மாருதி கார் ஆலை ஓய்வில்லாம ஓடுதுனு தெளிவா தெரியுது! 20,000 பேர் ஒரே மாதத்தில் வாங்கிய இரு கார்கள்!
மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவனம், 2025 அக்டோபர் மாதத்தில் கார்கள் விற்பனையில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. பண்டிகைக் கால விற்பனை அதிகரிப்பும், செப்டம்பர் 22 முதல் புதிய ஜி.எஸ்.டி. 2.0 அமலுக்கு வந்ததும் சிறிய மற்றும் காம்பாக்ட் ரக கார்களின் விற்பனையில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியதும் இந்த வளர்ச்சிக்குக் காரணமாக அமைந்துள்ளன.
மொத்தமாக கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 1 லட்சத்து 76 ஆயிரத்து 318 கார்களை விற்பனை செய்து, மாருதி சுஸுகி 37.8% சந்தைப் பங்களிப்புடன் விற்பனைப் பட்டியலில் வழக்கம்போல் முதலிடத்தைப் பிடித்துள்ளது. 2024 அக்டோபர் மாதத்துடன் ஒப்பிடுகையில், இது 10% வளர்ச்சியாகும். அதேபோல், முந்தைய மாதமான 2025 செப்டம்பர் மாதத்தை விட 33% அதிகமாகும்.

2025 அக்டோபரில் இந்தியாவின் அதிகம் விற்பனையான முதல் பத்து கார்களில் ஆறு கார்கள் மாருதி சுஸுகி நிறுவனத்தைச் சேர்ந்தவை ஆகும். டிசையர் (Dzire), எர்டிகா (Ertiga), வேகன்ஆர் (WagonR) போன்ற கார்கள் தொடர்ந்து விற்பனையில் ஏற்றம் கண்டு வருகின்றன. இருப்பினும், ஸ்விஃப்ட் (Swift) மற்றும் கிராண்ட் விட்டாரா (Grand Vitara) கார்களுக்கான தேவை குறைந்துள்ளது.
மாருதி சுஸுகி நிறுவனத்தின் சிறந்த விற்பனை காரான டிசையர், கடந்த மாதம் 20 ஆயிரத்து 791 யூனிட்கள் விற்பனையாகி, கடந்த ஆண்டு அக்டோபரை விட 64% வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. மேலும் இது, 2025 செப்டம்பர் மாதத்தை விட 4% வளர்ச்சி ஆகும். எர்டிகா காரின் விற்பனையும் 2024 அக்டோபர் மற்றும் 2025 செப்டம்பர் மாதங்களை காட்டிலும் அதிகரித்து 20,087 யூனிட்கள் விற்பனை செய்யப்படுள்ளது.

இது இந்த காரின் 2025 செப்டம்பர் மாத விற்பனையை விட 66% அதிகமாகும். இந்த வரிசையில் 3வது இடத்தில் உள்ள வேகன்ஆர் காரின் விற்பனை 2024 அக்டோபரை விட 36%-மும், 2025 செப்டம்பரை விட 23%-மும் அதிகரிப்புடன் 18,970 யூனிட்களாக உயர்ந்துள்ளது. இதற்கடுத்துள்ள ஃபிரான்க்ஸ் விற்பனை அக்டோபர் 2024-ஐ விட 4% அதிகரித்து 17,003 யூனிட்களை எட்டியுள்ளது. 2025 செப்டம்பரை விட இது 24% வளர்ச்சி ஆகும்.
பலேனோ கார் 2024 அக்டோபரை விட 5% அதிகமாகவும், 2025 செப்டம்பரை விட 28% அதிகமாகவும் 16,873 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதேசமயம், ஸ்விஃப்ட் கார் 2024 அக்டோபரை விட 11% சரிந்து 15,542 யூனிட்கள் கடந்த மாதத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. மாருதி சுஸுகி நிறுவனத்தின் வேன் மாடலான ஈக்கோ கடந்த மாதத்தில் 13,537 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இது, 2024 அக்டோபரை விட 16% மற்றும் 2025 செப்டம்பரை விட 35% வளர்ச்சி ஆகும். 2025 செப்டம்பரில் அறிமுகப்படுத்தப்பட்ட விக்டோரிஸ் கடந்த மாதம் 13,496 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. செப்டம்பர் மாத மத்தியில் இருந்துதான் இதன் விற்பனை துவங்கியது. பிரெஸ்ஸா (12,072 யூனிட்கள்) மற்றும் கிராண்ட் விட்டாரா (10,409 யூனிட்கள்) ஆகிய மாருதி சுஸுகி கார்களின் விற்பனை 2024 அக்டோபரை விட குறைந்தாலும், இவை இரண்டும் கடந்த செப்டம்பரை விட நேர்மறையான வளர்ச்சியை பதிவு செய்துள்ளன.
ஆல்டோ காரின் விற்பனை 2024 அக்டோபரை விட 27% சரிவுடன் 6,210 யூனிட்களாகக் குறைந்துள்ளது. இருப்பினும், 5,434 ஆல்டோ கார்கள் விற்பனை செய்யப்பட்ட கடந்த செப்டம்பர் மாதத்தை காட்டிலும் 14% அதிகரித்துள்ளது. மாருதி சுஸுகி இவற்றுடன் கடந்த மாதத்தில் 3,611 எக்ஸ்எல்6 கார்கள் மற்றும் 2,857 எஸ்-பிரெஸ்ஸோ கார்கள், 2,645 இக்னிஸ் கார்கள், 1,322 செலிரியோ கார்கள் மற்றும் 592 ஜிம்னி வாகனங்களையும் விற்பனை செய்துள்ளது.

