மாருதி கார்களை வெறித்தனமா நம்புறதுக்கு இவ்வளவு பெரிய கூட்டமா!! மாசத்துக்கு லட்ச பேர் கஸ்டமர்ஸ்!
மாருதி சுஸுகி (Maruti Suzuki), இந்தியாவின் நம்பர் ஒன் கார் நிறுவனம். ஒவ்வொரு மாதமும் இலட்சக்கணக்கிலான கார்களை விற்பனை செய்யக்கூடிய மாருதி சுஸுகியை விற்பனையில் முந்த இனி ஒரு நிறுவனம் பிறந்துதான் வர வேண்டும் போலிருக்கிறது. ஏனெனில், அந்த அளவிற்கு மற்ற அனைத்து கார் நிறுவனங்களை காட்டிலும் அதிக எண்ணிக்கையிலான கார்களை விற்பனை செய்யும் நிறுவனமாக மாருதி சுஸுகி விளங்குகிறது. இதனை வெளிக்காட்டும் வகையில் கடந்த 2025 ஜூன் மாதத்தில் மாருதி சுஸுகி விற்பனை செய்த கார்கள் குறித்த விபரங்கள் கிடைக்க பெற்றுள்ளன. அவற்றை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
இந்திய- ஜப்பானிய கூட்டு நிறுவனமான மாருதி சுஸுகி அதன் விலை குறைவான மற்றும் நன்கு மைலேஜ் தரக்கூடிய கார்கள் மூலமாக விற்பனையில் அதிக ஆதிக்கம் செலுத்தி வருகிறது. கடந்த ஜூன் மாத விற்பனையிலும் இது தொடர்ந்துள்ளது என்றாலும், 2024 ஜூன் மாதத்துடன் ஒப்பிடுகையில் மாருதி சுஸுகி கார்களின் விற்பனை 6% குறைந்துள்ளது.

கடந்த ஜூன் மாதத்தில் மாருதி சுஸுகி விற்பனை செய்த கார்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 67 ஆயிரத்து 993 ஆகும். இதில், மாருதி சுஸுகியின் உள்நாட்டு விற்பனை மற்றும் வெளிநாட்டு ஏற்றுமதி என இரண்டும் அடங்குகின்றன. மாருதி சுஸுகியின் வெளிநாட்டு ஏற்றுமதி மிகவும் குறைவுதான் என்பதால், இந்த 1 லட்சத்து 67 ஆயிரத்து 993இல் பெரும்பான்மை ஆனவை உள்நாட்டு விற்பனையே ஆகும்.
கடந்த ஜூன் மாதத்தில் 1 லட்சத்து 67 ஆயிரத்து 993 கார்களை விற்பனை செய்துள்ள மாருதி சுஸுகி நிறுவனம் 2024 ஜூன் மாதத்தில் இதனை காட்டிலும் 11 ஆயிரத்து 235 கார்கள் அதிகமாக 1 லட்சத்து 79 ஆயிரத்து 228 கார்களை விற்பனை செய்திருந்தது. மாருதி சுஸுகியின் வெளிநாட்டு ஏற்றுமதி ஓரளவிற்கு அதிகரித்து இருந்தாலும், உள்நாட்டு விற்பனை 2024 ஜூன் உடன் ஒப்பிடுகையில் கடந்த ஜூன் மாதத்தில் குறைந்துள்ளது.

இந்தியாவில் மட்டும் கடந்த ஜூனில் 1 லட்சத்து 21 ஆயிரத்து 339 கார்களை மாருதி சுஸுகி விற்பனை செய்துள்ளது. இது, 1 லட்சத்து 39 ஆயிரத்து 918 மாருதி சுஸுகி கார்கள் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட 2024 ஜூன் மாதத்துடன் ஒப்பிடுகையில் 15% குறைவாகும். கடந்த மாதத்தில் இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட மாருதி சுஸுகி கார்களின் எண்ணிக்கை 37 ஆயிரத்து 842 ஆகும்.
ஆனால், 2024 ஜூனில் 31 ஆயிரத்து 33 கார்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு இருந்ததால், அதனுடன் ஒப்பிடுகையில் மாருதி சுஸுகியின் வெளிநாட்டு ஏற்றுமதி 6 ஆயிரத்து 809 கார்கள், அதாவது 22% அதிகரித்துள்ளது. இவை இல்லாமல், சில கார்களை நேரடியாக மற்ற கார் நிறுவனங்களுக்கும் மாருதி சுஸுகி விற்பனை செய்கிறது.

தற்போதைக்கு, டொயோட்டா (Toyota) நிறுவனம் மட்டுமே மாருதி சுஸுகி கார்களை வாங்குகிறது. அந்த வகையில் கடந்த ஜூன் மாதத்தில் 8 ஆயிரத்து 277 மாருதி சுஸுகி கார்களை டொயோட்டா வாங்கியுள்ளது. அதுவே 2024 ஜூன் மாதத்தில் 8 ஆயிரத்து 812 கார்களை டொயோட்டா வாங்கி இருந்தது.
மாருதி சுஸுகி கார்கள் விற்பனையை பிரிவு வாரியாக பார்த்தோமேயானால், கடந்த ஜூன் மாதத்தில் 6,414 மினி கார்களையும், 54,177 காம்பெக்ட் கார்களையும், 1,028 சியாஸ் (Ciaz) கார்களையும் மாருதி சுஸுகி விற்பனை செய்துள்ளது. மாருதி சுஸுகியின் எஸ்யூவி/ எம்பிவி (SUV/ MPV) கார்கள் விற்பனை 2024 ஜூனை காட்டிலும் 8% குறைந்துள்ளது. அதேபோல், மாருதி சுஸுகி விற்பனை செய்யும் ஒரேயொரு வேன் மாடலான ஈக்கோ (Eeco)-இன் விற்பனையும் 13% குறைந்துள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த தொகுப்பில் இவ்வளவு நேரம் நாம் பார்த்தவை அனைத்தும் மாருதி சுஸுகியின் பயணிகள் வாகனங்களின் விற்பனை ஆகும். இவை இல்லாமல், சூப்பர் கேரி (Super Carry) என்கிற கமர்ஷியல் வாகனத்தையும் மாருதி சுஸுகி விற்பனை செய்கிறது. அதன் விற்பனையும் 2024 ஜூன் மாதத்தை காட்டிலும் கணிசமாக குறைந்துள்ளது. இவ்வாறு, பெரும்பாலான பிரிவுகளில் கடந்த ஜூன் மாதத்தில் சிறிய சரிவை மாருதி சுஸுகி கண்டுள்ளது.


Click it and Unblock the Notifications









