர்ச்சி ஆகும். ஏனெனில், முதல்முறையாக ஒரு மாதத்தில் கார்கள் விற்பனையில் 50 ஆயிரம் என்கிற மைல்கல்லை மஹிந்திரா கடந்துள்ளது.


Click it and Unblock the Notifications









