மாருதி சுஸுகியை எந்த கார் கம்பெனியாலும் சமாளிக்க முடியல! மேக்னெட் மாதிரி கஸ்டமர்ஸை இழுக்குது!
2025 செப்டம்பர் மாதத்தில் மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவனம் 1,32,821 கார்களை விற்பனை செய்துள்ளது. இது கடந்த ஆண்டு செப்டம்பருடன் ஒப்பிடுகையில் 8.38% சரிவாகும். இந்த விற்பனை வீழ்ச்சி, மாருதி சுஸுகியின் சந்தைப் பங்கையும் குறைத்துள்ளது. 2024 செப்டம்பர் மாதத்தில் ஒட்டுமொத்த விற்பனையில் 40.4% ஆக இருந்த மாருதி சுஸுகியின் சந்தைப் பங்கு, 2025 செப்டம்பரில் 35.1% ஆக குறைந்துள்ளது, இது 5 சதவீதத்திற்கும் அதிகமான சரிவாகும்.
கடந்த 2025 செப்டம்பர் மாதத்தில், மாருதி சுஸுகி டிசையர் (Dzire) அதிகம் விற்பனையான மாருதி சுஸுகி காராக முதலிடத்தை பிடித்துள்ளது. கடந்த மாதத்தில் 20,038 யூனிட்கள் விற்பனையாகி, கடந்த ஆண்டு செப்டம்பருடன் ஒப்பிடுகையில் 85% வளர்ச்சியை டிசையர் அடைந்துள்ளது. அதேபோல், ஆகஸ்ட் 2025 உடன் ஒப்பிடுகையிலும், மாதாந்திர விற்பனை 21% அதிகரித்துள்ளது.

கடந்த செப்டம்பர் மாதத்தில் மாருதி டிசையர், வேகன்ஆர் (WagonR) மற்றும் எஸ்-பிரஸ்ஸோ (S-Presso) ஆகிய மூன்று கார் மாடல்கள் மட்டுமே ஆண்டு மற்றும் மாதாந்திர அடிப்படையில் வலுவான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன. டிசையருக்கு அடுத்து, இரண்டாம் இடத்தை பிடித்துள்ள ஸ்விஃப்ட் (Swift) காரின் விற்பனை 15,547 யூனிட்களாக சரிந்துள்ளது.
இது கடந்த ஆண்டு செப்டம்பரை விட 4% குறைவு. இருப்பினும், ஆகஸ்ட் 2025 உடன் ஒப்பிடுகையில் மாதாந்திர விற்பனை 26% அதிகரித்துள்ளது. இந்த வரிசையில் 3வது இடத்தை பிடித்துள்ள வேகன்ஆர் காருக்கு கடந்த மாதத்தில் வலுவான தேவை காணப்பட்டது. 15,388 யூனிட்கள் விற்பனையாகி, ஆண்டு மற்றும் மாதாந்திர அடிப்படையில் முறையே 15% மற்றும் 6% வளர்ச்சியை வேகன்ஆர் பதிவு செய்துள்ளது.

இதற்கடுத்த இடத்தில் உள்ள பிரான்க்ஸ் (Fronx) காரின் விற்பனை 13,767 யூனிட்களாக பதிவாகி உள்ளது. இது கடந்த ஆண்டை விட 1% சரிந்தாலும், ஆகஸ்ட் 2025 உடன் ஒப்பிடுகையில் 11% மாதாந்திர வளர்ச்சி ஆகும். இந்த வரிசையில் 5வது இடத்தில் உள்ள பலேனோ காரின் விற்பனை 2024 செப்டம்பரை விட 8% சரிந்து கடந்த செப்டம்பரில் 13,173 யூனிட்களாக பதிவாகி உள்ளது.
இருப்பினும், ஆகஸ்ட் 2025 உடன் ஒப்பிடுகையில் மாதாந்திர விற்பனை 5% அதிகரித்துள்ளது. மாருதி எர்டிகா (Ertiga) மற்றும் விட்டாரா பிரெஸ்ஸா (Vitara Brezza) கார்களின் தேவை கடந்த மாதம் குறைந்துள்ளது. இவை கடந்த மாதத்தில் முறையே 12,115 யூனிட்கள் மற்றும் 10,173 யூனிட்கள் விற்பனையாகி உள்ளன.

இந்த இரண்டு மாடல்களும் ஆண்டு மற்றும் மாதாந்திர அடிப்படையில் இரட்டை இலக்க சதவீதத்தில் சரிவை சந்தித்துள்ளன. ஈக்கோ (Eeco) வேனின் விற்பனை கடந்த மாதம் கடுமையாக சரிந்து 10,035 யூனிட்களாக பதிவாகி உள்ளது. இது கடந்த ஆண்டை விட 16% மற்றும் ஆகஸ்ட் 2025 உடன் ஒப்பிடுகையில் 7% சரிவாகும்.
கிராண்ட் விட்டாரா (Grand Vitara) காரின் விற்பனையும் கடந்த ஆண்டை விட 45% சரிந்து 5,698 யூனிட்களாக குறைந்துள்ளது. ஆல்டோ (Alto) காரின் கடந்த மாத விற்பனை எண்ணிக்கை 5,434 யூனிட்கள் ஆகும். இது கடந்த ஆண்டை விட 37% மற்றும் மாதாந்திர அடிப்படையில் 2% சரிவாகும். புதிய மாருதி விக்டோரிஸ் (Victoris), 4,261 யூனிட் விற்பனையுடன் சந்தையில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

மாருதி சுஸுகியின் லேட்டஸ்ட் காரான இதற்கு இதுவரை 25,000க்கும் மேற்பட்ட முன்பதிவுகள் (Bookings) குவிந்துள்ளன. இதன் காத்திருப்பு காலம் 10 வாரங்கள் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் எக்ஸ்.எல்6 (XL6) காரின் விற்பனை 2,170 யூனிட்களாக கடுமையாக சரிந்துள்ளது. அதேசமயம், எஸ்-பிரஸ்ஸோ (S-Presso) காருக்கு வலுவான தேவை காணப்பட்டது.
எஸ்-பிரஸ்ஸோ காரின் விற்பனை 1,774 யூனிட்களாக பதிவாகி உள்ளது. இது கடந்த ஆண்டை விட 4 சதவீதமும், ஆகஸ்ட் 2025 உடன் ஒப்பிடுகையில் 33 சதவீதமும் மாதாந்திர வளர்ச்சி ஆகும். இக்னிஸ் (1,704 யூனிட்கள்), செலிரியோ (1,033 யூனிட்கள்) மற்றும் ஜிம்னி (296 யூனிட்கள்) ஆகிய மாருதி சுஸுகி கார்களின் விற்பனை ஆண்டு மற்றும் மாதாந்திர அடிப்படையில் சரிந்துள்ளது. இன்விக்டோ காரின் விற்பனையும் 215 யூனிட்களாக குறைந்துள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: சில கார்களில் விற்பனை சரிவு ஏற்பட்ட போதிலும், ஹேட்ச்பேக், செடான், எம்பிவி, மற்றும் எஸ்யூவி மாடல்களைக் கொண்ட வலுவான மற்றும் மாறுபட்ட தயாரிப்பு வரிசையுடன் மாருதி ஒரு தெளிவான சந்தைத் தலைவராக உள்ளது. 2026இல் அறிமுகப்படுத்தப்படவுள்ள அதன் ஹைப்ரிட் கார்கள் மற்றும் எலெக்ட்ரிக் வாகன திட்டங்கள், மாருதியின் அடுத்த வளர்ச்சி கட்டத்தை ஆதரிக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.


Click it and Unblock the Notifications