| No | Maruti | Oct-25 | Oct-24 | Diff | Growth % YoY | % Share Oct 25 |
|---|---|---|---|---|---|---|
| 1 | Dzire | 20,791 | 12,698 | 8,093 | 63.73 | 11.79 |
| 2 | Ertiga | 20,087 | 18,785 | 1,302 | 6.93 | 11.39 |
| 3 | Wagon R | 18,970 | 13,922 | 5,048 | 36.26 | 10.76 |
| 4 | Fronx | 17,003 | 16,419 | 584 | 3.56 | 9.64 |
| 5 | Baleno | 16,873 | 16,082 | 791 | 4.92 | 9.57 |
| 6 | Swift | 15,542 | 17,539 | -1,997 | -11.39 | 8.81 |
| 7 | Eeco | 13,537 | 11,653 | 1,884 | 16.17 | 7.68 |
| 8 | Victoris | 13,496 | 0 | 13,496 | - | 7.65 |
| 9 | Brezza | 12,072 | 16,565 | -4,493 | -27.12 | 6.85 |
| 10 | G Vitara | 10,409 | 14,083 | -3,674 | -26.09 | 5.90 |
| 11 | Alto | 6,210 | 8,548 | -2,338 | -27.35 | 3.52 |
| 12 | XL6 | 3,611 | 3,285 | 326 | 9.92 | 2.05 |
| 13 | S Presso | 2,857 | 2,139 | 718 | 33.57 | 1.62 |
| 14 | Ignis | 2,645 | 2,663 | -18 | -0.68 | 1.50 |
| 15 | Celerio | 1,322 | 3,044 | -1,722 | -56.57 | 0.75 |
| 16 | Jimny | 592 | 1,211 | -619 | -51.11 | 0.34 |
| 17 | Invicto | 301 | 296 | 5 | 1.69 | 0.17 |
| 18 | Ciaz | 0 | 659 | -659 | -100.00 | 0.00 |
| - | Total | 1,76,318 | 1,59,591 | 16,727 | 10.48 | 100.00 |
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் சிறிய அளவிலான காம்பாக்ட் கார்களின் விற்பனை தொடர்ந்து சிறப்பாக உள்ளதால், எதிர்பார்த்தப்படி அதன் மூலம் மாருதி சுஸுகி பெரிதும் வருவாயை ஈட்டியுள்ளது. மேலும், அரீனா விற்பனை நிலையங்கள் மூலம் விற்கப்படும் விக்டோரிஸ் காருக்கு 2 முதல் 3 மாதங்கள் வரை காத்திருப்பு காலம் உள்ள நிலையில், இதற்கான ஆர்டர்கள் அறிமுகம் செய்யப்பட்ட 2 வாரங்களிலேயே 25,000 யூனிட்களை கடந்ததால், மாருதி சுஸுகியின் கார்கள் விற்பனை வரும் மாதங்களில் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம்.


Click it and Unblock the Notifications









