மாஸ்டர் ஸ்ட்ரோக்! இனி தகர டப்பான்னு ஒருத்தரும் கிண்டல் பண்ண முடியாது! எமனுக்கே சவால் விட போகும் மாருதி கார்கள்
இந்திய சந்தையில் ஒவ்வொரு மாதமும் லட்சக்கணக்கில் கார்களை விற்பனை செய்யும் ஒரே நிறுவனம் மாருதி சுஸுகி (Maruti Suzuki). மாருதி சுஸுகி அளவிற்கு வேறு எந்த நிறுவனத்தாலும், இங்கு அதிக எண்ணிக்கையில் கார்களை விற்பனை செய்ய முடியவில்லை. பிரம்மாண்டமான சேல்ஸ் மற்றும் சர்வீஸ் நெட்வொர்க், குறைவான விலை, நல்ல மைலேஜ் என இதற்கு ஏராளமான காரணங்களை கூற முடியும். இருப்பினும் மாருதி சுஸுகி நிறுவனம் மீது ஒரு கடுமையான விமர்சனம் நீண்ட காலமாக முன்வைக்கப்பட்டு வருகிறது. மாருதி சுஸுகி நிறுவனத்தின் கார்கள் பாதுகாப்பு இல்லாதவை என்பதுதான் அது.
குறிப்பாக டாடா (Tata) மற்றும் மஹிந்திரா (Mahindra) நிறுவனங்களின் கார்கள், குளோபல் என்சிஏபி (Global NCAP) மற்றும் பாரத் என்சிஏபி (Bharat NCAP) அமைப்பின் மோதல் சோதனைகளில் சாதனைகளை படைக்க தொடங்கிய பிறகு, மாருதி சுஸுகி நிறுவனத்தின் மீதான இந்த விமர்சனம் வேகமெடுத்தது.

எனவே நிலைமையை புரிந்து கொண்ட மாருதி சுஸுகி, கார்களின் பாதுகாப்பை அதிகரிக்கும் விஷயத்தில் முன்னெப்போதும் இல்லாத வகையில் தீவிர கவனம் செலுத்த தொடங்கியது. இதன் விளைவாக குளோபல் என்சிஏபி மோதல் சோதனையில் மாருதி சுஸுகி டிசையர் (Maruti Suzuki Dzire) கார் முழுமையாக 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை (Safety Rating) பெற்றது.
இந்த சாதனையை நிகழ்த்திய மாருதி சுஸுகி நிறுவனத்தின் முதல் கார் இதுதான். ஆனால் மாருதி சுஸுகி நிறுவனம் அத்துடன் நிற்கவில்லை. தொடர்ந்து தனது கார்களில் பாதுகாப்பு வசதிகளை அதிகரித்து கொண்டே வருகிறது. இந்த வரிசையில் மாருதி சுஸுகி செலிரியோ (Maruti Suzuki Celerio) காரின் பாதுகாப்பு வசதி தற்போது அப்டேட் செய்யப்பட்டுள்ளது.

மாருதி சுஸுகி செலிரியோ காரின் அனைத்து வேரியண்ட்களிலும் முன்பு 2 ஏர்பேக்குகள் மட்டுமே வழங்கப்பட்டு வந்தன. ஆனால் இனி ஸ்டாண்டர்டாக 6 ஏர்பேக்குகள் வழங்கப்படும். இது மாருதி சுஸுகி செலிரியோ காரின் ஆரம்ப நிலை வேரியண்ட் முதல் டாப் வேரியண்ட் வரை அனைத்து வேரியண்ட்களுக்கும் பொருந்தும்.
அனைத்து வேரியண்ட்களிலும் ஸ்டாண்டர்டாக 6 ஏர்பேக்குகளை வழங்கியிருப்பது, மாருதி சுஸுகி செலிரியோ கார் பெற்றுள்ள மிக முக்கியமான அப்டேட்களில் ஒன்றாக கருதப்படுகிறது. ஆனால் இந்த 6 ஏர்பேக்குகள் அப்டேட் காரணமாக மாருதி சுஸுகி செலிரியோ காரின் விலை தற்போது அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
இதன்படி ZXi+ AMT வேரியண்ட்டின் விலை 32,500 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. LXi MT, ZXi MT மற்றும் ZXi+ MT வேரியண்ட்களின் விலை தலா 27,500 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. மறுபக்கம் VXi AMT வேரியண்ட்டின் விலை 21 ஆயிரம் ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில் VXi MT மற்றும் VXi CNG MT ஆகிய வேரியண்ட்களின் விலை தலா 16 ஆயிரம் ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.
ஆனால் ZXi AMT வேரியண்ட்டின் விலைகளில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இனிமேல் மாருதி சுஸுகி செலிரியோ காரின் ஆரம்ப நிலை வேரியண்ட் 5.64 லட்ச ரூபாய் என்ற விலையிலும், டாப் வேரியண்ட் 7.37 லட்ச ரூபாய் என்ற விலையிலும் விற்பனை செய்யப்படும். இவை இந்த காரின் புதிய எக்ஸ்-ஷோரூம் விலைகள் (Ex-showroom Prices) ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: மாருதி சுஸுகி செலிரியோ, இந்திய சந்தையில் கிடைக்கும் அதிக மைலேஜ் வழங்க கூடிய கார்களில் ஒன்றாகும். இதன் சிஎன்ஜி வேரியண்ட் ஒரு கிலோவிற்கு 34.43 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்க கூடியதாக உள்ளது. இப்படிப்பட்ட காரின் பாதுகாப்பை அதிகரித்திருப்பது நல்ல விஷயம்.
இதன் மூலம் இந்திய சந்தையில் ஸ்டாண்டர்டாக 6 ஏர்பேக்குகள் உடன் கிடைக்க கூடிய விலை குறைவான கார்களில் ஒன்றாக மாருதி சுஸுகி செலிரியோ மாறியுள்ளது. தற்போது மைலேஜ் மற்றும் பாதுகாப்பு என வாடிக்கையாளர்களின் 2 முக்கியமான தேவைகளை மாருதி சுஸுகி செலிரியோ பூர்த்தி செய்கிறது.
எனவே இனி வரும் காலங்களில் மாருதி சுஸுகி செலிரியோ காரின் விற்பனை எண்ணிக்கை உயரலாம் என நாங்கள் கருதுகிறோம். அத்துடன் செலிரியோவை தொடர்ந்து, மாருதி சுஸுகி நிறுவனத்தின் மற்ற கார்களிலும் ஒன்றன் பின் ஒன்றாக ஸ்டாண்டர்டாக 6 ஏர்பேக்குகள் வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் கருதுகிறது.


Click it and Unblock the Notifications








