மாருதி இந்த முடிவை எடுப்பதும், தலையில மண்ணை போட்டு கொள்வதும் ஒன்னு! ஏப்ரல்ல இருந்து இந்த கார் கிடைக்காதா!!!
இந்தியாவில் மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவனம் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கும் ஒரே ஒரு செடான் ரக கார் மாடலாக சியாஸ் (Ciaz) இருக்கின்றது. இது ஓர் மிட்சைஸ் செடான் (Mid-Size Sedan) வகை கார் மாடல் ஆகும். இந்த கார் மாடலையே மாருதி சுஸுகி நிறுவனம் விற்பனையில் இருந்து அகற்ற இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த தகவல் செடான் கார் விரும்பிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தும் வகையில் அமைந்திருக்கின்றது.
இந்த ஆண்டு ஏப்ரல் மாதமே இந்த கார் மாடல் விற்பனையில் இருக்கும் கடைசி மாதம் என கூறப்படுகின்றது. ஆனால், இதுபற்றிய அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை. இருப்பினும், வருகின்ற மார்ச் மாத இறுதியில் இந்த காரின் உற்பத்தி நிறுத்தப்படும் என்கிற தகவலும் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

இந்திய சந்தை முழுக்க முழுக்க எஸ்யூவி கார்களுக்கான மார்கெட்டாக மாறத் தொடங்கி இருக்கின்றது. இருப்பினும், கொஞ்சம் செடான் மற்றும் ஹேட்ச் பேக் கார் விரும்பிகள் இந்தியாவில் இருக்கதான் செய்கின்றனர். இத்தகையோரின் தேவையை பூர்த்தி செய்யும் விதமாகவே மாருதி சுஸுகி நிறுவனம் சியாஸ் கார் மாடலை மாருதி சுஸுகி விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது.
ஆனால், இது கொஞ்சம் காலம் வரை மட்டுமே விற்பனைக்குக் கிடைக்கும் என்பது அதிர்ச்சியளிக்கும் விதமாக அமைந்து இருக்கின்றது. இதன் வெளியேற்றத்திற்கு பின்னால் என்ன காரணம் இருக்கும் என்பதே பலரின் கேள்வியாக மாறி இருக்கின்றது. இதற்கு பின்னாலும், எஸ்யூவி கார்களே இருப்பதாகக் கூறப்படுகின்றது.

அதாவது, சந்தையின் தேவையாக எஸ்யூவி கார்கள் மாறி வருவதைக் காரணம் காட்டியே சியாஸ் கார் மாடலை விற்பனையில் இருந்து வெளியேற்ற மாருதி சுஸுகி திட்டமிட்டு இருப்பதாகக் கூறப்படுகின்றது. இந்த கார் மாடல் சந்தையை விட்டு வெளியேறும் எனில் போட்டியாளர்களுக்கு குளிர்விட்டு போகக் கூடும்.
சியாஸின் சந்தை இருப்பு ஃபோக்ஸ்வேகன் விர்சுஸ், ஸ்கோடா ஸ்லேவியா மற்றும் ஹூண்டாய் வெர்னா ஆகியவற்றிற்கு போட்டியாக உள்ளது. இவர்களுடனான போட்டியில் இருந்தே விடை பெற இருக்கின்றது சியாஸ். சியாஸ் ஓர் பிரீமியம் அம்சங்கள் நிறைந்த செடான் ரக கார் மாடல் ஆகும்.

இந்த காரை இந்தியாவில் 2014 ஆம் ஆண்டிலேயே முதல் முறையாக மாருதி சுஸுகி விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. அப்போது செடான் ரக கார்களுக்கான தேவை சற்றே அதிகமாக இருந்தது. ஆனால், இப்போது நிலைமை முற்றிலுமாக மாறியிருக்கின்றது. மாதத்திற்கு 600-500 யூனிட்டுகள் விற்பனையாகுவதே பெரிய விஷயமாக மாறியிருக்கின்றது.
இத்தகைய சூழலும் சியாஸ் செடான் காரின் வெளியேற்றத்திற்கு ஓர் காரணமாக அமைந்து இருக்கின்றது. இந்த கார் இந்தியாவில் ரூ. 9.50 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது சென்னை எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். ஆன்ரோடில் இதன் விலை ரூ. 11 லட்சத்தை நெருங்கும் என்பது கவனிக்கத்தகுந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் செடான் கார்கள் மார்க்கெட் கொஞ்சம் கொஞ்சமாக மூழ்கிக் கொண்டிருக்கின்றது. இந்த நிலையிலேயே மூழ்கிக் கொண்டிருக்கும் மார்க்கெட்டை கை கழுவும் விதமாக மாருதி சுஸுகி நிறுவனம் இந்த சியாஸ் கார் மாடலை வெளியேற்ற திட்டமிட்டு இருப்பதாகக் கூறப்படுகின்றது. விரைவிலேயே இதுபற்றிய அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications









