34 கிமீ மைலேஜ் தரும் விலை குறைவான மாருதி கார் மார்க்கெட்டையே தலை கீழா புரட்டி போட்டுட்டு இருக்கு!
உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளின் சந்தைகளிலும் தற்போது செடான் கார்களின் (Sedan Cars) விற்பனை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. இதற்கு எஸ்யூவி கார்கள் (SUV Cars) மற்றும் க்ராஸ்ஓவர் கார்களின் (Crossover Cars) எழுச்சியே காரணம். செடான் கார்கள் வாடிக்கையாளர்களுக்கு சலிப்பை ஏற்படுத்த தொடங்கி விட்டன. மாறாக எஸ்யூவி மற்றும் க்ராஸ்ஓவர் கார்கள் கவர்ச்சிகரமான டிசைனில் இருக்கின்றன. அத்துடன் அவை நடைமுறை பயன்பாட்டிற்கு ஏற்றவையாகவும் திகழ்கின்றன. எனவே வாடிக்கையாளர்களின் கவனம் எஸ்யூவி மற்றும் க்ராஸ்ஓவர் கார்களின் மீது குவிய தொடங்கி விட்டன.
உலகில் செடான் ரக கார்கள் வீழ்ச்சியை சந்தித்து கொண்டுள்ள சந்தைகளில் இந்தியாவும் ஒன்று. ஆனால் இந்தியாவில் ஒரே ஒரு செடான் கார் மட்டும் ஒவ்வொரு மாதமும் பிரம்மாண்டமான விற்பனை எண்ணிக்கையை தவறாமல் பதிவு செய்து வருகிறது. அது மாருதி சுஸுகி டிசையர் (Maruti Suzuki Dzire) ஆகும்.

இந்த வரிசையில் நடப்பு 2025ம் ஆண்டின் ஏப்ரல் மாதமும் மாருதி சுஸுகி டிசையர் கார் பிரம்மாண்டமான விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்துள்ளது. தற்போது வெளியாகியுள்ள மாருதி சுஸுகி டிசையர் காரின் சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) மூலமாக இது நமக்கு தெரிய வந்துள்ளது.
மாருதி சுஸுகி நிறுவனம் நடப்பு 2025ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 16,996 டிசையர் கார்களை விற்பனை செய்து அசத்தியுள்ளது. இதற்கு முந்தைய மார்ச் மாதம் 15,460 மாருதி சுஸுகி டிசையர் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்தன. அதாவது கடந்த மார்ச் மாதத்துடன் ஒப்பிடும்போது, 1,536 மாருதி சுஸுகி டிசையர் கார்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன.

இந்த சிறப்பான வளர்ச்சியின் மூலமாக இந்திய சந்தையில் நடப்பு 2025ம் ஆண்டு ஏப்ரல் மாதம் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட டாப் 10 கார்களின் (Top 10 Cars) பட்டியலில், மாருதி சுஸுகி டிசையர் 2வது இடத்தை பிடித்துள்ளது. முதல் இடத்தில் இருப்பது எஸ்யூவி ரகத்தை சேர்ந்த ஹூண்டாய் க்ரெட்டா (Hyundai Creta) ஆகும்.
இங்கே குறிப்பிட வேண்டிய மற்றொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒரே ஒரு செடான் ரக கார் என்றால், அது மாருதி சுஸுகி டிசையர் மட்டுமே. இந்த பட்டியலில் எஸ்யூவி ரகத்தை சேர்ந்த 5 கார்கள் இடம்பெற்றுள்ளன. அவை ஹூண்டாய் க்ரெட்டா, மாருதி சுஸுகி பிரெஸ்ஸா, மஹிந்திரா ஸ்கார்பியோ, டாடா நெக்ஸான் மற்றும் மாருதி சுஸுகி ஃப்ரான்ஸ் ஆகியவை ஆகும்.
இதற்கு அடுத்தபடியாக ஹேட்ச்பேக் ரகத்தை சேர்ந்த 3 கார்களுக்கு இந்த பட்டியலில் இடம் கிடைத்துள்ளது. அவை மாருதி சுஸுகி ஸ்விஃப்ட், மாருதி சுஸுகி வேகன் ஆர் மற்றும் மாருதி சுஸுகி பலேனோ ஆகியவை ஆகும். அத்துடன் எம்பிவி ரகத்தை சேர்ந்த ஒரு காரும் இந்த பட்டியலில் இடம் பிடித்துள்ளது. அது மாருதி சுஸுகி எர்டிகா ஆகும்.
இவற்றுடன் செடான் ரகத்தை சேர்ந்த ஒரே ஒரு காராக மாருதி சுஸுகி டிசையரும், இந்த பட்டியலில் இடம்பிடித்துள்ளது. மாருதி சுஸுக டிசையர் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை வெறும் 6.84 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. அதே நேரத்தில் டாப் வேரியண்ட்டின் விலையோ 10.19 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.
அத்துடன் மாருதி சுஸுகி டிசையர் காரின் பெட்ரோல்-மேனுவல் வேரியண்ட்கள் ஒரு லிட்டருக்கு 24.79 கிலோ மீட்டர் மைலேஜையும், பெட்ரோல்-ஆட்டோமேட்டிக் வேரியண்ட்கள் ஒரு லிட்டருக்கு 25.71 கிலோ மீட்டர் மைலேஜையும் வழங்குகின்றன. ஆனால் இந்த காரின் சிஎன்ஜி-மேனுவல் வேரியண்ட்கள் ஒரு கிலோவிற்கு 33.73 கிலோ மீட்டர் மைலேஜை வாரி வழங்குகின்றன. இவை மாருதி சுஸுகியின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள மைலேஜ் (Mileage) என்பது குறிப்பிடத்தக்கது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: மாருதி சுஸுகி டிசையர் காருக்கு செய்யப்பட்டுள்ள சரியான விலை நிர்ணயம் மற்றும் அதன் சிறப்பான மைலேஜ் ஆகியவைதான், அதன் வெற்றிக்கு மிகவும் முக்கியமான காரணங்கள் என நாங்கள் கருதுகிறோம். வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளதால், வரும் மாதங்களிலும், மாருதி சுஸுகி டிசையர் காரின் வெற்றி நடை தொடரலாம் என்பது எங்களது கருத்து.


Click it and Unblock the Notifications








