வெறும் 8 நாளில் 1.65 லட்சம் கார்களை வித்து தள்ளிய மாருதி! ராத்திரி, பகல் பாக்காம வேலை செஞ்சுகிட்டு இருக்காங்க
இந்தியாவில் கடந்த செப்டம்பர் 22ம் தேதியில் இருந்து, நவராத்தி (Navaratri) பண்டிகை தொடங்கியது. அத்துடன் அன்றைய தினத்தில் இருந்துதான் ஜிஎஸ்டி (GST) வரியும் குறைக்கப்பட்டது. இதன் காரணமாக ஏராளமான பொருட்களின் விலை தற்போது அதிரடியாக குறைந்துள்ளது. இதில், கார்கள் மற்றும் டூவீலர்களும் அடங்கும்.
இதன் காரணமாக இந்தியாவில் தற்போது கார்கள் மற்றும் டூவீலர்களின் விற்பனை வேகமாக உயர்ந்து வருகிறது. எனவே வாகன உற்பத்தி நிறுவனங்கள் மகிழ்ச்சியில் உள்ளன. குறிப்பாக இந்தியாவின் நம்பர்-1 கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுஸுகி (Maruti Suzuki) மிகப்பெரிய மகிழ்ச்சியில் இருக்கிறது.

இது குறித்து மாருதி சுஸுகி நிறுவனத்தின் மார்க்கெட்டிங் மற்றும் சேல்ஸ் பிரிவின் மூத்த நிர்வாக அதிகாரியான பார்த்தோ பானர்ஜி (Partho Banerjee) கூறுகையில், ''தற்போதைய பண்டிகை காலத்தில் உருவாகியுள்ள 'டிமாண்ட்' முன் எப்போதும் இல்லாதது'' என்றார். இது குறித்து ஏஎன்ஐ செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த செய்தியில் பார்த்தோ பானர்ஜி மேலும் கூறியிருப்பது பின்வருமாறு: நவராத்திரி பண்டிகையின் முதல் 8 நாட்களில் மட்டும் 1.65 லட்சம் கார்களை, நாங்கள் வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்துள்ளோம். அத்துடன் எங்கள் கார்களுக்கு ஏராளமான முன்பதிவுகளும் (Bookings) குவிந்து கொண்டுள்ளன. நடப்பு பண்டிகை காலத்தில் மட்டும் 2.50 லட்சம் முன்பதிவுகள் குவிந்துள்ளன. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ஆனால் கடந்த 2024ம் ஆண்டின் நவராத்திரி பண்டிகையின்போது, மாருதி சுஸுகி நிறுவனம் ஒட்டுமொத்தமாகவே சுமார் 1 லட்சம் கார்களை மட்டுமே டெலிவரி செய்திருந்தது. இது தற்போது அப்படியே கிட்டத்தட்ட இரட்டிப்பாக உயர்ந்துள்ளது. இதற்கு ஜிஎஸ்டி வரி குறைப்புதான் காரணம் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை.
இது குறித்து பார்த்தோ பானர்ஜி மேலும் கூறுகையில், ''தற்போது டிமாண்ட் அதிக அளவில் உள்ளதால், வாடிக்கையாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக, எங்கள் நிறுவனத்தின் கார் தயாரிப்பு குழு, ஞாயிற்று கிழமைகளிலும், விடுமுறை நாட்களிலும் வேலை செய்து வருகிறது. தற்போது எங்கள் கவனம் எல்லாம், வாடிக்கையாளர்களுக்கு கார்களை முடிந்த வரை வேகமாக டெலிவரி செய்வதில்தான் உள்ளது.
எங்கள் டீலர் பார்ட்னர்களும், கார்களை வாடிக்கையாளர்களுக்கு விரைவாக டெலிவரி செய்வதற்காக, ஷோரூம்களில் இரவு, பகல் பார்க்காமல் தற்போது தீவிரமாக உழைத்து வருகின்றனர். அத்துடன் எங்களின் ஃபைனான்ஸ் பார்ட்னர்களும், முடிந்த வரை விரைவாக வாடிக்கையாளர்களுக்கு லோன்களை வழங்குவதில் தீவிரம் காட்டி கொண்டுள்ளனர்'' என்றார்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: பொதுவாக பண்டிகை காலத்தில் இந்தியாவில் கார்களின் விற்பனை மிகவும் அதிகமாக இருக்கும். தற்போது பண்டிகை காலத்தில் ஜிஎஸ்டி வரியும் வேறு மத்திய அரசால் அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் கார் விற்பனை தற்போது புதிய உச்சங்களை எட்டி வருகிறது.
மாருதி சுஸுகி நிறுவனத்தின் கார்கள் மட்டுமல்லாது, இன்னும் பல்வேறு கார் நிறுவனங்களின் விற்பனையும் இந்தியாவில் தற்போது கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. ஜிஎஸ்டி வரி குறைப்பின் பலன்கள் உடன் சேர்த்து, பண்டிகை கால தள்ளுபடி போன்ற சலுகைகளையும் பெறலாம் என்பதால், இந்தியாவின் நடுத்தர வர்க்க மக்கள் புதிய கார்களை வாங்குவதற்கு இது மிகவும் சரியான தருணம் என்பது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து.


Click it and Unblock the Notifications








