லட்ச கணக்கான மக்கள் வாங்கும் மாருதி காரில் இவ்வளவுதான் பாதுகாப்பா? உண்மையை போட்டுடைத்த கிராஷ் டெஸ்ட் முடிவுகள்
மாருதி சுஸுகி (Maruti Suzuki), இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் கார்களை விற்பனை செய்யக்கூடிய இந்தியாவின் நம்பர் ஒன் கார் நிறுவனம். மாருதி சுஸுகி அடைந்திருக்கும் இந்த உயரத்திற்கு கடந்த காலங்களில் இருந்து பல மாருதி கார்கள் பங்களிப்பை அளித்துள்ளன. அந்த வகையில், சமீப காலமாக சிறப்பாக விற்பனையாகும் மாருதி சுஸுகி கார்களுள் ஒன்றாக பலேனோ (Baleno) உள்ளது. இத்தனைக்கும் மற்ற விலை குறைவான மாருதி கார்களை காட்டிலும் பலேனோவின் விலை சற்று அதிகமாக இருப்பினும், இந்த காரை பலரும் போட்டி போட்டு வாங்கி வருகின்றனர்.
ஒவ்வொரு மாதமும் சராசரியாக 10 ஆயிரத்தில் இருந்து 15 ஆயிரம் பலேனோ கார்கள் அசால்ட்டாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இந்த அளவிற்கு இந்திய மக்களின் விருப்பமான காராக விளங்கும் பலேனோவிற்கு பாரத் என்சிஏபி கிராஷ் டெஸ்ட்டில் (Bharat NCAP Crash Test) முழு மதிப்பெண் வழங்கப்படாதது சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கார்களின் தரம் எந்த அளவிற்கு உள்ளது? விபத்தின்போது பயணிகளின் உயிரை எந்த அளவிற்கு பாதுகாக்கிறது? என்பதை அறியும் விதமாக உலகம் முழுவதும் பல்வேறு என்சிஏபி கிராஷ் டெஸ்ட்கள் பல்வேறு குழுக்களால் நடத்தப்பட்டு வருகின்றன. ஐரோப்பிய என்சிஏபி, ஆசிய என்சிஏபி, ஆஸ்திரேலியன் என்சிஏபி என பல குழுக்கள் தங்களது கண்டங்களில் விற்பனை செய்யப்படும் கார்களை சோதனை செய்து மதிப்பெண்களை வழங்கி வருகின்றன.
இவ்வளவு ஏன், உலகளாவிய என்சிஏபி கூட உள்ளது. இந்த வகையில் இந்தியாவிற்கென பிரத்யேகமான ஒரு என்சிஏபி இருக்க வேண்டும் என்பதற்காக கடந்த 2023ஆம் ஆண்டில் இந்திய அரசு அறிமுகம் செய்ததுதான், பாரத் என்சிஏபி ஆகும். 2023ஆம் ஆண்டின் இறுதியில் அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து இந்திய மார்க்கெட்டில் பிரபலமாக உள்ள பல கார்கள் பாரத் என்சிஏபி கிராஷ் டெஸ்ட்டில் உட்படுத்தப்பட்டுள்ளன.

அந்த வரிசையில், இரு மாருதி சுஸுகி கார்கள் சமீபத்தில் பாரத் என்சிஏபி கிராஷ் டெஸ்ட்டிற்கு உட்படுத்தப்பட்டு, தற்போது அவற்றின் சோதனை முடிவுகள் வெளிவந்துள்ளன. இந்த இரு மாருதி கார்களில் டிசைர் (Dzire) காரின் சோதனை முடிவுகளை பற்றி தனியாக ஒரு தொகுப்பில் விளக்கி கூறியுள்ளோம். இந்த தொகுப்பில் பலேனோ பெற்ற மதிப்பெண்களை பற்றி பார்ப்போம்.
பாரத் என்சிஏபி கிராஷ் டெஸ்ட்டில் தற்சமயம் விற்பனையில் இருக்கும் பலேனோ காருக்கு 5க்கு 4 நட்சத்திர மதிப்பீடு வழங்கப்பட்டுள்ளது. பெரியவர்கள் பாதுகாப்பில் இந்த ஹேட்ச்பேக் காருக்கு 5க்கு 4 நட்சத்திரங்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில், குழந்தைகள் பாதுகாப்பில் வெறும் 3 நட்சத்திரங்களை மட்டுமே பலேனோ பெற்றுள்ளது. இருப்பினும், பெரியவர்கள் பாதுகாப்பு மதிப்பீடு தான் முக்கியமாக பார்க்கப்படும் என்பதால், 4-ஸ்டார் ரேட்டிங் காராக பலேனோ அறிவிக்கப்பட்டுள்ளது.

பலேனோ காரின் வேரியண்ட்களை பொறுத்து, அது பெற்றிருக்கும் மதிப்பெண்கள் சற்று மாறுப்படுகின்றன. இந்த ஹேட்ச்பேக் காரின் விலைமிக்க ஜெட்டா மற்றும் ஆல்பா வேரியண்ட்கள் பெரியவர்களுக்கு கூடுதல் பாதுகாப்பை வழங்கக்கூடியவைகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இந்த விலைமிக்க டாப் வேரியண்ட்கள் பெரியவர்கள் பாதுகாப்பில் 32க்கு 26.52 மதிப்பெண்களை பெற்றுள்ளன.
அதுவே, பலேனோ காரின் விலை குறைவான சிக்மா மற்றும் டெல்டா வேரியண்ட்களுக்கு பெரியவர்கள் பாதுகாப்பில் 32க்கு 24.04 மதிப்பெண்கள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. இந்த வித்தியாசத்திற்கு முக்கியமான காரணம், பலேனோவின் டாப் வேரியண்ட்களில் 6 ஏர்பேக்குகள் வழங்கப்படுகின்றன. ஆனால், விலை குறைவான வேரியண்ட்களில் 2 ஏர்பேக்குகள் மட்டுமே வழங்கப்படுகின்றன. குழந்தைகள் பாதுகாப்பில் பலேனோ காரின் அனைத்து வேரியண்ட்களும் ஒரே மாதிரியாக 49க்கு 34.81 மதிப்பெண்களை பெற்றுள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் தெருவுக்கு ஒரு பலேனோ காரை ஆவது குறைந்தப்பட்சம் பார்க்கலாம் என்கிற அளவிற்கு மக்கள் மத்தியில் மிக பிரபலமானதாக விளங்கும் மாருதி சுஸுகி பலேனோ காரின் விற்பனை தற்போது வெளியாகி இருக்கும் பாரத் என்சிஏபி கிராஷ் டெஸ்ட் முடிவுகளால் ஆட்டம் காணுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். உண்மையில், 4-ஸ்டார் ரேட்டிங் என்பது நாம் எதிர்பார்த்ததை காட்டிலும் பலேனோ பெற்றிருக்கும் சிறந்த மதிப்பீடு ஆகும்.


Click it and Unblock the Notifications









